உயிர் குடிக்கும் மருந்துகள்!


சுரன் 04112014



நூறு மடங்கு லாபம் 

வைக்கும் மருந்து நிறுவனங்கள்?

வேடிக்கை பார்க்கும் அரசு!
‘புற்றுநோய், இதய நோய், டி.பி., நீரிழிவு, எய்ட்ஸ் போன்ற முக்கியமான சில நோய் தீர்க்கும் மருந்துகளின் விலை உயர்வு!’

- அதிகம் வெளி வராத இந்தச் செய்தி இந்தியாவில் பல லட்சம் பேரை கதிகலங்க வைத்திருக்கிறது. 
ஒன்று, இரண்டல்ல... உயிர்காக்கும் 108 மருந்துகளுக்கான விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்து பதைபதைக்க வைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்துக்கு முதல் நாள் இந்த விலையேற்றம்! எப்படி? ஏன்? 

புற்றுநோய்க்கான மருந்தான கெஃப்டினேட்டின் விலை 5,900 ரூபாய். இப்போது அதன் விலை 11,500 ரூபாய். மற்றொரு மருந்தான கிளிவெக்கின் முந்தைய விலை 8,500 ரூபாய். இப்போது 1,08,000 ரூபாய். ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான பிளேவிக்ஸின் முந்தைய விலை 147 ரூபாய். இப்போது 1,615 ரூபாய்.    

ஏன் இந்த விலை உயர்வு? 
முதலில் ஒரு மருந்துக்கான விலை நிர்ணயம் குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கோ, மருந்துக்கோ, இயந்திரத்துக்கோ அதை உருவாக்கியவருக்கு காப்புரிமை வழங்குவது என்பது வழக்கம். இதுதான் காப்புரிமை. இன்று நேற்றல்ல... கி.மு.500ல் கிரேக்க நகரான சைபரீஸில் தொடங்குகிறது காப்புரிமை வரலாறு. இது ஒருபுறம் இருக்கட்டும்... ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். 
‘பேயர்’ ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனம். கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு மருந்தைத் தயாரித்திருக்கிறது. அதன் பெயர் ‘நெக்ஸ்வார்.’ ஒரு நாளைக்கு 4 மாத்திரைகளை கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 

ஒரு மாதத்துக்கு ஒரு நோயாளிக்குத் தேவைப்படுவது 120 மாத்திரைகள். இந்த 120 மாத்திரைகள் அடங்கிய பெட்டியின் விலை இந்திய மதிப்பில் 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்! 
 இதே 120 மாத்திரைகளை ஐதராபாத்தைச் சேர்ந்த ‘நேட்கோ பார்மா’ நிறுவனம் 8,800 ரூபாய்க்கு தருகிறேன் என்கிறது. அப்படியானால் விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்? 

‘ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து எத்தனையோ ஆய்வுகளைச் செய்கிறோம். பல தோல்விகளுக்குப் பிறகு, பெரும் பொருளை இழந்த பிறகு ஒரு மூலக்கூறுக் கலவையைக் கண்டுபிடிக்கிறோம். நாங்கள் போட்ட முதலீட்டை மருந்தின் விலையில் சேர்த்தால்தானே திரும்பப் பெற முடியும்?’ 
என்று கேட்கின்றன மருந்து கம்பெனிகள். 

அகில இந்திய மருந்துகள் விற்பனைப் பிரதிநிதிகள் சம்மேளன தலைவர் ரமேஷ் சுந்தர் சொல்கிறார்... ‘‘மருந்துகளின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத்தான் இந்தியாவில் 1970ம் ஆண்டு புதிய காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. ‘புதிய மருந்தை கண்டுபிடித்ததற்கான செய்முறைக்கு மட்டுமே காப்புரிமை (Process Patent) வழங்கப்படும்.
 மருந்துக்கு காப்புரிமை (Product Patent) இல்லை’ என்றது சட்டம். 
அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே! இந்த சட்டத்தின் அடிப்படையில் காப்புரிமை பெற்ற மருந்துகளின் மூலக் கூறுக் கலவையை வேறு செய்முறைகள் மூலம் இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங் கள் தயாரித்துக் கொள்ளலாம். 

இதன் அடிப்படை யில்தான் இந்தியாவில் மருந்து உற்பத்தி தொடங்கியது. மருந்துகளின் விலையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, 1978ம் ஆண்டு ‘மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம்’ (National Pharmaceutical Pricing Authority) உருவானது.
 வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருந்து செய்முறை காப்புரிமையை 7 ஆண்டுகளுக்கு பதிலாக 20 வருடங்களுக்குக் கோருகின்றன. உலக வர்த்தக மையத்தின் அறிவுறுத்தலின்படி 2015க்கு மேல் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறது இந்தியா. அதற்கான விண்ணப்பங்களை 2005ம் ஆண்டிலிருந்தே வாங்கவும் தொடங்கிவிட்டது. 

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயிக்கும் விலையில்தான் மருந்துகளை விற்க முடியும். அதன்படி கிட்டத்தட்ட 340 மருந்துகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதிலும் பல குழப்பங்கள்... 250 மில்லி கிராம் மாத்திரையின் விலை மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
 500 மில்லி கிராம் மாத்திரையின் விலைக்கு கட்டுப்பாடு இல்லை. எது லாபமோ அதைத் தயாரிப்பதுதானே மருந்து கம்பெனிகளின் வேலை? பல நிறுவனங்களும் 500 மில்லி கிராம் மாத்திரைகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. 
அதே போல, ஒரு மருந்தை தயாரிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு மருந்தின் விலையில் 50 சதவிகிதம் வரை ஈட்டுத் தொகை ( Margin)   வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலையையும் மருந்து விலைக் கட்டுப்பாடு மாற்றியது. மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் விற்கப்படும் நிலைக்கேற்ப மருந்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. 
இப்போது அரசு இந்த ஆணையை முழுதாகத் திரும்பப் பெற்றுவிட்டது. அதாவது, மருந்துகளின் மீதிருந்த விலைக் கட்டுப்பாட்டை சத்தமில்லாமல் நீக்கிவிட்டது. இனிமேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல மருந்தின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஏழைகளைப் பற்றி எந்த அரசும் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு நிறுவனங்களின் லாபமே பிரதானம்.’’

பன்னாட்டு மருந்து நிறுவனங்களை திருப்தி செய்வதற்காக இந்த மருந்துக் கட்டுப்பாடு நீக்கம் என்று சொல்லப்படுகிறது. 108 மருந்துகளில் பெரும்பாலானவை பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகள். உண்மையில், மருந்து விலைக் கட்டுப்பாட்டை ரத்து செய்ததால் பாதிக்கப்படப் போவது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ஏழைகளுமே!
 இந்தியாவில் 4.1 கோடி நீரிழிவு நோயாளிகள், 4.7 கோடி இருதய நோயாளிகள், 22 லட்சம் காச நோயாளிகள், 11 லட்சம் புற்றுநோயாளிகள்,
25 லட்சம் ஹெச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கிறார்கள். 
தாறுமாறாக ஏறப்போகும் மருந்துகளின் விலை உயர்வால் பெரும் வேதனைக்கு உள்ளாகப் போகிறவர்களும் இவர்கள்தான். 
மருத்துவர் புகழேந்தி சொல்கிறார்... ‘‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் புதியதாக 10 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள். வருடத்துக்கு எட்டு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள்.
 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் சாந்தா ஓர் அறிக்கையில் ‘சென்னையில் வசிப்பவர்களில் 10லிருந்து 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.  இப்போது இந்த ரிஸ்க் நிச்சயம் அதிகரித்திருக்கும். 
இதற்கு முக்கியக் காரணம், சுற்றுச்சூழல் சீர்கேடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறைகள் இருப்பதும்தான். 

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஓர் ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, பெட்ரோலியத்தில் இருந்து ஒரு ரசாயனக் கலவை வெளியாகும். அதன் பெயர் ‘பென்சீன்’ (Benzene). இது ரத்தப் புற்றுநோயை உருவாக்கக் கூடியது. பெட்ரோல் பங்க்கிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு எளிதாகப் பரவும் பென்சீன். பல அயல்நாடுகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்க்குக்கு உரிமமே கொடுப்பார்கள். 
அந்த பாதுகாப்பு முறைக்கு ‘வேப்பர் ரெகவரி சிஸ்டம்’ ( Vapor Recovery System ) என்று பெயர். இந்த முறையான பாதுகாப்பு இந்தியாவில் இல்லை. பென்சீன் மூலமாக ரத்தப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு 5லிருந்து 10 மடங்கு அதிகமாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது டெல்லியில் நடந்த ஆய்வு. 



சமீப காலத்தில் நுரையீரல் புற்றுநோயும் இரைப்பை புற்றுநோயும் அதிகமாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல தைராய்டு கேன்சரும் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகியிருக்கிறது. ஆண்களில் 880 பேரில் ஒருவருக்கும் பெண்களில் 460 பேரில் ஒருவருக்கும் தைராய்டு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 தமிழ்நாட்டில் 250 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புற்றுநோய் வருவதற்கு 40 சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கம்தான் காரணம் என்கிறார்கள். ஆனால், அது மட்டும் காரணமில்லை.
. உணவு, சுற்றுச்சூழல், தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் என்று பல காரணங்கள் உள்ளன. உணவுப் பொருட்களின் கலப்படமும் புற்றுநோயை பரவலாக்கிவிடுகிறது. 


அமெரிக்காவில் வருமானம் ஈட்டித் தரும் தொழில்களில் முதன்மையானது ஆயுத உற்பத்தி. அதற்கு அடுத்தபடியாக இருப்பது மருந்து உற்பத்தி. அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாக மருந்து கம்பெனிகள் இருக்கின்றன. 
அப்படி இருக்கும் போது பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு இந்தியாவில் வழிவிடுவது ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும்தான் மிகவும் பாதிக்கும். இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆளானவர்களில் 60லிருந்து 70 சதவிகிதம் பேர் தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். அதனாலேயே சிகிச்சை தாமதமாகி, பலனில்லாமல் உயிர் துறப்பவர்கள் அதிகமாகிவிடுகிறார்கள். 
இந்த நிலையில் புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மருந்தை வாங்கவே முடியாத நிலைக்குப் பலபேரைத் தள்ளிவிடும். 

ஒரு மருந்தின் விலை நிர்ணயம் என்பது நம்மை தலை கிறுகிறுக்கச் செய்கிற சமாசாரம். பல நூறு மடங்கு லாபம் தருகிற தொழில். உதாரணமாக ‘அமிக்காசின் 500 மில்லி கிராம்’ ஊசி மருந்தை எடுத்துக் கொள்வோம். ஒரு ஊசி மருந்து தயாரிக்க ஆகும் செலவு 7 ரூபாய். 
இதை உற்பத்தி செய்பவர், மொத்த விற்பனையாளர்களுக்கும் டீலர்களுக்கும் 9 ரூபாய்க்குக் கொடுக்கிறார். 
அவர்கள், டாக்டருக்கும் மருந்து விற்பனைக் கடைக்கும் 12 ரூபாய்க்கு விற்கிறார்கள். 
ஒருவர் மருந்துக் கடையில் ‘அமிக்காசின் 500 மில்லி கிராம்’ ஊசி மருந்தை வாங்கும்போது அதன் விலை 78 ரூபாய். அம்மா மருந்துக் கடையிலேயே 10 சதவிகிதம் தள்ளுபடி விலைக்கு வாங்கினாலும் 70 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும். இந்த மருந்தை ஏழைகளுக்கு லாபம் பார்க்காமல் அடக்க விலைக்கே விற்கலாம் இல்லையா? 
அந்த முயற்சியை அரசே செய்யலாமே? 
உயிர்காக்கும் மருந்துகள் விலையில் அரசே அலட்சியம் கொள்ளலாமா? 
108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டு முறையை தளர்த்துவது எந்த விதத்தில் நியாயம்?’’ 

இணையதளத்தில் ஒரு வேடிக்கை கதை 


ஒரு மருந்துக் கடைக்காரர். 
பள்ளி விடுமுறையில் அவர் கடையில் வந்து அமர்ந்திருப்பான் மகன்.
 அப்பா, மகனை கடையில் இருக்கச் சொல்லிவிட்டு சாப்பிடுவதற்காக எழுந்து போவார். 
ஒரு பெண் வந்து வயிற்று வலிக்கு மருந்து கேட்பார். பையன் சரியாக மருந்தை எடுத்துக் கொடுத்து பணத்தையும் வாங்கிவிடுவான். சிறிது நேரத்துக்குப் பிறகு அப்பா கடைக்குத் திரும்புவார். 


‘‘என்னடா யாராவது வந்தாங்களா?’’
‘‘ஆமாம்ப்பா. ஒரு அம்மா வயித்து வலிக்கு மருந்து கேட்டாங்க. குடுத்தேன்.’’
‘‘எந்த மருந்தைக் குடுத்தே?’’
மகன் மருந்துப் பெட்டியைக் காட்டுவான். அப்பா, பெருமூச்சு விடுவார். 
‘‘சரி, என்ன விலைக்கு வித்தே?’’



‘‘அம்பதுன்னு போட்டுருந்துச்சுப்பா... அதான் அம்பது காசு வாங்கினேன்.’’ 
‘‘அடப்பாவி... அது அம்பது ரூபாடா!’’ என்று பதறிய அப்பா சிறிது நேரத்தில் தன்னை இப்படி ஆறுதல் படுத்திக் கொள்வார்... ‘‘சரி விடு... அதுலயும் நமக்கு பத்து பர்சன்ட் லாபம்தான்.’’ இந்தக் கதை நிஜமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அவலம்.


அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ‘108 அத்தியாவசிய மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. 
மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கினால் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக மருந்துகளின் விலையை கடுமையாக உயர்த்தும். அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
 ஏற்கனவே, நோயால் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகள் அரசின் இந்த முடிவால் மற்றோர் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.
 இதனால், இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்க மக்களுக்கும் சாதகமாக அமைய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.
அமிக்காசின் 500 மில்லி கிராம் ஒரு ஊசி மருந்து தயாரிக்க ஆகும் செலவு 7 ரூபாய்.  டாக்டருக்கும் மருந்து விற்பனைக் கடைக்கும் 12 ரூபாய்க்கு விற்கப்படுகிற இதை ஒருவர் மருந்துக் கடையில் வாங்கும்போது அதன் விலை 78 ரூபாய். 
அரசின் [அம்மா] மருந்துக் கடையிலேயே 10 சதவிகிதம் தள்ளுபடி விலைக்கு வாங்கினாலும் 70 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும். 
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல மருந்தின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். 
ஏழைகளைப் பற்றி எந்த அரசும் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு நிறுவனங்களின் லாபமே பிரதானம்.
நன்றி;தினகரன். .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?