கனிமக் கொள்ளையின் மறு பக்கம்


சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அர”க்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய நிறுவனங்களின் மீது, ஆமை வேகத்தில், வேண்டா வெறுப்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை துவங்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆதாரம், முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம், கடந்த மே மாதம் கொடுத்த ஆய்வு அறிக்கை. 
கனிமக் கொள்ளையர்களின்அரசியல்- பணப் பலம் கருதி, இது கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள சில தகவல்கள்,
சுரன்
 ஊடகங்களில் வெளிவந்த பின் தான் நடவடிக்கை துவங்கப் பட்டது. இது போன்ற விடயங்களில்,ஆரவாரமாக துவங்கும் விசாரணை, கொஞ்ச காலத்தில்வீரியம் இழந்து காணாமல் போய்விடும்.வைகுண்டராஜன் கனிம மோசடி என்ன ஆனது என்பது இன்று யாருக்கும் தெரியாது.அரசியலில் இது சாதாரணமப்பா! ஆச்சரியம் இல்லை. 
எனவே சகாயம் அறிக்கை,அதன் பின்னணி நாம் தெரிந்து வைத்துக்கொண்டால் இந்த கனிமக் கொள்ளையில் அரசியல்  விளையாட்டு-பண ஆள்பலம் .அவர்கள் இந்த தமிழ் நாட்டின் எதிர்காலத்தையே அரசியல் துணையுடன் அழித்து பணம் கொழித்து வருவதை அறிந்து நாம் பெருமூச்சுகள் விட முடியும்.
இது தின மலர் நாளிதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில்  தர்ப்படுகிறது.
சுரன்


 ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
" தினபூமி நாளிதழின் ஆசிரியர், தன் புகார் மனுவில், ஆறு மாதங்களில் சுமார், 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப் பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால், இப்புகார் வருவதற்கு முன்பாக, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய, என் தலைமையில், துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு, டிச., 14 மற்றும் 24; இந்த ஆண்டு ஜன., 28 மற்றும் பிப்., 3 ஆகிய தேதிகளில், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. அப்போது, முறைகேடாக கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பிடிபடவில்லை. தினபூமி ஆசிரியர் குறிப்பிட்டப்படி, ஆறு மாதங்களில், 1,650 கோடி ரூபாய் மதிப்பு கிரானைட் கடத்தப் பட்டு உள்ளதாகக் கூறப்பட்ட தகவல் சரியானதாக இல்லை. ஏனெனில், இந்த கடத்தல் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருவது விசாரணையில் தெரிய வருகிறது.

 இருப்பினும், கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க செய்ததில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி, மேலூர் தாசில்தாரால் கிரானைட் கல் கடத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நாளிதழ் ஆசிரியரின் புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களில் ஒருவரான துரைதயாநிதி மற்றும் சு.நாகராஜிற்கு சொந்தமான, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், கீழவளவு கிராமத்தில் வழங்கப் பட்ட குத்தகை உரிமத்தை தவறாக பயன்படுத்தி, அதே கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு குத்தகை உரிமம் வழங்கப் பட்ட இடத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும், நீர்நிலை, புறம்போக்குகளான ஊரணி, கண்மாய், பொதுப்பாதை, பாறை வாய்க்கால், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
சுரன்

புகாரில் கொடுக்கப் பட்ட தொகை சரியாக வராததால், ஆக்கிரமிப்பு என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அப்போது, அது மட்டுமின்றி மேலும் பல கொள்ளைகள் அம்பலப் பட்டன. இது குறித்து, சகாயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது: இந்த இடங்களில் (புகாரில் குறிப்பிடப் பட்டவை), ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, உடனே அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது. தகவல்களின் அடிப்படையில், கீழவளவு மற்றும் கீழையூரில் அமைந்து உள்ள ஒலிம்பஸ், சிந்து மற்றும் பி.ஆர்.பி., கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில், அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டது கண்டறியப் பட்டு உள்ளது. ஆய்வில், இந்த மூன்று குவாரிகளில் மட்டும், உரிம இழப்பாக, 58.38 லட்சம் ரூபாய், கனிம மதிப்பு இழப்பாக, 13.52 கோடி ரூபாயும், உரிமத்திற்கான அபராதத் தொகை பத்து மடங்காக, 9.97 கோடி ரூபாயும் என, 23.42 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறியப் படுகிறது.

இந்த மூன்று குவாரிகளில் ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பு போல, மீதமுள்ள, 91 குவாரிகளிலும் வெட்டி எடுக்கப் பட்டு உள்ள கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால், இது போல், பல நூறு கோடி (ரூபாய்) இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் கற்கள் இருப்பு வைக்கும் இடத்தில், டாமின் குவாரிகளில் இருந்து, சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள, 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப் பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. 
மேலும், ஆய்வு செய்த குவாரிகள் தவிர, புகார் மனுவுடன் வந்த மேலூர், கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல், விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு, 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.


கிரானைட் தொழிலால், இயற்கை வளங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் அழிக்கப் படுவதாக, பல ஆண்டுகளாக புகார்கள் வந்தும், முடிவு எடுக்க வேண்டிய அனைவரும் நன்கு "கவனிக்கப்பட்டதால்', அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து, அறிக்கையில், சகாயம் குறிப்பிட்டு உள்ளதாவது: புகார்கள் வருவதற்கு முன், அதிகாரிகள் ஆய்வு செய்து பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு முகாந்திரம் உள்ளது கண்டறியப் பட்டது. தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி, வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை கலெக்டர், கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன், கீழவளவில் உள்ள ஒலிம்பஸ் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் நானே தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்திருந்தது உறுதி செய்யப் பட்டது. அதே போல், கீழையூர் கண்மாயில், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தால் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் எடுக்கப்பட்டு, கண்மாய் நிர்மூலமாக்கப் பட்டதை நேரில் பார்த்தறிந்தேன். இதை தடுத்து நிறுத்தாத வருவாய், கனிம வள அலுவலர்களை கடிந்து கொண்டேன். தீவிரமாக கண்காணிக்குமாறும், தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிட்டேன். மேலும், மே மாதம் 17ம் தேதியும் ஆய்வு நடத்தப் பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் வெட்டப் பட்டு, அப்புறப்படுத்தப் படுவதை உறுதி செய்தனர். ஆய்வு நடத்தியவர்கள் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் இல்லை என்பதால், துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இருந்தாலும், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பது அறிய முடிந்தது.

சுரன்
 மதுரை மாவட்டத்தில், பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற குறிப்பிடத்தக்க கிராமங்களில், கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப் பட்டு உள்ளன. இதன் விளைவாக, இந்த கிராமங்களில் வேளாண்மை நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப் பட்டு உள்ளது. மக்களும், கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நடவடிக்கைகளை குறைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர். இன்னொரு புறம், பி.ஆர்.பி.,- பி.ஆர்.எஸ்., போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக அசுரத்தனமாக பணப் பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளன. இது குறித்த புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர் பயத்தினாலோ அல்லது நிதி லாபம் பெறும் நோக்கத்திலோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை. கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பி.ஆர்.பி.,போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும், ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் அவர்களிடம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.


இந்த கொள்ளையை கண்டும், காணாமல் மட்டும் இல்லாமல், கனிமவளத் துறை அதிகாரிகள், சகாயத்தின் விசாரணைக்கு தடங்கலாகவும் இருந்து உள்ளனர்.

இதுகுறித்து, அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளதாவது: இந்த முறைகேடுகள் குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்க எச்சரித்தபோது கனிமவளத் துறை அலுவலரிடம் இருந்து முழுமையான தகவல்கள் பெறமுடியவில்லை. தணிக்கைக்குச் செல்ல முயற்சிக்கும்போது, முன்கூட்டியே கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் தகவல் தெரிவிக்கும் நிலையும் இருந்தது. இருப்பினும், பல்லாயிரக்கணக்கான கிராமத்து மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பிரமிப்பூட்டும் பெரும் பலனை அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த அறிக்கை, கடந்த மே மாதம், 19ம் தேதி, தொழில்துறை செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சகாயம் திடீரென கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக மாற்றப் பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா எட்டு புதிய குழுக்களை அமைத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து ஆய்வை துவக்கி உள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, மதுரையை சுற்றி உள்ள, 90க்கும்மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பி., கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. நேற்று, ரங்கசாமி புரத்தில் சட்ட விரோதமாக இயங்கிய கிரானைட் குவாரியின் நடவடிக்கைகள் முடக்கப் பட்டு உள்ளன. ஒலிம்பஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளும் முடக்கப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதே வேகத்தில் நீதி வழங்கப்படுமா? மதுரையில் கிரானைட் எடுப்பது நிறுத்தப்படுமா? என்பதை, தமிழக மக்கள் கவனிக்க வேண்டும்.

 தனது அறிக்கையில், சகாயம், டாமின் பற்றி மேலும் குறிப்பிட்டதாவது: அரசு கனிம வள நிறுவனமான டாமின், சில லட்சங்களே சம்பாதிக்கிறது. இதை சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, பல்லாயிரம் கோடிகளாகும். டாமின் நிறுவன கிரானைட் சுரங்கங்களை, அந்த நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்புள்ளது என்பது உண்மை. மேலும், டாமின் குவாரியில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக இயந்திரங்கள் உதவியுடன் கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி, தனியார் நிலங்களில் எடுத்து வைக்கப்படுகிறது. பின், வாகனங்களில் அவற்றை கொண்டு சென்று தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.


இது குறித்து, வழக்கமான பதிலையே தொழில் துறை அதிகாரிகள் வழங்கினர்: "டாமின்' நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் இருந்தும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கிரானைட்டை வெட்டி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான அளவு குறித்து, தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின் போதே, கிரானைட் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். "டாமின்' தொழில் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயந்திரங்கள் மூலம், தங்கள் குவாரிகளில் இருந்து கிரானைட் அகற்றப்படும் போது, அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? 
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என்பது, தற்போது கேள்வியாக உள்ளது.இது போன்ற அறிக்கையை கொடுத்ததற்காகவே சகாயம் மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இக்கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் என்பது கற்பனையில் கூட நடக்காத விடயம்.

தின பூமி ஆசிரியர் அழகிரி க்கு எதிராக மனு கொடுக்கப்போய் அம்மாவின் ஆசியுடன் தொழில் நடத்தும் பழனிச்சாமியும் மாட்டிக்கொண்டார்.
இனி விசாரணையும்,நடவடிக்கையும் அவ்ளோதான்.

மாட்டியவர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாயிற்றே.[எந்த கட்சி ஆண்டாலும் இவர்கள் மட்டும் வேண்டியவர்களாகி விடுவது வேறு விடயம்]


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?