2013 தமிழகம் ஒளிருமா?

நாம் மீண்டும் ,மீண்டும் மின் வெட்டைப்பற்றியே பேச வேண்டியுள்ளது.காரணம் பதிவிட அமர்ந்தால் மின்வெட்டுதான் வந்துமுதலில் நிற்கிறது.
இதுவரை மின் உற்பத்திக்கு சிறு துரும்பை கூட அசைக்காமல் தொலைக்காட்சியில் 2013 இல் மின் வெட்டு சரியாகிவிடும் என்று முதல்வர் வாய்வலிக்காத அளவில் சொல்லி விட்டார்.

அவர் பேசி முடிக்கும்வரை மட்டும்தான் மின்வெட்டு எங்கள் பகுதியில் இல்லை
[அந்த நேரம் வேறு எதையாவது பார்த்து தொலைத்திருக்கலாம்.}
மக்களின் மின்பரிதவிப்பை 2013 நிறைவேற்றுமா?
இதோ சி.ஐடியு மின் தொழிலாளர் அமைப்பு சேர்ந்தவர் சொல்லுகிறார்.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று தமிழக முதல்வர், மின்சார பற்றாக்குறை யினால் மக்கள் அவதிப்படுவதற்கு தனது ஆட்சி பொறுப்பல்ல என்று அறிவித்ததுடன், மின்சாரம் இல்லாமல் மக்கள் படும் துன்பங் களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

சட்டமன்ற நிகழ்விலும் ஓரடி முன்னே சென்று லட்சம் முறை மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு வருந்துவதாகத் தெரிவித்தார். வருத்தத்தினால் மின்சாரம் வரும் என்றால் மக்கள் மகிழ்ச்சி அடை வார்கள்.

மக்கள் அவதிப்படுவது தொடர்வது நிற்கப் போவதில்லை. முதல்வர் ஜெயலலிதா அவர் கள் காலத்தை கடந்து கனவு காண்கின்றார் என்றே சொல்லவேண்டும்.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளி யிட்ட அறிக்கையில், இந்த வருடம் 2012 ஜூன் மாதத்தில் 1865 மெகாவாட் மின்சாரம் மக்களுக்கு கிடைத்துவிடும் என்று மின்சார மின்றி அவதிப்படும் மக்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த வருடம் மின்சாரப்பற்றாக்குறை கடுமையாகி விட்டது. இரண்டு மணிநேர மின்வெட்டு பதினான்கு மணிநேரமாக ஆனது.
suran

தற்போது விடுத்த அறிக்கையில் சற்று நிதானத்துடன் மக்களை 2013 ஆம் ஆண்டு வரை பொறுத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஊடகங்களின் வாயை அடக்கும் ஏற்பாடாகும்.

மின்சாரமின்றி வாடும் மக்களுக்கு சில மாற்று அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு ஏதும் இல்லை.

அதற்கு மாறாக, தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை மின்சார உபரி மாநில மாக வைத்துவிட்டு சென்றேன்; அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக மின்பற்றாக்குறையை உண்டாக்கியதோடு மட்டுமல்ல மின்வாரியத் தையும் திவாலாக்கிவிட்டது. மக்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கினாலும் அதைக் கொண்டு வருவதற் கான மின்பாதையைக் கூட திமுக ஆதரிக் கும் மத்திய அரசு அமைத்து தரவில்லை; மின் சாரம் வாங்குவதற்கான நீண்டகால ஒப்பந் தங்கள் போட்டு இருந்தால் மின்பற்றாக் குறையை சமாளித்து இருக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு கலைஞர் அவர்களும் முந்தைய முதல்வர் என்ற முறையில் பதில் அளித் துள்ளார்.

திமுக, அதிமுக தான் மாறி மாறி தமிழ கத்தை ஆட்சி செய்துள்ளன. தமிழகத்தின் மின் பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்படு வதற்கு இருவருமே பொறுப்பாவார்கள். அதற்கு ஓர் உதாரணம், தமிழக அனல்மின் நிலை யங்களை கலைஞர் அடிக்கல் நாட்டியிருப் பார். அதிமுக ஆட்சி சார்பில் எம்ஜிஆர் அவர் களோ, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களோ திறந்து வைத்திருப்பார்.


suran




இதற்கு காரணம் ஒவ்வொரு ஐந்தாண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு அனல்மின்நிலையம் அமைத்திட ஐந்து முதல் ஆறு ஆண்டு காலம் வரை ஆகும். தமிழகம் எப்பொழுதும் உபரி மாநிலமாக இருந்ததில்லை. மின்சாரப் பற்றாக்குறை இருந்த காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மின்வெட்டு என்பது இருந்துள்ளது என்பதை வாரியத்தின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும்.

இதை விவசாயிகள் அனுபவித்திருப் பார்கள். விவசாய பம்புசெட்டுகளுக்கு இரவு 10 மணிக்குப்பின் தான் மின்சாரம் வழங்கப்படும். கிராமங்களில் உள்ள வீடுகளில் இரவு பத்து மணிக்கு முன்னதாக குழல்விளக்குகள் எரியாது. தெருவிளக்குகள் மினுக்மினுக் என்று எரியும்.

ஆண்டுதோறும் நாம் கேரள மாநிலத்தி லிருந்து மின்சாரத்தை கொடுக்கல் வாங்கல் முறையில் வாங்கி வந்தோம்.

மின்தேவையை சமாளித்திட மின்வாரி யம் முன் கூட்டியே அரசுக்கு பல திட்டங் களுக்கான ஆலோசனைகளை முன் வைத் துள்ளது.

வடசென்னை அனல் மின்திட்டத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி இயந்திரம் ஐந்து எண்ணிக்கையில் அமைத்திட நிதி ஒதுக்கீடு உட்பட மத்திய அரசின் அனுமதியும் 1983 ஆம் ஆண்டிலேயே பெற்றுவிட்ட பின்னாலும் அதை அமல்படுத்துவதற்கு 24 ஆண்டுகள் (2007 ஆம் ஆண்டு) ஆயிற்று என்றால் இதற்கு என்ன சொல்வது?

திட்டங்கள் எல்லாம் தயார். ஆனால் அதை அமல்படுத்துவதில் தான் கோளாறு என்றால் ஆட்சியில் இருந்தவர்கள் தானே பதில் சொல்லக்கடமைப்பட்டவர்கள்.

இதே காலத்தில் மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசானது உற்பத்திக்கு என்று தனி யாக கழகத்தை உருவாக்கி மின் உற்பத்திக்கு என்று விசேச கவனம் செலுத் திய காரணத் தினால்தான் மின் உற்பத்தி என்பது தேவை யை சமாளிக்கும் அளவிற்கு இருந்துள்ளதை சொல்லாமல் இருக்க முடியாது.

மேட்டூர் அனல் மின்நிலையம் 840 மெகா வாட் மின்திறனுடன் 1987 ஆம் ஆண்டு அமைந்ததற்கு பின்னால் 8 ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டில்தான் வட சென்னை அனல் மின்நிலை யம் 630 மெகா வாட் மின்திறனுடன் அமைந்தது.

அதற்கு பின்னால் 7 தனியார் மின் நிலை யங்கள் 1180 மெகாவாட் மின்திறனுடன் 2000 ஆம் ஆண்டில் அமைந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு வரையில் 578 மெகாவாட் தான் அடுத்த கூடுதல் உற்பத்தி என்பது இருந்தது.

ஆனால் இதே காலத்தில் மின் நுகர் வோர்கள் எண்ணிக்கையையே எடுத்துக் கொள்வோம். 1996ஆம் ஆண்டு 108 லட்சமாக இருந்த மின்நுகர்வோர் எண்ணிக்கை 2000த் தில் 138 லட்சமாகவும் 2012ல் 232 லட்சமாக வும் உயர்ந்துள்ளது.

இவை அல்லாமல் தமிழகத்தில் கிட்டத் தட்ட 1869 எண்ணிக்கையிலான பன்னாட்டு கம்பெனிகளும் 42க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உள்ளன. புதிய தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசுதான் அனுமதி அளிக்கிறது. அதற்கான மின்சாரத் தை தருவதாக தமிழக அரசு அதற்கான ஒப்பந்தத்திலும் உறுதிமொழி அளித்துள்ளது.

இவையெல்லாம் தமிழகத்தின் ஆட்சி யாளர்களுக்கு தெரிந்துதானே நடக்கிறது. அப்பொழுதெல்லாம் மக்களுக்கு தேவையான குறிப்பாக வீடுகளுக்கு தேவையான மின் சாரத்தை கொடுப்பதற்கு ஏதாவது ஒரு நட வடிக்கை எடுத்திருக்க வேண்டுமே, ஏன் எடுக்கவில்லை?

இப்பொழுது மக்கள் மின்சாரத்திற்கு போராட்டங்களில் ஈடுபட்டவுடன், பொறுத்துக் கொள்ளுங்கள்; 2013ல் கட்டாயம் கிடைத்து விடும் என்று மக்களை ஆசுவாசப்படுத்துவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. மத்திய அரசு 1990ஆம் ஆண்டுகளில் தேசிய மின்கொள் கையை அறிவித்தவுடன் இடதுசாரிகள் கடு மையாக எதிர்த்தனர். இதனால் மின்பற்றாக் குறை தீராது. தனியாரை மின்துறைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலுவான போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய அரசு அல்லது அதை ஆதரிக்கும் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.

மத்திய அரசு மாநில மின்துறை வளர்ச் சிக்கு நிதி ஒதுக்கீட்டை செய்யாத பொழுது அதை எதிர்த்து தமிழக ஆட்சியில் இருந் தவர்கள் குரல்கொடுக்கவில்லை.

மாறாக மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண் டார்கள். விளைவு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 15 சதவீத மின்பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. தமிழகமும் தப்பவில்லை.

முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டில் மின்உற்பத்தியை தரப் போகும் திட்டங்கள் யாவும் மின்உற்பத்தியை கொடுக்குமா என்பதே சந்தேகம். மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரானாலும் மின்நிலையங்களுக்கு தேவை யான நிலக்கரி கிடைப்பதற்கான ஏற்பாடில்லை.

வடசென்னை அனல்மின்நிலையம் மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் ஆக மூன்று 600 மெகாவாட் மின்நிலையங்களுக்கு சேர்த்து 90 லட்சம் டன் நிலக்கரி தேவை என்று மின்வாரியம் கணித்துள்ளது.

இதில் 37 லட்சம் டன் நிலக்கரி கோல் இந்தியாவும் மீதி 53 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து சமாளிப்பதாக முடிவு செய்துள்ளது. நடப்பில் மின்உற்பத்தி செய்து வரும் தமிழக மின்வாரிய மின்நிலையங் களுக்கு 40 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. ஆக 100லட்சம் டன் நிலக்கரி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே முதல்வரின் வாக்குறுதி நிறைவேறும்.

வெளிநாட்டு நிலக்கரியை வழங்கும் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நிலக்கரியின் விலையை சர்வதேச அளவிலான எண்ணெய் விலையுடன் ஒப் பிட்டு பேசி விலையை நிர்ணயம் செய்கின் றன.

நமது நாட்டு நிலக்கரியானது போக்கு வரத்து சரக்கு கட்டணத்துடன் சேர்த்து ஒரு டன் விலை ரூ.1800 என்றால் வெளிநாட்டு நிலக்கரியின் விலை ஒரு டன் ஒன்பதாயிரம் ரூபாய் வரை ஆகிறது.

மத்திய மின்துறை ஒழுங்குமுறை ஆணை யம் நிலக்கரி விலையை மின் கட்டணத்தில் சேர்த்து விட ஆலோசனை வழங்கியுள்ளது. இதனால் மேலும் மின்கட்டணம் உயரவே வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் எரிபொருளின் விலை உயர்ந்ததை தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் கொண்டு சென்றது. பின்னர் என்ன காரணத்தினாலோ மின்வாரியம் அம்மனுவை திரும்பப்பெற்றதை ஏற்று ஆணையம் அக்டோபர் 18 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது. மீண்டும் மனு செய்திட மின்வாரியத்திடம் உத்தரவிட்டுள்ளது. இத னால் மின்கட்டணம் உயரவே வாய்ப்புள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் தான் தமிழக முதல்வர், 2013ல் தமிழகம் தன் னிறைவு அடைந்துவிடும் என்று கூறியுள்ளார். எதிர்காலத்திற்கும் 4,887 மெகாவாட் அள விற்கு மின்திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால் 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு கடற்கரையோரங்களில் தனியார் மின் உற் பத்திக்கான மின்நிலையங்களுக்கு அனுமதி பெற்று பணியைச் செய்து வருவது பற்றி முதல்வர் எதுவும் கூறவில்லை.

அரசு அறிவித்துள்ள திட்டங்கள் வருவதற் கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதை யும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. உடன்குடி திட்டம் இனிமேல்தான் பணி களைத் துவக்கவேண்டியுள்ளது.

வடசென்னை அனல் மின்நிலைய கூடு தல் மின்நிலையம் அமைத்திட தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின்நிலையம் 600 மெகாவாட் மின்நிலையத்திற்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. எல்லாம் சரியாக நடந்தால் 2017ஆம் ஆண்டு உற் பத்தியை எதிர்பார்க்கலாம். ஆனால் இயங்கி வரும் 450 மெகாவாட் உற்பத்தி கணக்கில் குறையும்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் வயது 2017 இல் 35 ஆண்டுகள் ஆகி கிழடு தட்டிவிடும்.
 நெய்வேலி அனல் மின்நிலையத்தில் உள்ள 600 மெகாவாட் அளவிலான மின்உற்பத்தி ஆயுள் முடிந்தும்  இப்போது  ஒடிக்கொண்டிருக் கிறது.


இவை ஒருபுறமிருக்க மின்வாரியமானது நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வருடம் தோறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியை கட்டிக் கொண்டிருக்கும் மின்வாரியத்தின் கடன் களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நட வடிக்கை எடுக்காமல், இருபதாயிரம் கோடி ரூபாய் கடனாக கொடுப்பதில் பத்தாயிரம் கோடி ரூபாய் தொகைக்கு கடன் பத்திரங்களாக மாற்றிக்கொடுக்கவும் மீதமுள்ள பத்தாயிரம் கோடியை மூன்று வருடத்தில் திருப்பித்தர வும் நிபந்தனை விதித்துள்ளது.

கடன் பத்திரங்களாக வைத்தால் பின்னர் அப்பத்திரங்களை தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கினால் மின்வாரியத்தின்சொத்துக்கள் தனியார் வசம் செல்லுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்நிலையில் எங்கே மின்வாரியம் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றப் போகிறது. மேலும் கடன் வலையில் மின் வாரியத்தை தள்ளுவதற்கான ஏற்பாடுதான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழக மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கிய தால் ஏற்பட்டது. இது பத்தாண்டுகளாக அமல் படுத்தப்பட்ட மின்சாரக் கொள்கையினால் ஏற்பட்ட கடனாகும். இவை களையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளாமல் மின்பற்றாக் குறையை தீர்த்துவிடுவோம் என்ற அறிவிப் பானது, கடலில் தத்தளிப்பவனை காப்பாற்று வதற்கு பதிலாக ஆறுதல் கூறும் அறிவிப்பாக போய் விடக்கூடாது.

முதலில் கட்டுமானத்தில் உள்ள மின்நிலையங்களை விரைவில் கொண்டு வருவதற்கும் அதற்கான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவதற்கும் மாநில அரசு முயற்சிக்க வேண்டும்.

கம்பியிழப்பை குறைப்பதற்கான ஏற்பாட்டைச்செய்திடவேண்டும். மின்சார சிக்கனத்தைக் கடைபிடிக்கவும் கிடைக்கின்ற மின்சாரத்தை சமமாக பங்கீடு செய்திடவும் வேண்டும். மின்பற்றாக்குறை தீரும் வரை தொழிற்சாலைகளை ஜென ரேட்டர் மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்ள அனுமதி அளித்தல் வேண்டும். அதற்காக டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். டீசலுக்கு மானியம் வழங்க வேண்டிய தொகையை காலத்தே மின்நிலை யங்களை மின்உற்பத்திக்கு கொண்டுவராத கட்டு மானத்தை செய்து வரும் கம்பெனிகள் தர வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் தண்டத் தொகையை வசூல் செய்வதன் மூலம் சமாளிக்கமுடியும்.

மின்வாரியத்தின் மின்நிலையங்கள் முழு மையாக இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும். வழுதூர், குத்தாலம் பேசின்பாலம் எரிவாயு மின்நிலையங்களை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை. மத்திய அரசு நிலையமான 2000 மெகாவாட் சிம்மாதிரி அனல்மின்நிலையத்தில் உற்பத்தி யாகும் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கை முழுமையாக கேட்டுப்பெறவேண்டும்.

-கே. விஜயன்

 தலைவர்,

 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?