உண்மையை நிர்வாணமாக்கி


ஜெயா – சசி கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு என்ற கத்தி தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். 
இதை அவரது அரசியல் துணிச்சலாகக் கருத முடியுமா? அப்படித்தான் அவரது பாதந்தாங்கிகள் பலரும் சித்தரிக்கின்றனர். 
கிரிமினல் குற்றக் கும்பலின் தலைவன் பாலியல் வன்முறையிலோ, வழிப்பறிக் கொள்ளையிலோ ஈடுபடுவதை அவனது துணிச்சலாகக் கருத முடியுமா!
நீதிக்கு கல்லறை கட்டிய ஜெயாசொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா – சசி கும்பலை விடுதலை செய்யும் கர்நாடகா உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த இரண்டே நாட்களில் ஜெயலலிதா பதவி ஏற்கத் துடித்தார். 
குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள மோசடிகள் அடுத்த நாளே அம்பலமாகியதால் பதறிப்போன ஜெயா-சசி கும்பல் வாலைச் சுருட்டிக் கொண்டது. மர்ம மாளிகையான போயஸ் தோட்டம் வழக்கம்போலச் சதியாலோசனைகளில் மூழ்கியது. அம்பலப்பட்டுபோய் நாடு முழுக்க நாறிய குமாரசாமியின் தீர்ப்பின் மோசடிகளை அவரையே வைத்து சமாளிக்கும், சரிக்கட்டும் முயற்சியில் சிலநாட்கள் ஈடுபட்டது. அந்த முயற்சியிலும் தோற்றுப்போன நிலையில், விடுதலையான பிறகும் பதவியேற்காமல் கால தாமதப்படுத்துவது மக்களிடையே மட்டுமல்ல, தனது விசுவாச அடிமைகளிடையேகூட அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும்; 
ஆதலால், இருட்டிலே நடக்கும்போது உள்ளுக்குள் உதறலெடுத்த பயந்தாங்கொள்ளி உரக்கப் பாடுவதைப்போல, தனக்குப் பாதகமான அரசியல் நிலைமைகளிலும் தான் தோற்றுப்போய் முடங்கிவிடவில்லை என்று உதார் காட்டிக்கொள்ள பதவியேற்றுள்ளார் ஜெயலலிதா. 
அதைவிட முக்கியமாக, தான் முதலமைச்சராகிவிட்டால், ஏதாவது அரசியல் சட்டச் சிக்கலை ஏற்படுத்தித் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் நம்புகிறார்.
அவரது எடுபிடிகளான மந்திரிமார்கள் தலைமையில் எடுத்த பால்குடங்களும், தீச்சட்டிகளும், நடத்திய யாகங்களும், ஹோமங்களும், பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும், தற்கொலை உயிர்ப்பலிகளும் எதுவும் ஜெயலலிதாவைக் காத்துவிடவில்லைதான். அவருக்கு வாய்த்த அரசியல் அடிமைகள் என்னவோ நிரம்பவும் விசுவாசிகள்தாம், தான் காலால் இட்டதைத் தலையால் செய்பவர்கள்தாம் என்றாலும் சொத்துக் குவிப்பு வழக்கைப் போல எல்லாவற்றையும் சொதப்பிவிடுகிறார்கள். 
ஆகவே, தனது பினாமிகளை வைத்து ஆட்சி நடத்துவதைவிட தானே நேரடியாக அதிகாரத்துக்கு வந்து அரசியல் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைவர் பிரணவ முகர்ஜி, தலைமை நீதிபதி தத்து போன்ற பார்ப்பனிய சக்திகளின் ஆலோசனையும் பின்புல வாக்குறுதியும் இல்லாமல் ஜெயலலிதா பதவி ஏற்று விடவில்லை. இருந்தாலும், மீண்டும் தண்டனைத் தீர்ப்பு வந்துவிடும் என்ற உதறல் இல்லாமல் இல்லை. அந்த உதறலை மறைக்க வெறும் உதார் கிளப்பிக் கொண்டிருக்கிறது, ஜெயா-சசி கும்பல்.
இதற்கேற்றவாறு ஜெயலலிதா மீது மக்களிடையே பிரமையூட்டி நம்பிக்கை ஏற்படுத்தும் வேலையை மீண்டும் பார்ப்பன மற்றும் பிற பிழைப்புவாத ஊடகங்கள் மேற்கொள்கின்றன. “ஜெயலலிதா அறியாமல் அவரது ஆட்சியில் எவ்வளவுதான் குற்றங்கள் நடந்திருந்தாலும், அவரே ஏதாவது தவறுகள் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள்; என்னதான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனை பெற்றாலும் அவர்மீது மக்களுக்கு அனுதாபம்தான் பெருகியிருக்கிறது. 
அவரும் தமது கடந்தகாலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டுவிட்டார்; திருந்திவிட்டார். இனிமேலும் மக்கள் நல, நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்வார். தற்போதே தமிழ்நாட்டில் ஜெயலலிதா தன்நிகரற்ற தலைவர். அவரை யாரும் வெல்ல முடியாது. 
எதிர்க்கட்சிகளெல்லாம் செல்லாக் காசுகளாகி விட்டன” என்று இடைவிடா தொடர் உருமிமேளம் கொட்டுகின்றன.
ஆனால், பார்ப்பன பாசிச வக்கிரங்களில் ஊறிப்போன ஜெயலலிதா திருந்தவே திருந்தாதவர் என்பதை ஒருமுறையல்ல, மூன்று முறை தமிழக மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஜெயா-சசி கும்பல் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணத்தில் இருந்து வீசியெறியப்படும் எச்சிலுக்கு விலைபோன பார்ப்பன மற்றும் பிற பிழைப்புவாத ஊடகங்கள் வேண்டுமானால் அக்கும்பலின் அதிகார அக்கிரமங்களை மக்களிடமிருந்து மூடிமறைக்கலாம்.
 ஜெயா-சசி கும்பலிடம் மீண்டும் மீண்டும் அரசியல் கூட்டு வைத்துகொண்டு ஆதாயம் அடைந்த போலி கம்யூனிசக் கட்சிகள் உட்பட பிழைப்புவாதிகள் வேண்டுமானால் மீண்டுமொருமுறை அத்தகைய வாய்ப்புக்காக நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஏமாந்து போகலாம். இந்தச் சக்திகளைவிட ஜெயா – சசி கும்பல் பெரிதும் நம்பியிருப்பது வேறு சில காரணிகளைத்தான். அக்கும்பலால் கணிசமான தமிழக மக்கள் சாராய போதையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்;
 பணத்துக்கும் இலவசங்களுக்கும் பிரியாணிக்கும் பேரம்பேசி ஓட்டுக்களை விற்கக் கூடியவர்களாக கணிசமான தமிழக மக்கள் மாற்றப்பட்டு விட்டார்கள். தாம் கோடிகோடியாகக் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணத்தில் இருந்து ஒருபகுதியை வீசியெறிந்து தேர்தல்களில் இவர்களை விலைக்கு வாங்கி
விட முடியும் – என்று இச்சீரழிந்த ஓட்டுவங்கியை நம்பித்தான் ஜெயா – சசி கும்பல் இன்னமும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது.
பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசியல்-கிரிமினல் குற்றக்கும்பல்களின் இரகசிய வலை பின்னலைப் பயன்படுத்தி அரசியல், சட்டத்துறை மற்றும் நீதித்துறைகளில் உயர்பதவி வகிப்பவர்களை ஜெயா-சசி கும்பல் விலைக்கு வாங்கிவிட முடியும். 
கர்நாடகாவிலும் தில்லியிலும் அக்கும்பல் மேற்கொண்ட முயற்சிகளால்தான் விடுதலைத் தீர்ப்பை வாங்க முடிந்தது. 
இதற்காக நீதிபதி குமாரசாமி மட்டுமல்ல, கர்நாடகாவின் சட்ட அமைச்சர் உட்பட நான்கு மந்திரிகள் மற்றும் கர்நாடகா காங்கிரசின் ஒருபகுதி நிர்வாகிகளும் ஜெயா-சசி கும்பலுக்குச் சேவை செய்தது இப்போது அம்பலமாகியுள்ளது. 
இந்த முயற்சியில் இப்போது சிக்கலானாலும், தில்லியிலுள்ள பார்ப்பன அதிகார வர்க்கத்தினரையும், மோடி உட்படத் தனது தனிப்பட்ட நட்புத் தொடர்புகளையும், நாடாளுமன்றத்தில் தனக்குள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையையும் வைத்துப் பேரம் பேசி உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை வாங்க முடியும் என்று ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருக்கிறார். கடைசி முயற்சியாக ஏதாவதொரு வகையில் பொது மன்னிப்புக் கோரி மோடி, பிரணவ முகர்ஜி, தத்து ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று அவர் நம்புகிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தை முன்நிறுத்தி அரசியலில் தூய்மை, நீதி, நேர்மை, நியாயம் என்பதாக ஒரு சமூக, அரசியல் மதிப்பீட்டு மாயையை உருவாக்கி வந்துவிட்டு, இப்போது ஒரு பார்ப்பனக் கழிசடையை எப்படியாவது காப்பாற்றி, பதவியில் இருத்தி வைத்துக் கொள்வதற்காக எத்தகைய இழிநிலைக்கும் பார்ப்பன பாசிச சக்திகள் தாழ்ந்து போகும் என்பதையே இது காட்டுகிறது. 
“சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு” – என்ற மனுநீதிதான் நாட்டில் கோலோச்சுகிறது. 
இந்த உண்மையை நிர்வாணமாக்கிக் காட்டுகிறார், ஜெயலலிதா.
____________________________
புதிய ஜனநாயகம், 
ஜூன் 2015.
நன்றி:வினவு.____________________________



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?