உப்பு மண்ணில் உருக்கொண்ட வைரம்



350 ஆண்டுக் காலம் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷாரை எதிர்த்து எண்ணற்றவர்கள் போராடினார்கள். 


அடிமைத் துயிலில் ஆழ்ந்திருந்த தமிழகத்தில், தம் வீர உரைகளால், செயல்களால் சுதேசி கனலைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தவர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் என்ற வ.உ.சி. 

 பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம்தான் அவர் உதித்த மண்.
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 

பின்புதிருச்சியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். 
ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியைத் துவக்கிய வ.உ.சி குற்றவியல் துறையில் சிறந்து விளங்கினார்.காவல் துறையினர் தொடுக்கும் பொய்வழக்குகளால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு கட்டணம் வாங்காமல் வாதாடினார். 

லஞ்சம் பெற்ற ஏகாம்பர ஐயர் என்ற துணைக் குற்றவியல் நீதிபதி மீது வழக்குத் தொடுத்து அவருக்கு தண்டனை பெற்றுத்தந்தார்.காவல் துறை, நீதித் துறை அதிகாரிகளின் பகை அதிகரித்தது. 
இதை விரும்பாத வ.உ.சியின் தந்தை, தூத்துக்குடி சென்று வழக்கறிஞர் பணியைச் செய்யுமாறு வ.உ.சியை அனுப்பி வைத்தார். ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை. 

அதை அடைந்தே தீருவோம்’ என்ற திலகரின் முழக்கம், மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த நேரம். வ.உ.சி. சுதேசி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக இந்தியர்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் சுதேசிப் பண்டகச்சாலை என்று ஓர் அமைப்பை நிறுவினார். 
தருமநெசவுச் சாலை என்ற பெயரில் நூற்பாலை ஒன்று கட்டவும் முயற்சி செய்தார். இதற்கான நிதியை வ.உ.சியால் சேகரிக்க முடியாததால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.

துறைமுக நகரமான தூத்துக்குடியில் பி.ஐ.எஸ்.என் என்ற வெள்ளையரின் நிறுவனம், தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தையும் தனது கப்பல்கள் வாயிலாக நடத்தி வந்தது. இந்த இரு நகரங்களும் தங்களது காலனி ஆட்சியின்கீழ் இருந்ததால் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி லாபகரமாகக் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.அதே நேரத்தில் சரக்குகள் ஏற்றுவதில் வெள்ளையர்களின் நிறுவனங்களுக்கே அந்தக் கப்பல் நிறுவனம் முன்னுரிமை வழங்கியதால், இந்திய வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 

இதனால் இந்திய வியாபாரிகள் சிலர் 1906 ஆம் ஆண்டில் தூத்துக்குடி – கொழும்பு இடையே கப்பல் விடுவதற்காக முயற்சி செய்தனர்.ச.வ. நல்லபெருமாள் பிள்ளை என்பவர் சி.வ.கம்பெனி என்ற பெயரில் கப்பல் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். 

மும்பையைச் சேர்ந்த ‘ டாஜ் பாயி’ என்ற கப்பல் முதலாளியுடன் குத்தகை அடிப்படையில் கப்பல் வாங்க ஒப்பந்தம்செய்துகொண்டார்கள். ஆனால் ஆங்கிலேயரின் பி.ஐ.எஸ்.என் கப்பல் கம்பெனியும், வெள்ளை அதிகாரிகளும் சூழ்ச்சி செய்து குத்தகைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே டாஜ் பாயி கப்பல்களைத் திரும்பப் பெறச் செய்துவிட்டனர். 

இவ்வாறு தூத்துக்குடியில் உருவானஇந்தியக் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. இந்நிலையில்தான் வ.உ.சி சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்.
‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ என்றப் பெயரில்இந்நிறுவனம் 1906 ஆம் ஆண்டு, அக்டோபர்திங்கள் 16- ஆம் நாள் பதிவு செய்யப்பட்டது. 

இதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாகமுடிவு செய்தனர். 
பங்கு ஒன்று ரூ.25 வீதம் 10 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மூலதனத்தைத் திரட்ட முடிவு செய்தனர். 

இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே பங்கு சேர்ப்பது என்று முடிவு.இந்நிறுவனத்தின் தலைவராக பாலவநத்தம் ஜமீன்தாரும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான பாண்டித்துரைதேவர் நியமிக்கப்பட்டார். 

உதவிச்செயலாளராக வ.உ.சியும், குழு உறுப்பினராக சேலம்விஜய ராகவாச்சாரியாரும் இடம் பெற்றிருந்தனர்.இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்க வ.உ.சி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
இதற்காக வ.உ.சிமும்பை சென்றிருந்தபோதுதான் நோயுற்றிருந்த அவரது மூத்த மகன் உலகநாதன் இறந்துபோனார். ஆனால் வ.உ.சி தனது பணியை முடிக்காமல் ஊர் திரும்ப விரும்பாததால் தனது மகன் இறப்பிற்கு கூட வரவில்லை. 

அவ்வாறுஅவர் உழைத்ததன் பயனாய் 1907 ஆம் ஆண்டுமே மாதத்தில் எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு கப்பல்கள் தூத்துக்குடிவந்தன.
1908, பிப்ரவரி 27- ஆம் தேதி ஊதியஉயர்வு,வார விடுமுறை மற்றும் இதர விடுமுறைவசதிகள் கோரி கோரல் மில் தொழிலாளர்கள் வ.உ.சி தலைமையில் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினார்கள். 
வேலை நிறுத்தத்தைத் தொடருமாறு வ.உசி, தொழிலாளர்களை ஊக்கப்படுத்தினார். இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது. 

இதைவெறும் ஊதிய உயர்வுக்கான போராட்டமாக வ.உ.சி கருதவில்லை. 

இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு திருப்பு மையமாக அமைந்த-சுதேசி இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தை இணைக்கும் நோக்கத்துடன் அவரது செயல்பாடுகள் இருந்தன. 
இறுதியில் கோரிக்கை ஏற்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டதால், வ.உ.சி 50 தொழிலாளர்களுடன் ஆலை மேலாளரைச் சந்தித்துப் பேசியதன் விளைவால் ஊதியம் அதிகரிப்பு, வேலை நேரம்குறைப்பு, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை போன்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டுப் போராட்டம் வெற்றி பெற்றது.விபின் சந்திரபால் என்ற சுதேசி இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டு 1908 மார்ச் 9 –ல்விடுதலையானார். 

அவர் விடுதலை நாளைச்சிறப்பாகக் கொண்டாட வ.உ.சியும் சுப்ரமணியசிவாவும் ஏற்பாடுகள் செய்தனர். வ.உ.சி. யின் மீது எரிச்சலாய் இருந்த மாவட்ட நிர்வாகம், இந்த இருவருக்கும் பொதுக்கூட்டத்தில் பேசத்தடை விதித்தது. 

இவர்கள் மீது குற்றவியல் சட்டம் 108 பிரிவின் கீழ் வழக்குத் தொடுத்தது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியராக இருந்தவிஞ்ச் என்பவரைப் பார்க்கச் சென்ற வ.உ.சி., சிவா இருவரையும் கைது செய்தனர். இதை எதிர்த்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்கள் எழுச்சியோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

வ.உ.சி, சிவாஉள்ளிட்டோர் அளித்த ஜாமீன் மனுவைசெசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தனர். உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவானது, மூன்றுநாட்கள் கழித்துத்தான் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட நீதிபதியுமான விஞ்சுக்குக் கிடைத்தது.உத்தரவு கிடைப்பதற்கு முன்பே வ.உ.சி, சிவா மீது அரசு நிந்தனை வழக்குத் தொடரஅரசிடமிருந்து அனுமதிபெற்று வைத்திருந்தனர். இதனால் உயர்நீதி மன்ற ஜாமீன் உத்தரவு பயன்படாமல் போனது. 

அரசு நிந்தனை வழக்கின் விசாரணைக் கைதிகளாக வ.உ.சியும், சிவாவும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வ.உ.சியின் மீதுதொடரப்பட்ட அரசு நிந்தனை வழக்கில் 1908–ல் ஜூலை 7- ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது.சிவாவிற்கு இருப்பிடம் தந்து உதவியதற்காக ஆயுள் தண்டனை, நாடு கடத்தல் தண்டனை, திருநெல்வேலியில் ஆற்றிய சொற்பொழிவிற்காக ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை விதித்து, இந்த இரு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.

வ.உ.சிக்கு அளித்த தண்டனையின்படி அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தமான் சிறையில் கைதிகள் அதிகமாக இருந்ததால் கோவைச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கோவைச் சிறையில் சணல் கிழிக்கும் இயந்திரம் சுற்றும் பணி வழங்கப்பட்டது. 

இதனால் வ.உ.சியின் கைத் தோல்கள் உரிந்து கொண்டிருப்பதை ஜெயிலர் பார்த்த பிறகு, எண்ணெய் ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாக பகல் வெயிலில் செக்கிழுக்கும் பணி அளிக்கப்பட்டது.
1908 – ஆகஸ்டில் வ.உ.சியின் ஆயுள் தண்டனை உயர்நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. 
1908 நவம்பரில் உயர்நீதி மன்றம் இரட்டை ஆயுள் தண்டனையை ஆறு ஆண்டுகள் நாடு கடத்தல் எனவும், நான்கு ஆண்டுகள் நாடு கடத்தல் எனவும் குறைத்து இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும்படி மாற்றினார்கள். 


இதன்பின் கடின உழைப்பிற்கு வ.உ.சி தள்ளப்பட்டார்.1911 டிசம்பரில் ஐந்தாம் ஜார்ஜ், தில்லியில் இந்திய மன்னராக முடி சூட்டிக்கொள்ளும் விழா நடைபெற்றது. 


இதையொட்டி இந்தியக் கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம் என முடிவானது. இந்திய அரசின் உளவுத் துறையோ வ.உ.சி விடுதலையானால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என அரசுக்குத் தகவல் அனுப்பியது. 


இவ்வாறு,பல தடைகளையும் மீறி 1912, டிசம்பர் 24 ல்கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி விடுதலையானார்.சிறையில் இருந்து வெளிவந்த பின்னால்திருப்போரூரில் தங்கி வங்கி ஒன்றில் அலுவலராகப் பணிபுரிந்தார். 

பிறகு சென்னை சென்றவ.உ.சி அரிசி, நெய் வியாபாரம் செய்தார்.

இதனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. 

இதையறிந்த திலகர், சுயராஜ்ய நிதியிலிருந்து மாதம் 50 ரூபாய் நிதியளித்து உதவினார்.
சிறை வாழ்க்கை, வறுமை, முதுமை காரணமாக உடல் நலம் குன்றிய நிலையில் கட்டிலிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு,1936 நவம்பர் 18 – ல் வ.உ.சி. இயற்கை எய்தினார்.

அந்த மகத்தான மனிதர் பிறந்த நாள் செப்டம்பர்- 5. 

இந்த நாளில், செக்கிழுத்த அந்தச்செம்மல் வ.உ.சி யின் தியாகத்தை நினைவு கூர்வோம். 

    -நாகை வி.மாரிமுத்து,                                                                                                                         
கட்டுரையாளர் ; சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்.
=======================================================================================
இன்று,

செப்டம்பர்-05.
  •  
  • இந்தியாவின் 2வதுகுடியரசுத்தலைவர்  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
  • ஆசிரியர் தினம்
  •  வ.உ.சிதம்பரனார்  பிறந்த தினம்(1872)

  • மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)

=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?