மார்ச் 6,தி.மு.க ,ஆட்சி மலர்ந்தது...!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாவும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டெம்பர் 17, 1949-ல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. 
திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லைஎன்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.

1953 ஜூலை 14, 15-ல் அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை நான்சென்ஸ் என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.

1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2-வது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு திருத்தம் வேண்டும் என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2-ல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
19.4.1961-ல் அக்ககட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961-ல் திமுக பேரணி நடத்தியது

1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் திராவிட நாடு விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரசாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.

1963-ல் பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதாவை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான திராவிட நாடு விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று அக்கட்சியின் குறிக்கோள் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17-ல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து ஜனவரி 26 இந்திய குடியரசு நாளை துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது .1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?