இந்தியாவில் GST!.அமெரிக்க மகிழ்ச்சி ?


இந்தியாவில் GST மசோதாவை நிறைவேற்றியது மிகவும் துணிகரமான முக்கியமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா G20 summit கூட்டத்தில் மோடியை பாராட்டியிருக்கிறார்.
இந்தியாவில் GST ஐ நிறைவேற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்? ஒருவேளை அமெரிக்க அதிபர் உலக ஏழை மக்களை வாழ வைக்கும் வளர்ச்சிக்காக ஏங்கும் ரட்சகராக இருப்பாரோ என்று பார்த்தால் வரலாறு அப்படியாக இல்லை. உலகத்தின் அனைத்து வளரும் மற்றும் ஏழை நாடுகளின் உழைக்கும் மக்களை கொலை செய்து ரத்தம் குடிக்கும் அரக்கன் எதற்காக இந்தியாவில் GST நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து காத்திருந்து பாராட்டி மகிழ வேண்டும்?
ஊடகங்கள் சொல்வதைப் போல உண்மையிலேயே GST யினால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா? 
GST என்பதே Ecommerce market என்று சொல்லப்படக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தையும், அவற்றை வைத்திருக்கிற வெளிநாட்டு பெரு நிறுவனங்களையும் வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு திட்டம்.
ஆன்லைன் நிறுவனங்கள் GST யினால் பெறப்போகும் சலுகை
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி(service tax), விற்பனை வரி(central sales tax (CST)), சுங்க வரி(customs duty) போன்றவற்றை செலுத்த வேண்டும். மாநில அரசுகளிடம் வாட் வரி(VAT – மதிப்புக் கூட்டு வரி), கலால் வரி(excise duty) போன்றவற்றை செலுத்த வேண்டும். பீகார், அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களில், அந்த மாநிலத்தை சாராத வெளி மாநில விற்பனையாளர்கள் தனி நுழைவு வரியினை செலுத்த வேண்டும். 

தில்லி, மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் எடுத்துச் செல்வதற்கும் இவர்கள் நுழைவு வரி செலுத்த வேண்டும். இது போன்ற பெரு நிறுவனங்களூக்கு தனி வரிகளை விதிப்பதன் மூலம் மாநில அரசுகளுக்கு தனி வருமானம் கிடைத்து வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைவதற்கு தனித்தனி வரிகள் கட்ட வேண்டி இருப்பதால் எங்களால் எளிதாக அனைத்து மாநிலங்களுக்குள்ளும் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என சேவை செய்யவே பிறந்தவர்களைப் போன்று இந்த நிறுவனங்கள் நீலிக்கண்ணீர் வடித்து வந்தன.
இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நேரடி விற்பனையாளர்கள் இங்கு கட்டுகிற வரியின் அளைவைக் குறைத்திடவே GST மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்காக கவர்ச்சிகரமான வாசகங்களை எல்லாம் போட்டு, “ இனி மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து விடும்”, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்து விடும்” என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜி.எஸ்.டி மசோதா விளம்பரப்படுத்தப்பட்டது. 
மாணவர்களின் கல்விக் கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்யக் கூட ஆயிரம் முறை யோசிக்கும் இந்திய அரசுதான், இந்த நிறுவனங்கள் செலுத்தும் வரி அளவினை குறைத்து, அவர்களின் சேவையைப் பெருக்க ஜி.எஸ்.டி யினைக் கொண்டு வந்திருக்கிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
மொத்தத்தில் மத்திய அரசின் பார்ப்பனிய-பனியா தரகர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை ஜி.எஸ்.டி ன் வாயிலாக அடித்து விட்டனர். ஒன்று பன்னாட்டு பெரு நிறுவனங்களின் லாபத்திற்காக பல் தேசிய இந்திய சந்தையை, ஒரே சந்தையாக மாற்றி திறந்து விடுவது. 
மற்றொன்று மாநில அரசுகளிடமிருந்து வரிவிதிப்பு அதிகாரத்தினைப் பறித்து அதனை எப்போதும் மத்திய அரசிடம் நிதிக்காக கையேந்தி நிற்கிற அமைப்பாக மாற்றுவது. 
இந்திய சிறு வணிகர்களின் நலனை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்தியா சாதித்திருப்பது இதைத்தான்.
இந்தியாவிற்கு ஜி.எஸ்.டி பொருந்துமா?
இந்தியா என்பது பல்வகைத் தன்மை கொண்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. அனைத்து மாநிலங்களின் பொருளாதார நிலைகளுக்குள்ளும் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்களும், வேறுபாடுகளும் இங்கு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தனிநபர் வருமானங்களின் விகிதம் என்பது மிகப் பெரிய வேறுபாடு கொண்டதாய் இருக்கிறது. 
உதாரணமாக கேரள மாநிலம் பீகாரைக் காட்டிலும் நான்கு மடங்கு பணக்கார மாநிலமாக இருக்கிறது. இத்தகைய அதிகபட்ச பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட தேசிய இனங்களைக் கொண்ட நாட்டை ஒற்றை சந்தையாக, ஒரே வதிவிரிப்பு முறைக்குள் கொண்டு வருவதென்பது சீரழிவிற்கே இட்டுச் செல்லும்.
தமிழகம் போன்ற உற்பத்தியை முதன்மையானதாகக் கொண்ட மாநிலங்கள், வரி விதிப்பு அதிகாரம் பறிக்கப்படுவதால் மிகப் பெரும் இழப்பை சந்திக்கும். ஆண்டுக்கு 9270 கோடி வருமானத்தை தமிழக அரசு இழக்கும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் தமிழக எதிர்கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நாம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை நமக்கு வரும்.
மறைமுக வரிகள் என சொல்லப்படக் கூடிய வரிகளை ஒற்றை வரியாக மாற்றுகையில் பெரிதாக லாபம் பெறக் கூடியவை Ecommerce ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களே. அந்நிய முதலீடு எனப்படும் FDI னை நாம் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த போது, சத்தமே இல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பின்வாசல் வழியாக அந்நிய முதலீடு உள்ளே நுழைந்தது. 
GSTன் காரணமாக இந்த ecommerce நிறுவனங்கள் (வரிவிதிப்புகளிலிருந்து விலக்கைப் பெற்றுக் கொண்டதால்) தங்களது பொருட்களை சாதாரண வணிகர்களை விட குறைந்த விலைக்கு சில காலத்திற்கு விற்பனை செய்யும். அதற்குள் நம் மக்கள் பொருட்களை வாங்குவதற்கு பெருமளவிற்கு ecommerce websiteகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டு விடுவார்கள். Ecommerce market ற்கு நம்மை பழக்கப்படுத்துவதற்குத்தான் ரிலையன்ஸ் ஜியோ-விற்கு இந்தியப் பிரதமர் பிராண்ட் அம்பாசடர் ஆக மாறியதும், Digital India, Free Basics, free wifi போன்ற திட்டங்களை நாடு முழுதும் அறிமுகப்படுத்தப்போகிறோம் என்று சொல்வதும்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், இனி(GST அமல்படுத்தப்பட்டதால்) உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர் என லட்சக்கணக்கானோர் ஒட்டுமொத்த இந்திய சந்தையை எளிதாக அணுகி பயன்படுத்த முடியும். 
இனி விநியோக சங்கிலியில்(Supply chain) தடையற்ற வளர்ச்சி இருக்கும். இந்தியா முழுதும் எளிதாக பொருட்களை விநியோகம் செய்ய முடியும் என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
PayTm நிறுவனத்தின் CEO வான விஜய் சேகர் ஷர்மா இது பற்றி கூறுகையில், வரிவிதிப்பு முறைகளில் ஒரு தெளிவினை GST கொண்டு வந்திருப்பதால் இது ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான வாய்ப்பாகும். தற்போது நுழைவு வரி மற்றும் ஏராளமான வழிமுறைகளால் பல மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுடைய இடத்திலிருந்து ஆன்லைனில் எல்லாவற்றை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது. 
இந்த சிக்கலான நடைமுறைகளை GST சரி செய்துள்ளதால் இது ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய சந்தைகளை திறந்துவிடும் என்று சொல்லி மகிழ்கிறார்.
நமது மக்கள் இணையதளத்தின் வழியாக ஒரு பொருளை வாங்கும் நிலையை எட்டுவதற்காகத்தான் இந்த உத்தமர்கள் நாள் முழுதும் வேலை பார்க்கிறார்களாம். 
இந்தியாவின் ஏழை மக்கள் எத்தனை கரிசனம் இந்த நிறுவனங்களுக்கு. கல்விக் கடன் வாங்கிய மாணவர்களை அடியாட்களை வைத்து மிரட்டி கொலை செய்து பணம் பறிக்கிற நிறுவனங்கள் தான், இந்திய ஏழை மக்கள் அனைவருக்கும் 4G டேட்டாவினை கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் லட்சியம் என்று விளம்பரம் செய்கிறார்கள். 
 இந்த பணக்கார நிறுவனங்களின் மகிழ்ச்சியில் இறைமையைக் காண்கிறது இந்திய அரசு.
இந்த Ecommerce market பெருக்கும் பட்சத்தில், இந்தியாவில் சிறு வணிகச் சந்தையை நம்பியுள்ள ஏராள்மான வணிகர்கள் தங்கள் தொழிலினை இழந்து, வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் தரகர்களாகவும், கூலிகளாகவும் மாறுவார்கள்.
இதற்கு நடுவே வால்மார்ட் போன்ற பிரம்மாண்டங்களும் நகரங்களில் முளைத்து வணிகர்களின் வாழ்வினை ஏற்கனவே பாதி அழித்து முடித்திருக்கும். 
அதனால்தான் தமிழகத்தில் வணிகர் சங்கம், GST மசோதா நிறைவேற்றப்படக் கூடாது என்று போராட்டத்தினை நடத்தி இருக்கிறது.
இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 741 பில்லியன் (2014-2015ன் கணக்குப்படி). அதாவது இந்திய ரூபாயில் சொல்வதென்றால் 49 லட்சம் கோடி. இது இன்னும் 3 வருடங்களில் 900 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த சில்லறை வர்த்தகத்தினை நடத்துவதில் 92% சதவீதம் சிறிய கடைகளும், சிறு நிறுவனங்களும் தான்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 6% பேர் சில்லறை வர்த்தகத்தில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அதாவது 7 கோடிக்கும் அதிகமானோர் இதன் மூலமாக வேலை வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். 
கடைகளற்ற தெருவோர வியாபாரிகள், மற்ற சிறு தொழிலாளர்கள், அவர்களது குடும்பம் என 20 கோடிக்கும் அதிகமானோர்  இந்த சிறு வர்த்தகத்தை சார்ந்து வாழ்கின்றனர்.
இவர்களது வாழ்க்கையில் தான் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், வால்மார்ட்களும் விளையாடப் போகின்றன. இந்த மொத்த சந்தையையும் இன்னும் சில வருடங்களில் இவர்கள் ஆக்கிரமிப்பார்கள். பன்னாட்டு மூலதனத்துடன் போட்டி போட முடியாமல் சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு கிளம்புவார்கள். 
வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டி, சில ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து விட்டு, பல லட்சம் பேரின் வேலையை இந்த நிறுவனங்கள் இழக்கச் செய்யும்.
இந்திய இணைய சேவையினை தங்கள் தரகர்களின் மூலமாக கட்டுப்படுத்தி, அவர்கள் விற்கிற பொருளையெல்லாம் வாங்கிக் குவிப்பதற்கான சந்தையாக நம்மை மாற்றுவதை Ecommerce நிறுவனங்களின் மூலம் செய்து முடிப்பார்கள்.
இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரண்பட்ட, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிற இந்த GST எனும் அரக்கனுக்கு, பாராளுமன்றத்தில் பாஸ் மார்க் கொடுத்ததற்காக அமெரிக்க அதிபர் பாராட்டி மகிழ்வதெல்லாம் இதற்காகத்தான். 
ஒபாமா பாராட்டியதைப் பற்றி செய்தி வெளியிட்ட பெரும்பாலான ஊடகங்கள் வணிகர் சங்கம் எதிர்த்ததைப் பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படப் போவதுடன், கல்வி என்பது அமெரிக்க முதலாளிகளின் டாலர்கள் புரளும் களமாகப் போகிறது. 
இந்திய ராணுவத் தளவாடங்கள் குறித்த ஒப்பந்தத்தையும் அமெரிக்காவுடன் போட்டு, இந்தியாவின் உழைக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. 
இந்தியாவின் பாதுகாப்பு அமெரிக்கா கையில் சென்று விட்டதால், இனி ஒபாமாவை திட்டும் போதுகூட, இங்கு தேச விரோத வழக்குகள் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நிலம் கையகப் படுத்தும் சட்டத்தினைக் கொண்டு வந்து make in india என்ற பெயரில் இந்தியாவின் மக்களின் நிலம் அமெரிக்க கம்பெனிகளுக்காக பறிக்கப்படவுள்ளது. 
தண்ணீர் தனியார்மயமாக்கல் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மசோதாவும் விரைவில் நிறைவேற்றப்படும். 
இப்படி நம் அடிப்படை உரிமைகள் அனைத்தும் அமெரிக்க மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு நாமெல்லாம் யார்?
இந்த கம்பெனிகளுக்காக உழைத்து அவர்களிடம் கூலி பெற்று, அவர்கள் விற்பனை என்கிற பெயரில் விற்றுத் தள்ளப் போகிற கழிவுகளை வாங்கிக் குவிக்கப் போகிற மந்தைகள்.
இனி நாம் ஒரு பன்னாட்டு சந்தை. நமது மதிப்பிற்கு விலை சந்தையில் முடிவு செய்யப்படும். நமக்கான அடையாள அட்டையை நாம் அந்த சந்தையில் பெறவில்லையென்றால் நாம் வாழத் தகுதியற்ற புறம்போக்குகள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளையனின் காலனிய ஆட்சிக்கு இந்தியா திரும்பிக் கொண்டிருக்கிறது. 1905 களுக்கு முன்பாக சென்று கொண்டிருக்கிறது. 
இந்த உலகமய சூழலில் இந்த கம்பெனிகளுக்காக உழைக்கப் போகும் நமக்கு தொழிலாளிகள் என்றுகூட பெயர் கிடையாது. ஏனென்றால் தொழிலாளிக்கான உரிமைகள் எதுவும் நமக்கு கிடையாது. 
நாமெல்லாம் கூலிகள். கூலிகளுக்கு தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் எதுவும் கிடையாது. தொழிலாளர் சட்டத்தினை தளர்த்தக் கோரி Make In India திட்டத்திற்கு இந்த கம்பெனிகள் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா யாருடனோ சண்டையிட விரும்பினால், இந்தியாவின் ராணுவமும் சண்டையிட வேண்டும். அதற்கான செலவுக்கும் சேர்த்தே நாம் உழைக்க வேண்டும். 
இனி நம் தெருக்கள் கேசினோக்களில் மிதக்கும். நமது உரிமைகளைப் பற்றி நாம் சிந்திக்காமலிருக்க ஊரெங்கும் பொழுதுபோக்கு மனமகிழ் கிளப்கள் உருவெடுக்கும். பிரேசிலைப் போல இங்கும் ஒரு வர்க்கம் ஒலிம்பிக்கைப் பார்த்துக் குதுகலிக்க, இன்னொரு வர்க்கம் சோறு கேட்டு ஒலிம்பிக்கினை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும். 
அமெரிக்க அரக்கனின் கால்பட்ட இடமெங்கும் இவை நடந்திருக்கிறது. இந்தியாவில் மன்மோகன் சிங்கின் மூலமாக 1990இல் ஆரம்பித்த இந்த சுரண்டல் படலம் இப்போது மோடியின் வாயிலாக உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. 
இவற்றையெல்லாம் எதிர்க்காமல் சுயசார்பு, தேசியம் என்றெல்லாம் இனி பேசவே முடியாது.
இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகளாக இருக்கக் கூடிய சிபிஐயும், சிபிஎம் மும் கூட இந்த பன்னாட்டுக் கொள்ளையை அங்கீகரித்து GST மசோதாவை ஆதரித்திருப்பது கொடுமை.
நமது தலை விதியை டில்லியில் அமர்ந்துகொண்டு முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? 
இந்தியா அனைத்து தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்ற மார்க்சின் கூற்றில்தான் எத்தனை உண்மை இருக்கிறது. இன்றைய ஏக இந்தியா காலனியத்தின் நீட்சியே. 
இந்த ஏக தேசியப் பொருளாதார சுரண்டலிலிருந்து விடுபட, தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கோருவதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நம் சந்ததிகளுக்கு எத்தகைய தேசத்தை நாம் தரப் போகிறோம். 
நாம் வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென நமது மூத்த தலைமுறை போராடியது. 
ஆனால் நாம் நமது குழந்தைகளை அமெரிக்க வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கொஞ்சமும் கூச்சமின்றி அடிமையாக  மோடி ஆடசி மூலம்  கொடுத்து வருகிறோம்.
முன்னர் நம்மை ஆண்ட அரசர்கள் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனிக்கு சுயலாபத்துக்கு விலைபோய் இன்தியாவையே 300 ஆண்டுகள் அடிமையாக்கினர்.
இன்று அப்படி அடிமையாக்குவதன் புதுமைத் தனமாக இந்தியாவை ஆளும் பாஜக ஆட்சி அமெரிக்காவின் டாலர்களுக்கு ஆசைபட்டு இந்தியாவை மக்களுக்கு தெரியாமலேயே புதிய பொருளாதாரக் கொள்கை,உலகமயமாக்கல்,தனியார் மயமாக்கல் என்று கூறி அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிமைகளாக்கி வருகிறது.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-20.
  • தாய்லாந்து இளைஞர்கள் தினம்
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
  • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)

=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?