கருப்புப்பணம் வரும்

ஆனா வராது


‘வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை திரும்ப கொண்டுவரும் வரை நான்ஓயப்போவதில்லை; ஏழைகளுக்குச் சேர வேண்டிய ஒரு நயா பைசாவையும் வெளிநாட்டில் விட்டு வைக்கமாட்டேன்‘ என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ந் தேதி வானொலியில் பேசும்போது குறிப்பிட்டார்.
கருப்புப்பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியனுக்கும் லட்சக்கணக்கில் பந்தி வைக்கப்போவ தாகவும் தேர்தல் பிரச்சார கூட்டங் களில் மோடி ஆரவாரம் செய்தார்.
பிரதமர் மோடியின் இத்தகைய தடாலடி அறிவிப்பு வெளியாகும் இதே நேரத்தில், கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கணவான்களைப் பாதுகாக்கும் திருப்பணியும் நடந்தேறி வருகிறது.
கருப்புப் பணத்தை பதுக்கியிருக்கும் நாடுகளிடம் இந்தியா இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ளதால் பணத்தை பதுக்கியிருப்பவர்களின் பெயர்களை வெளியிட இயலாத நிலை உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
 பட்டியலை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு காட்டியதையடுத்து மத்திய அரசு ஒப்படைத்தது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கருப்புப்பணம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
கருப்பின் புதிய பயணம்.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளது பற்றிய விவரங்களை அளிக்கு மாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து அரசிடம் கோரி வருகின்றன. ஆனால் அந்த நாட்டு அரசு விவரங்களை அளிக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் 2008-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் அந்த வங்கியின் வாடிக்கை யாளர்கள் விவரங்களை திருடி பிரான்ஸ் அரசிடம் அளித்தார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த விவரங்களை பிரான்ஸ் அரசு மத்திய அரசிடம் அளித்தது.
அப்பட்டியல் கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வு குழுவிடம் அளிக் கப்பட்டது.
இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி அந்தப்பட்டியல் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 628 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக்குழு இதுவரை நடத்திய விசார ணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
மொத்தமுள்ள 628 பேரில் 289 பேரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை. மேலும் 122 பேரின் பெயர்கள் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே எச்.எஸ்.பி.சி. பட்டியலைஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம்.
மேலும் வங்கிக் கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, பணப் பரிமாற்ற விவரங்கள் குறித்து பட்டியலில் எதுவும் இல்லை.
புதிய வடிவில் கருப்புப்பணம்

கருப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள பேர்வழிகளுக்கு தங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ள ரகசிய அறிவுரைகளை சுவிட்சர் லாந்து நாட்டு வங்கிகள் வழங்கியுள் ளன.
சுவிஸ் வங்கிகளிலிருந்து வேறுவெளிநாட்டு வங்கிகளுக்கு பணத்தைமாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

இந்திய அரசு நியமித்துள்ள சிறப்புப் புலனாய்வுக்குழு ஆய்வு செய்யும்போது கணக்கில் பணமே இல்லாத அளவுக்கு ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணத்தை வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்ற விருப்பம் இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேறு ஆலோசனைகளையும் சுவிட்சர்லாந்து வங்கிகள் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. 

அதன்படி கருப்புப்பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்நிய முதலீடாக மாற்றவும் ஏற்பாடு உள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி வழியிலும் திருட்டுக் கணக்கு எழுதி பணத்தை திருப்பி விடும் திட்டமும் உள்ளது. 

கருப்புப்பணத்தை தங்கம், வைரமாக மாற்றி அதை இந்தியாவில் இறக்குமதி செய்ததாக கணக்குக் காட்டும் ஏற்பாடும் உள்ளதாம்.

கருப்புப்பண பேர்வழிகளுக்கு இவற்றையெல்லாம் சிக்கலின்றி செய்வதற்கு புதிய அரசின் தாராளமய, கொள்கையின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

========================================================================================================
மோடியின்   மகாபாரதம்.


(‘மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்று கூறப்பட்டுள்ளது. மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளதை இது காட்டுகிறது. விநாயகரை நாம் வணங்குகிறோம். அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் அப்போதே இருந்திருக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். மகாபாரதத்தை தற்போது மோடி எழுதினால்..? ஒரு கற்பனை).
அஸ்தினாபுரம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. சோடியம் விளக்குகள், எல்ஈடி விளக்குகள், நியான் விளக்குகள் என வண்ண வண்ண விளக்குகள் எங்கெங்கும் ஜெகஜ்ஜோதியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தன. துப்பாக்கி சுடும் போட்டி நடக்க இருப்பதை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கான வீரர்கள் குழுமிவிட்டனர். புல்லட் ட்ரெயின்களிலும் சொகுசு பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
“அர்ஜூனனை வெல்ல அவனியில் யாருண்டு?” என்றும் “கர்ணனை மிஞ்ச குவலயத்தில் யாரும் பிறக்கவில்லை” என்றும் ஃப்ளெக்ஸ் பானர்கள் ஊர் நெடுக பளபளத்தன.
“கானக் கருங்குயிலே.. வரியா, வரியா”... “டார்லிங், டம்பக்கு.. டார்லிங் டம்பக்குடா..அடிடா”... “ஊதாக் கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்” போன்ற பாடல்கள் ஒலிபெருக்கிகளில் அலறின.
ஆண்களும் பெண்களும் இந்த சந்தர்ப்பத்தை ஷாப்பிங் செல்லப் பயன்படுத்திக் கொண்டனர். அடுக்குமாடி மால்களில் அனைத்து தளங்களிலும் வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது.
காதுகளில் இயர்போன்களைச் செருகிக் கொண்டு பலர் பாட்டு கேட்டுக் கொண்டோ, பேசிக் கொண்டோ சுற்றுப்புறத்தை மறந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.
மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் வாலிபர்கள் கூட்டம். நீண்ட வரிசையில் நிற்கப் பொறுமையில்லாத சிலர் மற்றவர்களின் தலைமீது ஏறி டிக்கட் கவுண்டரில் கையை நீட்டி டிக்கட் வாங்கிக் கொண்டனர். இதைக் கண்டும் காணாதவாறு காவலர்கள் குர்குரே, லேஸ் பொட்டலங்களிலிருந்து எடுத்துக் கொறித்தவாறு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிநவீன உணவு விடுதிகள், பார்களிலும் கூட்டம்.. கூட்டம்!
சிவகாசி பட்டாசுகளும் சீனப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. வானத்தில் ராக்கெட்டுகள் பறந்து சென்று வண்ண வண்ண ஜாலம் காட்டின.
பிஎம்டபிள்யு, பென்ஸ், ஆடி போன்ற நவீன கார்களில் கவுரவர்களும் பாண்டவர்களும் வந்திறங்கினர்.
அர்ஜுனனின் ஸ்மார்ட்போனில் “அய்யய்யோ... ஆனந்தமே” என்ற ரிங்டோன் சிணுங்கியது. எடுத்தால் பகவான் கிருஷ்ணர்!
போட்டி ஆரம்பிச்சாச்சா என்று கேட்டார் கிருஷ்ணர். ஆரம்பிக்க இருக்கிறது என்று அர்ஜூனன் பதில் சொன்னதும் பிஎம்டபிள்யு காரில் கிளம்பினார் பகவான்.
போட்டி தொடங்கியது. பல வீரர்கள் தோல்வியுற்றுத் திரும்பினர்.
கர்ணன் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தயாரானபோது “நில்” என்ற துரோணரின் குரல் கர்ஜித்தது. “உன் தந்தை, தாய் பெயரையும் சொத்து விவரங்களையும் கூறிவிட்டு நீ போட்டியில் கலந்து கொள்ளலாம்” என்றார் துரோணர்.
“ஙே” என்று விழித்தான் கர்ணன்.
சொத்துதான் வேண்டுமென்றால் அங்க தேசத்திற்கு அரசனாக கர்ணனை முடிசூட்டுகிறேன் என்றான் துரியோதனன்.இருந்தாலும் தந்தை, தாய் பெயரை கர்ணனால் சொல்ல முடியாததால் அவன் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று துரோணர் அறிவித்துவிட்டார்.பின்னர் அர்ஜூனன் துப்பாக்கி எடுத்து குறி தவறாமல் சுட்டு போட்டியில் வெற்றி பெற்றான்.
மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற வேறு பல போட்டிகளும் நடந்தன. அனைத்துப் போட்டிகளையும் வேறு நகரங்களில் இருந்த மக்கள் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.கவுரவர்களை ஆசீர்வதித்துவிட்டு ஐந்து மணி ஃப்ளைட்டைப் பிடிக்க அவசரமாகக் கிளம்பினார் பகவான் கிருஷ்ணர்.
கற்பனை : ராஜகுரு
நன்றி:தீக்கதிர்.

===========================================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?