மக்கள் கோவணத்தை உருவி...


அதானிக்கு பரிவட்டம்..? 
=======================
”இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம்கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டுகாலமாக திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம்விட்டுள்ள தனியார் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமத்திற்கு இன்னுமொரு ரூ.6,200 கோடி பணத்தை கடனாக வாரி வழங்க பாரத ஸ்டேட் வங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது. ”
இதை நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
நாட்டு மக்களின் சேமிப்புப் பணத்தை பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இப்படி சூறையாடுகிற மத்திய பாஜக அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கித்துறை உள்பட ஒட்டுமொத்த நிதித்துறையையும் சீர்குலைவு பாதையில் தள்ளிவிட முயற்சி மேற்கொண்டுள்ள மோடி அரசைகண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிசம்பர் 2ம்தேதிமுதல் 5ந்தேதி வரை நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிசம்பர் 2ந்தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 1ந்தேதி வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன.

கள்ளத்தனமான பேரம்
இதையொட்டி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
’ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம்தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி 6200 கோடிரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. 
இப்பேரத்தின் கள்ளத்தனம் பலரது புருவங்களை உயரச் செய்திருக்கிறது.

அதானிகுழுமத்தின் நிலுவையிலுள்ள மொத்தகடன் என்பது இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் 72,732 கோடி ரூபாய் ஆகும். 

இதில் பெரும்பாலான தொகை இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்டவையே ஆகும். 

இப்போது கூடுதலாக கிட்டத்தட்ட ரூ.6200 கோடி ரூபாய் அளிக்கப்படுவது என்பது பாரத ஸ்டேட் வங்கியின் முதுகை முறித்திடும் நடவடிக்கையாகவே அமைந்திடும்.

கடன் தர மறுத்த தனியார் வங்கிகள்.

சிட்டி குழுமம், மார்கன் ஸ்டேன்லி, ஜே.பி. மார்கன், எச்எஸ்பிசி, பார்க்லேய்ஸ், சேஸ்-மன்ஹாட்டன், கோல்ட்மேன் சாச்சே, டட்ச் வங்கி, ஸ்காட்லாந்து ராயல்வங்கி, கிரெடிட் அக்ரிகோல் ஆகிய சர்வதேச பகாசுர நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இத்திட்டத்திற்காக கடன் அளித்திட மறுத்துள்ளபோது, பாரத ஸ்டேட் வங்கி இக்கடனை வழங்கிடப் பாய்ந்தோடுகிறது. 
வெளிநாட்டில் செயல்படுத்தப்படவுள்ள ஓர் திட்டத்திற்கு இதற்கு முன்னெப்போதும் எந்த ஒரு இந்திய வங்கியாலும் அளிக்கப்படாததொரு மிகப் பெரிய தொகையை வழங்க காட்டப்படுகின்ற அவசரம் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனின் அளவு அதிகரித்து வரும் வேளையில், பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடனின் அளவும் அதிகரித்து வரும் வேளையில், அதானி குழுமத்திற்காக நடத்தப்படும் இந்த பேரம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

மோடியின் பயணமே காரணம்.

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சமீபத்தில் பிரதமர் பயணம் மேற்கொண்டபோது, அவரோடு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்டோர் அடங்கியவர்த்தகக் குழுவும் பயணித்தது. 
இப்பயணத்தின்போது, குயின்ஸ்லாந்து மாகாணஅரசின் பிரதமர் கேம்ப்பெல் நியூமேனை பிரதமர் சந்தித்தார். 
ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் ரயில் மற்றும் துறைமுக கட்டமைப்புத் திட்டங்களில் குறுகிய காலத்திற்கு குறைந்த அளவிலான முதலீட்டை குயின்ஸ்லாந்து அரசு செய்திடுவதற்கான உத்தரவாதத்தினைப் பெறஇந்த சந்திப்பு வழி வகுத்துள்ளது.
இப்பின்புலத்தில் அதானி குழுமம் மற்றும் பாரதஸ்டேட் வங்கி இடையேயான இந்த பேரம் பெருத்த சந்தேகத்தினை எழுப்புகிறது.

மோசடித் திட்டம்.

வர்த்தக ரீதியாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படக் கூடிய ஒன்றல்ல. இத்தகைய திட்டங்களுக்குத் தேவைப்படுகின்ற நிதியை அளிக்கப் போவதில்லை என ஏற்கனவே சர்வதேச அளவிலான எட்டு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 இச்சூழலில் ஆஸ்திரேலியாவின் கர்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தோண்டிடும் நிலக்கரியில் மூன்றில் இரண்டுபங்கினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதாகக் கூறும் அதானிகுழுமத்தின் திட்டமானது ஒரு கேலிக்கூத்தே.
அதிக செலவு பிடிக்கின்ற நிலக்கரி இறக்குமதியின் வாயிலாக இந்தியாவில் தனது எரிசக்தி பிரச்சனைக்குத் தீர்வைக் காண இயலாது என ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறை அமைச்சரே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இதுவும் `வாராக்கடன்’
ஆக, அதானி குழுமம் துவங்கவுள்ள நிலக்கரிச் சுரங்கத் திட்டமானது “வர்த்தக ரீதியாக வெற்றி பெறக்கூடிய ஒன்றல்ல” எனில், பாரத ஸ்டேட் வங்கி அளித்திடவுள்ள 6200 கோடி ரூபாய் கடனும் வாராக் கடனிலேயே போய்ச் சேர்ந்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
“பொதுத்துறை வங்கிகளின் லாபம்அனைத்தும் அவற்றில் பணியாற்றிடும் ஊழியர்களுக்கு மட்டுமேயானது அல்ல“என முன்னாள் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய லாபங்கள் எல்லாம் வாராக் கடன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்கைக்கு தாரைவார்க்கப்பட வேண்டியவையே என்ற அர்த்தத்திலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கான கொள்கையையே தற்போது மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களும் அடிபிறழாது பின்பற்றுகின்றனர். 
மேலும், இக்கொள்கைகளை மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்திட முனைகின்றனர்.

ஆனால், தாங்கள் அல்லும்பகலும் அரும்பாடுபட்டு சம்பாதித்து, பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்துள்ளசேமிப்பை அதானிகளும், அம்பானிகளும் கொள்ளையடித்துச் செல்ல ஒருபோதும் இத்தேசத்தின் எளிய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
 எனவே, அரசியல் அதிகாரத்தில் உள்ளோரும், அவர்களுக்குப் பிரியமான கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்கு எதிராக வங்கித்துறையைச் சார்ந்த அனைத்து ஊழியர்களும் ,பொது மக்களும் போராட அழைத்துள்ளது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் .

எளியவர்கள் சொந்த தொழில் ந்டத்த 50000 ரூபாய் கடன் கேட்டாலே பல அலைக்களிப்புகளை சந்திக்கையில் ஏற்கனவே 72 ஆயிரம் கோடிகளை கடனாக வங்கிகளில் வாங்கிக்கொண்டு வராக்கடனாக மாற்றிட முயற்சிக்கிறது அதானி குழுமம்.

வீட்டில் இருக்கும் கொஞ்சம் தங்கத்தை வைத்து கடன் வாங்கி அவசரத் தேவைகளை சமாளிக்கும் மக்கள் கடனை செலுத்த வழியில்லாவிட்டால் அந்த ஒரே நகையையும் ஏலம் விடும் வங்கிகள் இவ்வளவு பெரியத் தொகையை கைகழுவுவது எப்படி?

அதை விட கேவலம் மீண்டும் 62 ஆயிரம் கோடிகளை அதே ஏமாற்றுக்கார அதானிக்கு கடன் என்ற பெயரில் அள்ளிக் கொடுப்பது.எவ்வளவு பெரிய பித்தலாட்ட மோடி வித்தை.?

இவ்வளவு ஆயிரம் கோடிகளை அள்ளி வீசச் செய்யும் மோடி,பாஜக இதில் கொஞ்சம் கூட ஆதாயம் இல்லாமலா இவ்வளவு மோசடி வேலைகளுக்கு துணை போவார்கள்?
===========================================================================

மானிய ஒழிப்பும்,

 கார்ப்பரேட் மணியமும்.

கிராமங்களில் அட்டூழியம் செய்கிறவனைப் பற்றி, “எல்லாம் அவனுடைய மணியமாப் போச்சு,” என்று புலம்புவார்கள்.
 சமையல் எரிவாயுவுக்கான அரசாங்கத்தின் மானியம் விலக்கிக்கொள்ளப்படுவதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மணியம் இருக்கிறது.
அரசுக்கு ஏற்படுகிற இழப்பைத் தடுப்பதற்காகத்தான் சமையல் எரிவாயு மானியம் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிச்சந்தை விலையிலேயே இனி எல்லோருக்கும் விற்கப்படப்போகிறது என்று மத்திய அரசு கூறுகிறது. மக்களுக்கு இதனால் ஏற்படும் சுமையை ஈடுகட்ட அந்தக் கூடுதல் தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்.
மக்கள் வாங்குகிற கேஸ் சிலிண்டர் களுக்காக அரசாங்கம் தருகிற மானியத் தொகை இப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
அதே அரசாங்கப் பணத்தை இனிமேல் மக்களின் வங்கிக்கணக்கில் போட்டுவிடு வார்கள் என்றால், எப்படி அரசுக்கு ஏற்படுகிற இழப்பு தடுக்கப்படும்?
 இந்த “லாஜிக்” என்ன என்று மக்களுக்கு மத்திய அரசு விளக்கட்டும்.முதலில் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து கேஸ் சிலிண்டரை வாங்க வைத்து, அதற்காக வங்கிக்கணக்கில் கூடுதல் செலவுக்கான பணத்தைப் போடுவது போல் காட்டிக்கொண்டு, எதிர்காலத்தில் அப்படிப் பணம் போடுவதை நிறுத்துகிற ஏற்பாடுதான் இது. 
அதன் மூலம் அனைத்து மக்களும் வெளிச் சந்தையிலேயே, அப்போதைய சந்தை விலையிலேயே தொடர்ந்து கேஸ் வாங்க வைக்கிற தந்திரம்தான் இது.கார்ப்பரேட் நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறுகிறபோது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இப்படித்தான் பெரு முதலாளிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் எதற்காக அரசாங்கத்திற்கு மானியத்தை வெட்டச்சொல்லி நிர்ப்பந்திக்க வேண்டும்?


மக்களுக்கு நாமம் தயாராகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் பல ஊர்களில் தங்களுடைய சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்கின்றன.
மக்கள் மானிய விலையில் அரிசி, கோதுமை, காஸ் என்று வாங்குகிறபோது, அதனால் அந்த நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் குறுகிய அளவிலேயே இருக்கின்றன.
மக்களை மானிய விலையில்லாமல் வெளிச்சந்தை விலையில்தான் வாங்கி யாக வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டால், மானியக் கேடயம் இல்லாத நிலையில் தனியார் பிடியில்தான் மக்கள் சிக்குவார்கள். 
அந்த நிறுவனங்களின் வியாபாரமும் லாபக் கொள்ளையும் பல மடங்கு அதிகரிக்கும். இப்படி கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டு செய்கிற இலக்கோடுதான், பலவிதமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு மானியங்களை ஒழித்துக்கட்டுவதற்கான மனியம் நடக்கிறது.மக்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காக, பணக்காரர்கள் எதற்காக மானிய விலையில் கேஸ் வாங்க வேண்டும் என்பதாக நிதியமைச்சர் பேசுகிறார். 
“நான் எதற்காக மானிய விலையில் காஸ் வாங்க வேண்டும்,” என்று நேர்மையே உருவெடுத்துவந்தது போல் கேட்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. கேட்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது.

 ஆனால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் யார் என்பதை வரையறுப்பதில் எப்படி புள்ளிவிவரத் தில்லுமுல்லுகள் நடத்தப்படுகின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
வறுமையை ஒழிப்பதற்கு மாறாக, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துககாட்டுகிற மோசடி அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டு வந்திருக்கிறது. மற்றபடி பெரும் பணக்காரர்கள் ரேசன் கடையில் நின்று அரிசி கோதுமை வாங்குவதில்லை, மானிய விலை கேஸ் வாங்குவதில்லை.
உண்மையிலேயே அந்தப் பெரும்பணக் காரர்கள் ஆதாயமடைவதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால், அவர்களுக்குத் தரப்படுகிற பல லட்சம் கோடி வரிச் சலுகைகளைஅரசு விலக்கிக்கொள்ளட்டும்.
 2005-06முதல் இன்று வரையில் சுமார் 36.5 லட்சம் கோடி ரூபாய் அவர்களுக்கு வரிச் சலுகையாகவும் வரித் தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. 
இதுவும் மானியம் தானே?
 அதை நிறுத்தினால் இப்படி மக்களுக்கான மானியத்தில் கை வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 
அதற்கு இவர்கள் தயாரா?
அடுத்து, எரிவாயுவுக்கான அரசுப் பணம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும் என்றும், பின்னர் எல்லோரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என அரசு கூறுகிறது. 
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாத சட்டவிரோத ஏற்பாடுதான் ஆதார் அட்டை.
 உச்சநீதிமன்றமும் அதை மக்களுக்கான சேவைகளோடு இணைக்கக்கூடாது என்று ஆணையிட்டிருக்கிறது.
ஆக, நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத சட்டவிரோத, நீதிமன்ற விரோத ஏற்பாட்டைத்தான் மக்கள் மீது திணிக்கிறார்கள்.
குடிமக்களின் உடல் சார்ந்த அந்தரங்க அடையாளங்களைத் தெரிந்துகொள்கிற அதிகாரம் அரசுக்கு இருக்கலாகாது.
 அது பிற்காலத்தில், அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடியவர்களை முடக்குவதற்கும் அடக்குவதற்குமான ஏற்பாடுதான்.

அனுமனுக்கே ஆதார் அட்டை தந்த ராம ராஜ்யம்?
 உலக ஆக்கிரமிப்பு சக்திகளின் தேவைக்காகவே இந்த ஏற்பாடு. 
மக்கள் என்பவர்கள் ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் உள்ள பிறவிகள்.

அவர்களை வெறும் நம்பர்களாகவும் டிஜிட்டல் பிம்பங்களாகவும் மாற்றுவதுதான் இந்த ஆதார் அட்டை. 

ஆனால் இது இல்லாவிட்டால் எதுவுமே கிடைக்காது என்பது போன்ற மனநிலையையும் பதற்றத்தையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள். மக்களிடம் உண்மைகளை உரக்கச் சொல்லியாக வேண்டும்.

 உண்மை நோக்கங்களை உணரும் மக்கள் சக்திதான் அந்த பிம்பங்களைத் தகர்க்கும்.
=======================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?