நினைவாற்றல்



நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன். 
ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன். படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை. நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளேன். இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம். ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 
எந்த மனிதனுக்கும் குறைந்த அளவு ஞாபக சக்தி, அதிக அளவு ஞாபக சக்தி என்பதை வகுத்துக் கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது. நம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை தெரிந்து கொள்வோம்.

இடைவிட்டு கற்றலும், மொத்தமாக கற்றலும் (Spaced and massed  learning):

ஒரு பாடத்தைப் படிக்கும்போது அவற்றில் உள்ள வினா விடைகளை தனித்தனிப் பிரிவாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பிரிவாகப் படித்து முடித்த பின்பும் சிறிது நேரம் இடைவெளி விட்டு பின்பு படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகப் படித்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும். உடனடித் தேவைக்கு மட்டும் மொத்தமாகப் படிக்கலாம். ஆனால் இவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் நிற்காது. ஆனால் இடைவெளிவிட்டுப் படித்தால் நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் பதிந்து இருக்கும்.

முழுமையாகக் கற்றலும், பகுதியாக கற்றலும் (Whole and part  learning):

அதாவது நாம் சிறிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடையையோ முழுமையாகக் கற்க இதுவே சிறந்ததாகும். மனப்பாடம் செய்வதற்கு இவ்விரு முறைகள் பயன்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடைகளையோ பகுதி, பகுதியாகக் கற்றால் நன்றாக நினைவில் பதியும். மேலும் இவ்விரு முறைகளையும் சேர்த்துப் படித்தால் அதாவது முதலில் பகுதி, பகுதியாகப் படித்து விட்டுப் பிறகு முழுமையாகப் படித்தால் நன்றாக மனப்பாடம் செய்ய இயலும். அதாவது நன்றாக நம் நினைவில் நிற்கும்.

ஒப்பித்தல் முறை (Recitation method):

இம்முறையில் நாம் கற்றவற்றை நாமே தொடர்ந்து பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பிழைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தனக்குத்தானே ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளும் பொழுது கடினமானப் பகுதிகளை முதலிலேயே தெரிந்து கொண்டு அதற்குத் தனிக் கவனம் செலுத்திப் படித்துக் கொள்ளலாம்.

நினைவுக்குறிப்புகள் (Mnemonic Devices):

கற்பவற்றை நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் கற்கும் செய்திகளுக்கு அல்லது விடைகளுக்கு அவற்றோடு தொடர்புடைய ஒரு பொருளையோ அல்லது எண்களையோ நினைவுக்குறிப்புகளாக எடுத்துக் கொண்டு படித்தால் நன்றாக நினைவில் இருக்கும். உதாரணமாக Vibgyor என்ற சொல் தெரிந்தால் போதும் நிறமாலை (வானவில் நிறங்கள்) நமக்குத் தெரிந்துவிடும்.

நினைவு என்பது நம்மிடம் உள்ள தனிச்சிறப்புத் தகுதியாகும். இதைச் சரியாக கைகொள்ளும்போது நம் குறையாய்த் தென்பட்ட பல விஷயங்கள் திருத்தப்பட்டு நினைவுத்திறன் சிறப்பாய் இருக்கும். 

===================================================================
இலக்கியத்துக்கான நோபல் பரிசு

நா ஜிக்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அதனால் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான பாட்ரிக் மோடியானோ (69), இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார்.
இதை நோபல் பரிசை அளிக்கும் ஸ்வீடிஷ் அகாதெமி நேற்று அறிவித்தது. “ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் மனித வாழ்க்கையின் துயரங்கள், பாதிப்புகள் குறித்த நினைவுகளை மிகவும் திறம்பட வெளிப்படுத்தியதற்காகÓ மோடியானோ இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அகாதெமி தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, 1945ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு பாரிஸ் நகரின் புறநகரில் பிறந்தவர் மோடியானோ. அவருடைய தந்தை இத்தாலி யூதர். தாய் பெல்ஜியம் நடிகை.

மோடியானோ இதுவரை பிரெஞ்ச் மொழியில் 40க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்கள், நாவல் களை எழுதியுள்ளார். 
அதில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
அதைத் தவிர குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைப்படக் கதையையும் எழுதியுள்ளார். இவருடைய நூல்கள், நாவல்களில் யூதர்கள் குறித்தும், நாஜிக்களின் ஆக்கிரமிப்புகள், அதனால் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்புகள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நைட் ரவுண்ட்ஸ், ரிங் ரோட்ஸ், 1974, வில்லா டிரிஸ்ட், 1977, மிஸ்ஸிங் பெர்சன், எ டிரேஸ் ஆஃப் மலிஸ் (A Trace of Malice), அவுட் ஆஃப் த டார்க், தி சர்ச் வாரண்ட், ஹனிமூன், 1992 மற்றும் சில படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

இது தவிர குழந்தைகளுக்கான நூல்களையும், திரைக்கதையிலும் பங்களிப்பு செய்துள்ளார் மோதியானோ. 1968ஆம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவல் சர்ச்சைக்குரிய வகையில் யூத விரோத சித்தரிப்புகளைக் கொண்டதாகக் கருதப்பட்டு 42 ஆண்டுகள் கழித்து, 2010ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் இவரது முதல் நாவல் இன்னமும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பானிய மொழியில் இவரது பெரும்பாலான படைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகியவற்றிலும் இவரது படைப்புகள் பிரசித்தம்.

இவரது படைப்புகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விமர்சன ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஒருசில விமர்சகர்கள் இவரது ஒரு சில படைப்புகளை பின்நவீன எழுத்தாக அறுதியிட்டுள்ளனர். 
பல்வேறு சர்வதேச இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
 2000ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் நீதிபதிகள் குழுவிலும் இடம்பெற்றார். 
தற்போது பாரி ஸில் வசிக்கிறார் மோடியானோ. 
நோபல் பரிசு பெற்ற மோடியானோவுக்கு பரிசு தொகையாக ரூ.6.76 கோடி கிடைக்கும். ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
 அமைதிக்கான நோபல் பரிசு இந்தியருக்கு,

மொத்தம் 278 பேர் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்டது.இறுதியில் நோபல் கமிட்டியின் தலைவர் தோர்ப்ஜோயெர்ன் இன்று [10-10-2014]அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 
இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது பச்பான் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் சுமார் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு புது வாழ்க்கை யை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
1984ஆம் ஆண்டு முதல் பல்வேறு மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ள சத்யார்த்திக்கு தற்போது உலக அளவில் அங்கிகாரமாக அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
சிறுமி மலாலா
உலகிலேயே மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை மலாலாவுக்கு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா. 
அப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர். தலிபான்கள் ஒடுக்குமுறை குறித்து பிபிசியின் உருது மொழி இணையதளம் மூலம் பெண்கள் கல்வி பற்றி மலாலா  பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
பின்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் மலாலா. 
இதனால் தலிபான் தீவிரவாதிகள் 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல முயன்றனர். தலிபான்களில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார் மலாலா. அதன் பின்னர் தொடர்ந்தும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மலாலாவின் பிறந்த நாளை ஐ.நா. "மலாலா தினம்" என்று பெண்கள் கல்வி அறிவு நாளாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முதலாவது அமைதி, உலக அமைதி அறக்கட்டளையின் "தைரியத்துக்கான விருது" ஆகியவற்றை பெற்றுள்ள  சிறுமி மலாலாவுக்கு தற்போது  அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?