இரு பெருந்தலைகள்





காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.
" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். 
முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். 
" யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" 
என்று கோபமாக பேசி அனுப்பினார்.

அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.
அப்படி பட்டவர் தமிழ் நாட்டில் முதல்வராக இருந்துள்ளதை இப்போது நினைத்தால் கனவு காட்சி போல் தெரிகிறது.இன்று இது போன்ற தலைவர்களை நாம்  கனவில் தான் காண வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லால் பகதூர் சாஸ்திரி.
------------------------------------------------------------------------------
காமராஜரை போல் நம்மை வியக்க வைத்த மற்றும் ஒரு மாபெரும் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி.அவருடைய 145 வது பிறந்த நாள் இன்று.
எளிமை ,பொது வாழ்வில் தூய்மை தான் சாஸ்திரியின் வாழ்க்கை.சாஸ்திரி என்பது சிலர் நினைப்பது போல் அவரது சாதியின் பெயர் அல்ல.அவர் படித்து பெற்ற பட்டம்.

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சாரி என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார் 
மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது, எனவே இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையை காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்பித்தனர் .


இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .
அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். 
ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை சென்றார் சாஸ்திரி.

நேருவைப் போலவே சாஸ்திரியும் அலகாபாத்தைச் சேர்ந்தவர்தான். மிகவும் எளீயவர். பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். நேருவுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஏழை சாஸ்திரி. நேரு பணத்திலேயே பிறந்தவர், புரண்டு வளர்ந்தவர். ஆனால் சாஸ்திரி அதற்கு நேர் மாறானவர். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் எளிமையானவர்.கடைசி வரை  நம் காமராஜரைப் போல் எளிய வாழ்வையே பிரத்மரான பின்னரும் வாழ்ந்து மறைந்தார்.

சாஸ்திரிக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. இதனால் ஆங்கிலம் நன்கு பேசுபவர்களை அவருக்குப் பிடிக்கும். ஆங்கிலம் நன்கு பேசினால் அவர்கள் மேல்தட்டு மக்கள் என்று அவர் கூறிவந்தார்.அன்றைய இந்தியாவில் பணக்கார வர்க்கத்தினர்தான் லண்டனில் படித்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசினார்கள்.
ஆனால் தான் ஆங்கிலத்தில் எழுதியவற்றை கூச்சப் படாமல் தாழ்வு ம்னப்பான்மையின்றி பிறரிடம் காண்பித்து தவறுகளை திருத்திக்கொள்வார்.

இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். 
ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. 
எளிமை,நேர்மை இது தான் அவர். 
வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்து தர கட்சியிடம் கேட்டுக் கொண்டவர். 
அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 
அடுத்த நாள் ," நான் அமைச்சர் பதவியில் இல்லை.இனி சம்பளம் வராது .வேறு வருமானம் தேடும் வரை இனிமேல் நம் வீட்டில், அன்றாடச் செலவுகளை சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது இந்தியாவை வீரத்துடன் வழிநடத்தியவர் . 
ஆனால் எப்போதும் மக்கள் நலன்,நாட்டின் நலன் என்றிருந்தவர்.
மும்பையில் ஒருமுறை கமல்அம்ரோஹி, படப்பிடிப்புத் தளத்தில் சாஸ்திரிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அப்போது இந்தி திரை உலகில் உச்ச நடிகையான மீனா குமாரி கலந்து கொண்டிருந்தார். 
அவர் சாஸ்திரிக்கு மாலை போட்டு வரவேற்று அழைத்துச் சென்றார். 
சாஸ்திரியைப் பாராட்டி பேசினார்.

அப்போது நடிகை மீனா குமாரியை  பார்த்த சாஸ்திரி, அருகில் இருந்த பத்திரிகையாளர் குல்திப் நாயரை அருகில் அழைத்து ரகசியமாக
. ’ஆமாம், இப்போது பாராட்டி பேசுகிறாரே அந்தப் பெண் யார் ?அவரை நான் பேசும்போது குறிப்பிட வேண்டும் “என்று கேட்டார். 
குல்திப் நாயர்  தூக்கி வாரிப் போட்டது.  ஒரு புகழ் பெற்ற இந்தி நடைகையை தெரியாதவரா சாஸ்திரி என்று 
”அவர்தான் மீனா குமாரி, இந்தியாவின் இப்போதைய உச்ச நடிகை என்றாராம்.. ”அப்படியா?“ என்று என்று கேட்டுக்கொண்டார் சாஸ்திரி.
பின்னர் சாஸ்திரி பேச எழுந்தார். ”மன்னிக்கவும் எனக்கு மீனா குமாரியின் பெயரை இதுவரை தெரியாது. இப்போதுதான் எனது வாழ்க்கையிலேயே முதல் முறையா கேள்விப்படுகிறேன். அனைவரும் மன்னித்து விடுங்கள் ”என்று அவர் கூறியபோது வந்திருந்த அனைவரும்[ மீனா குமாரி உடபட] ஆச்சரியப்பட்டுப் போயினர்.
தனது உருவம் குள்ளமாக இருப்பதை அவர் கவலையாக எடுத்துக் கொண்டதில்லை.
 அவர் உயரம் குறைவாக இருந்ததால் பேசுபவர்களிடம் நிமிர்ந்து பார்த்தபடிதான்
மற்றவர்களிடம் பேசுவார்.
-‘இது கஷ்டமாக இல்லையா?’ என்று கேட்டார்கள்.
-
சாஸ்திரி,”ஒன்றும் கஷ்டமாக இல்லை. . யார் என்னோடு பேசுவதானாலும் நெஞ்சை  நிமிர்த்திப் பேச முடியாது மிகவும்பணிந்து குனிந்து தான் பேசவேண்டும் இந்த  வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா?’ என்று சொல்லி சிரித்தாராம்!
இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு தொண்டர் கூறியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார் “
 அதுதான் உண்மை ஏழை இந்தியர்களின் உயர்வுக்கு ஆதாரமான வர் சாஸ்திரி.
அவர் போன்ற தலைவர்கள் பிரதமர்  அரசியலில்-அதிகாரத்தில் அதன் பின்னர் ஒருவரும் இல்லை.











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?