பிச்சை காசை எண்ணி .....!

1984, டிசம்பர்-2 அதிகாலை 
அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. 
விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது.
 கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.
ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.
போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: 
சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம்.
 உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்!
 பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: 
“யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”

உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம் மட்டுமல்ல .ராஜீவ் தலைமையிலான அரசும்-காங்கிரசும்தான்.பாதுகாப்பு இல்லாமல் இந்த தொழிற்சாலை இயங்க உரிமம் கொடுத்ததும்.லடசக்கணக்கில் உயிர்கள் பாதிக்கப்பட்டு பூபால் நகரமே மயானமான போதிலும் ஆண்டர்சன் மீது வாடவடிக்கை எடுக்காமலும்,அவனை தனி விமானம் மூலம் அமெரிக்காவில் பாதுகாப்பாக வீட்டில் சேர்த்தும் தான் வாங்கிய பிச்சைக்கு செஞ்சோ ற்று கடன் தீர்த்தது.அதுமட்டுமின்றி யூனியன் கார்பைடை ,டவ் என்ற பெயரில் இயங்கவும் அனுமதித்துள்ளது.
எனவே காங்கிரசு அரசுதான் உண்மையான குற்றவாளி.  
போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். 
உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. 
அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.

பேரழிவுக்கு மத்தியில்தான் மனிதர்களின் உன்னத குணங்களும் அற்ப குணங்களும் வெளிப்படும் என்பது உண்மை. ஒரு முஸ்லிம் பெண்ணின் பிரேதத்தை மீட்புப் பணியினர் எடுத்துச் செல்ல முயன்றபோது இந்துப் பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
 தன் கையிலுள்ள வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களை அந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சூட்டிவிட்டுச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் பெண் என்னுடைய தோழி. 

நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மருத்துவமனையில் பிணங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒரு உடலிலிருந்து சிறு அசைவு தென்பட்டதைப் பார்த்து உடனடியாக டாக்டரிடம் தெரிவிக்க, இறந்துகொண்டிருந்த அந்த உயிரை டாக்டர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. 
வி.கே. சர்மாதான். உயிர்பிழைத்தாலும் வி.கே. சர்மா நடைப்பிணம் போன்றுதான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
 தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோரைக் காப்பாற்றிய அவருக்கு இந்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா? 35,000 ரூபாய்தான்.

ஈரத் துண்டு எத்தனை பேர் உயிரை அப்போது காப்பாற்றியது தெரியுமா? பிறருடைய உயிரைக் காப்பாற்றச் சென்றவர்கள்கூட ஈரத் துண்டை முகத்தில் பொத்திக்கொண்டுதான் சென்றார்கள். 
வலுகுறைப்பானாகத் திறம்படச் செயல்பட்டது ஈரத் துண்டு. பிழைத்தவர்களில் பலரும் கும்பிடும் தெய்வங்களுள் ஈரத் துண்டும் ஒன்று.

விஷவாயு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றவர்கள்தான். வேகமாக ஓடியபோது அதிகக் காற்றை உள்ளிழுக்க நேர்ந்ததால் விரைவாக அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிட்டால், வீடுகளில் ஒடுங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சற்றுக் குறைவே.

போபால் ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாதான் உண்மையான ‘நாயகன்’. விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு மத்தியில் அந்த ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்த கோரக்பூர் ரயிலின் பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே! 
லாந்தர்களுடன் அவர் அனுப்பிய ஆட்களாலும் ரயிலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாட்ஃபாரத்தை நோக்கி ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சர்மாவுக்குப் பகீரென்றிருந்தது. உடனடியாக ஒலிபெருக்கியில் உருது, இந்தியில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தார். 
மேலிட ஆணை இல்லாமல் ரயிலை உடனடியாகக் கிளம்பாமல் ஓட்டுநர் காத்திருந்தார். முகத்தில் பொத்திய ஈரத் துணியுடன் பிணக் குவியல்களைத் தாண்டி வேகமாக ஓடிய சர்மா, ஓட்டுநரிடம் அவசரஅவசரமாகத் தகவல்களைத் தெரிவிக்கவும், ரயில் உடனடியாகப் புறப்பட்டது.

சஜீதா பானுவின் நிலைதான் இன்னும் மோசம். போபால் பேரழிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவில் அவள் தன்னுடைய கணவர் முகம்மது அஷ்ரஃபை இழந்திருந்தார். 

அதாவது, அந்த விஷவாயுவின் முதல் பலியே அஷ்ரஃப்தான். போபால் பேரழிவின்போது தன்னுடைய குழந்தை ஒன்றையும் சஜீதா இழந்தார். இருந்தும், இன்று வரை அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

அந்தப் பேரழிவின்போது பலரையும் காப்பாற்றிய டாக்டர் சர்க்காரால் அதற்குப் பிறகு ஒருபோதும் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. போபால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பிணக் குவியல்களுக்கு மத்தியில் ஏதோ அசைவைக் கண்டிருக்கிறார். 
அருகே வந்து பார்த்தார்: இறந்துகிடந்த தன் தாயின் உயிரற்ற மார்பை ஒரு குழந்தை சப்பிக்கொண்டிருந்தது!
ராஜீவ் காந்தி -காங்கிரசு  ஆண்டர்சன் கொடுத்த பிச்சை காசை எண்ணி பங்கிட்டுக் கொண்டிருந்தது அப்போது.

                                                                           - ஆசை,
========================================================================================================================================================================================================

போபால் நகர் .
பாதித் தூக்கத்தில் எழுகிறது. 
மூச்சுத் திணறுகிறது. 
காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். 
அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது.
ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. 
இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.
கொலையான மழலைகளில் ஒன்றும்-கொலையாளியும் 
*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.
*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.
*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். 
மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. 
அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். 
அடுத்த சில மணிநேரங்களில் பிரதமர் ராஜீவ் கூறிய படி ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். 
அந்த கொலையாளியை இந்திய அப்பாவி மக்களை தனது லாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு கொன்று குவித்த ஆண்டர்சனை காங்கிரசு அரசு அவனின் பிச்சைக்காசை வாங்கிக் கொண்டு அரசு விமானத்திலேயே தக்க பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா அனுப்பி வைத்து தனது வாலை ஆட்டி விசுவாசத்தை தெரிவித்துக்கொண்டது.
அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். 
இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.
*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. 
ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.
*இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.
*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.
*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். 

2014 செப்.29 அன்று எல்லோரையும் போல் சாதரணமாகத்தான் இறந்தார்.
இந்தியர்கள் எண்ணுவது போல் தெய்வம் நின்றும் கொள்ளவில்லை.அவன் செய்த கொடுமைகளுக்கு சரியான கூலியும் கொடுக்கவில்லை.ராஜீவை போல் இந்தியர்கள் வணங்கும் தெய்வங்களும் கைக்கூலி [பரிகாரங்கள்]வாங்கிக்கொண்டதோ என்னவோ ?

*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். 
அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
                                                                                            - சமஸ், 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?