”பகத்சிங்”



இன்று  பகத்சிங்   நினைவு தினம்

 பகத்சிங்கின் சிந்தனைகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரராக மிளிர்ந்தார் என்பது மட்டுமல்ல, சோசலிசவாதியாகவும் திகழ்ந்தார்.
சோசலிசம் என்கிற சொல்லை மேலோட்டமாக அவர் பார்க்கவில்லை. மார்க்சிசம் - லெனினிசம் மற்றும் சோவியத் யூனியன் அனுபவங்களை ஆழமாகப் படித்து அதன் அடிப்படையில் இந்தியா ஒரு சோசலிச நாடாக மாறுவது என்பதுதான் பொருத்தமான தீர்வாக இருக்கும் என அவர் கருதினார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான முசாபர் அகமது, 1926இல் பகத்சிங்கைச் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார்.
 அந்த ஆண்டுதான் பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபா அமைக்கப்பட்டது. கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த முசாபர் அகமது மற்றும் அப்துல் மஜீத் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதற்காக பகத்சிங் வந்திருந்தார்.
 இவ்வாறு பகத்சிங்கின் தொடக்க கால அரசியல் வாழ்க்கையே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் பின்னிப்பிணைந்ததாகும்.
அதனால்தான் பகத்சிங்கின் புகழ்பெற்ற ஆவணமான, “நான் ஏன் நாத்திகன்’’ என்னும் நூலுக்கு முன்னுரை எழுதிய தலைசிறந்த வரலாற்றாசிரியர் பிபன் சந்திரா, “1925 முதல் 1928 வரை பகத் சிங் ஏராளமாகப் படித்தார்,
குறிப்பாக ரஷ்யப் புரட்சி சம்பந்தமாகவும், சோவியத் யூனியன் சம்பந்தமாகவும் பேராவலுடன் படித்தார்.
அந்தக்காலத்தில் இத்தகைய புத்தகங்களை வைத்திருப்பதே புரட்சிகரமான, மிகவும் சிரமமான பணியாகும். படித்ததுடன் மட்டுமல்லாமல் அந்த நூல்களில் தான் கிரகித்தவற்றைத் தன் சக தோழர்கள் மத்தியிலும் விதைத்தார்,’’ என்று எழுதியிருக்கிறார்.
 1928இன் இறுதியில் சோசலிசமே தங்கள் லட்சியம் என்று கூறியதுடன், இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்று இருந்த தங்கள் அமைப்பின் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் என்றும் மாற்றி அமைத்தனர்.
சோசலிசம் என்ற சொல்லின் பொருளை மிகச் சரியாகப் புரிந்துகொள்வது என்பது அந்தக்காலத்தில் அவ்வளவு எளிதானது அல்ல. ஆயினும் பகத்சிங் அதனை மிகச் சரியாகக் கிரகித்துக்கொண்டதுடன் தன் சக தோழர்கள் மத்தியிலும் அதனைத் தெளிவுபடுத்தினார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பகத்சிங் இந்துஸ்தான் குடியரசு சங்கத்தை ஆரம்பித்தபோது  பயப்படவில்லை.
ஆனால், அதனை பகத்சிங், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் என்று மாற்றியதற்குப்பின் உண்மையிலேயே மிரண்டது.
அதன்பின் காவல்துறையினரின் பிடியில் சிக்கும்போதெல்லாம், பகத்சிங்கைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.
ஒரு சமயம் விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு பகத்சிங்கும், அவருடன் அவரது சக தோழர்களான சிவ வர்மா மற்றும் அஜாய் குமார் கோஷ் ஆகியவர்களும் அழைத்துவரப்படுகையில், குண்டர் படையினர் பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் நீதிமன்றத்தின் வாசலில் மாஜிஸ்ட்ரேட் கண்முன்னாலேயே, அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த சமயத்தில், பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட்ஸ் என்பவன், பகத்சிங்கைச் சுட்டிக்காட்டி, “இவன்தான் அனைத்திற்கும் காரணம், இவனை நையப் புடையுங்கள்,’’ என்றான்.
இக்கொடுமைகள் அனைத்தும் மாஜிஸ்ட்ரேட் கண்முன்னாலேயே நடந்தன. பின்னர் இத்தனை அக்கிரமங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மாஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து, பகத்சிங், “சிவவர்மா மூச்சுபேச்சு இல்லாமல் கிடக்கிறார். அவர் இறந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு,’’ என்று கர்ஜித்தார்.
 பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடவடிக்கைகள் கண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிரண்டது.
பகத்சிங்கும் அவரது தோழர்களும் மேற்கொண்டு வந்த பல்வேறு இயக்கங்கள் காரணமாக மக்கள்மத்தியில் அவர்களது புகழ் காந்திக்கு இணையாக இருந்தது என்றே சொல்லலாம்.

 இதானாலேயே வெள்ளைக்காரர்கள் பகத் சிங்கை தூக்கிலிட மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து கொண்டிருந்த போது காந்தி பகத்சிங் ஒரு தீவிரவாதி அவரால் இந்திய மக்களுக்கு ஆபத்து அவரை தாராளமாக தூக்கிலிடலாம் என்று மறை முகமாக வெள்ளையர்களிடம் கூறினார்.
அதன் மூலம் விடுதலைப் போராட்டத்துக்கு தான் மட்டுமே மய்யமாக இருக்க லாம் என்று அவர் நினைத்தார்.அதே நிலைதான் சுபாஷ் சந்திர போஸ் ,தமிழகத்தில் வ.உ.சி,ஆகியோருக்கும்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்டவுடனேயே கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஊழியர்கள் பகத் சிங்,ராஜகுரு,சுகதெவ் தூக்கை ஆதரித்த மகாத்மா காந்திக்கு கறுப்பு ரோஜாக்களைக் காட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி குரல் எழுப்பினர்.இந்தியா முழுக்க காந்திக்கும்,பிரிட்டிசாருக்கும் எதிரான போராட்டங்கள் நடந்தான்.அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டன..
இந்திய விடுதலைக்காக ஒரு குடும்பமே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நாட்களை கழித்தது என்பது பகத்சிங்கின் குடும்பத்துக்கே பொருந்தும். பாட்டனார், தந்தை, சித்தப்பா மூவருமே சுதந்திர போராட்ட வீரர்கள்.

1907 செப்.,27-ல் பகத்சிங் பிறந்தபோது சிறையில் இருந்தார் தந்தை கஹன்சிங். 'இந்தியா இந்தியருக்கு' என்று முதலில் முழங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்ட தயானந்த ஆங்கிலோ வேத பள்ளியில் படித்தார். பள்ளிப் பாடங்களை விட சமூக நிகழ்வுகளே அவரது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
விடுதலைப் போரில் வீரச்சிறுவன்
தனது 14ம் வயதில் நெஞ்சுறுதியுடன் தேசவிடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்ட பகத்சிங், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேய அரசு வழங்கிய பள்ளிப் பாடபுத்தகங்களை கொளுத்தினார். விடுதலைப் போரில் முழுமையாக பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக இந்நிகழ்வு பகத்சிங்கின் மனதில் பதிந்தது. ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியவுடன், காந்திய வழி போராட்டத்தில் நம்பிக்கையிழந்த பகத்சிங் இளம் புரட்சியாளர் இயக்கத்தில் இணைந்தார்.

அவரது வேகத்தை கண்ட பெற்றோர், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் அது தனக்கு தடையாக இருக்கும் எனக்கருதி மறுத்தார். நண்பர் சுகதேவ் மற்றும் யஷபாங் உடன் இணைந்து 'நவஜவான் பாரத சபா'வை 1926-ல் துவக்கினார்.
போராட்ட இளைஞன்
1919ல் சட்டத்தின் செயல்பாடுகளை ஆராய சைமன் கமிஷன் (வெள்ளையர் கமிஷன்) 1928-ல் இந்தியா வந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் அறப்போராட்டங்கள் நடந்தன. லாகூர் ரயில் நிலையம் அருகே 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதிராய் தலைமையில் ஊர்வலம் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் ஸ்காட் உத்தரவுபடி தடியடி நடந்தது. இதில் காயமுற்ற லஜபதிராய் மரணமடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்க தயாரானது பகத்சிங்-கின் இளம் புரட்சிப்படை. ஆனால் காவல் நிலைய வாசலில் பகத்சிங்கி-ன் நண்பர்கள், துணை கண்காணிப்பாளர் சாண்டர்சை சுட்டுக் கொன்றனர்.

இதற்காக பகத்சிங்-கின் படை வருத்தம் தெரிவித்தது. எனினும் கைதிலிருந்து தப்பித்து நாட்டு விடுதலைக்காக இன்னும் போராட நினைத்த பகத்சிங், தான் சார்ந்த புனித மதத்தின் கோட்பாடுகளையும் மீறி மொட்டையடித்து மறைமுக வேள்வியை தொடர்ந்தார்.பாதுகாப்பு, தொழில் தகராறு மசோதாக்களுக்கு எதிராக தமது குரலை ஒலிக்கச் செய்ய பார்லிமென்ட் மீது குண்டுகள்
வீச உறுதியாக இருந்தது பகத்சிங்-கின் புரட்சிகர இயக்கமான இந்துஸ்தான் சோஷயலிஸ்ட். யாருக்கும் காயம், பலி ஏற்படக்கூடாது என்பதில் பகத்சிங் உறுதியாக இருந்தார்.

ஏனெனில் பகத்சிங் தீவிரவாதி அல்ல. ஒரு புரட்சியாளர். திட்டமிட்டபடி 1929 ஆக.,8ல் பகத்சிங்கும், பட்டுகேஷ்வர்தத்தும் பார்லிமென்ட் நுழைவாயிலில் வெடிகுண்டு வீசிவிட்டு “இன்குலாப் ஜின்தாபாத்” என்று முழங்கிவிட்டு சென்றனர். முன்னதாக “செவிடர்களை கேட்க செய்யவேண்டுமானால் பலத்த சத்தம் அவசியமாகிறது” என்ற வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வீசினர்.

அசாதாரண வீரன்:பார்லிமென்ட் தாக்குதல், லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட பகத்சிங் “உங்கள் வெள்ளையர் நீதிமன்ற தீர்ப்பின்படி நாங்கள், உங்கள் அரசின் மீது போர் தொடுத்துள்ளோம். ஆகவே நாங்கள் போர் குற்றவாளிகள். ஒரு போர் குற்றவாளியைப் போலவே எங்களை நடத்த வேண்டும். உங்கள் ராணுவத்தின் துப்பாக்கியால் சுட்டே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஆகையால் நீதிமன்ற தீர்ப்பின்படியே நீங்கள் நடக்க வேண்டும்” என்றுக்கூறி, கோடானகோடி இந்திய இளைஞர்களின் நெஞ்சரத்தை ஆங்கிலேயருக்கு புரியவைத்த அசாதாரண வீரன்.

“புரட்சி என்பது மனிதசமுதாயத்தில் பிரிக்க முடியாத அங்கம், சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதை யாரும் தடுக்கமுடியாது” என்று சிறைக் கம்பிகளுக்குபின் நின்று வெள்ளையர்களுக்கு பாடம் நடத்தியவர் பகத்சிங்.

கடைசி நிமிடங்கள்:சிறையில் பகத்சிங்-கை தோழர்கள் இறுதியாக சந்தித்தபோது, 'தோழனே, நீ மரணத்தை நெருங்கிவிட்டாய். இதற்காக நீ கவலைப்படவில்லையே? எனக்கேட்க, 'நாட்டு விடுதலைப் போராட்டத்தில் முதலடி எடுத்துவைத்த போதே என் உயிரை நம் தாய்நாட்டுக்கு தந்து விட்டேன். நாங்கள் விதைத்த (இன்குலாப் ஜின்தாபாத்) முழக்கம் நாடு முழுவதும் இன்று கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலிருந்து உணர்வாய் உயிராய் எழுவதை இந்த சிறையிலிருந்து என்னால் கேட்க முடிகிறது” என்றார் பகத்சிங்.

தனது தம்பி குல்வீர்க்குமாருக்கு 1931-ல் எழுதிய கடைசி கடிதத்தில், “நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவது போல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் குறிக்கோள் என்றும் நிலைத்திருக்கும். இன்று மறைந்து நாளை மீண்டும் பிறப்போம். நம் இந்தியத் தாய்களின் வயிற்றில் எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில்” என்று குறிப்பிட்டு, மறுநாள் (மார்ச் 23) துாக்கு மேடை நோக்கி வீரநடைபோட்டு 24 வயதில் இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுத்து இளைஞர்களின் இதயங்களை வென்ற வீரனாய் மறைந்தார் பகத்சிங்.
சிறையிலிருந்தபோது பகத்சிங்கின் வயது வெறும் 22தான்.
அந்த வயதிற்குள் அவருக்கு பஞ்சாபி, உருது, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் மிகவும் நன்றாகத் தெரியும். அவரது சிறைக்குறிப்பில் அவர் 108 ஆசிரியர்கள் மற்றும் 43 புத்தகங்களைப் படித்து அவை குறித்து அடிக்கோடிட்டிருக்கிறார்.
மதம் குறித்து காரல் மார்க்ஸ் எழுதிய நூல், உடோப்பியன் மற்றும் அறிவியல்பூர்வமான சோசலிசம் குறித்து ஏங்கெல்ஸ் எழுதிய நூல் உட்பட எண்ணற்றவர்களின் நூல்களை அவர் படித்திருந்தார். 
இது எல்லாம் இளைஞர் பகத்சிங்கிற்கு எப்படிச் சாத்தியமானது?
 நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அவருக்கிருந்த அளவிடற்கரிய அக்கறை மற்றும் அர்ப்பணிப்புதான் அவரை இந்த அளவிற்கு உருக்குப் போன்று உறுதிபடைத்த மனிதராக உருவாக்கி இருக்கிறது.
 அத்தகைய பகத்சிங் நினைவுதினம் இன்று.
 நாட்டின் விடுதலைக்காக மட்டுமல்ல, மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காகவும் தன் வாழ்நாளை இளம் வயதிலேயே அர்ப்பணித்த அந்த மாமனிதனின் நினைவை நெஞ்சில் ஏந்தி, இன்றைய மதவெறியர்களின் வெறித்தனமான, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசும் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளை முறியடித்திட, பகத்சிங்கின் புகழ்பெற்ற முழக்கமான இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமிட்டு உறுதி ஏற்போம்.
==========================================================================
இன்று 
மார்ச் -23.
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  • உலக வானிலை தினம்
  • பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
  • தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)
=============================================================================

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?