துக்ளக்,மோடி, பாம்பு, மண்புழு.சில ஒற்றுமைகள்.

மோடியின் செயலை ஏன் பெரும்பாலானோர் துக்ளக் ஆட்சி என்கிறார்கள்.?
கருப்புப்பணம் ஒழிய வேண்டும்,இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதில் யாருக்குமே எதிர்நிலை எண்ணம் இல்லை.
ஆனால் அதை செய்யும் வழியும்,அதற்கான உள் நோக்கமும்தான் மோடியின் கபட எண்ணத்தில் கருப்புப்பனக்காரர்களை ஒழிக்காமல் பாமர இந்தியர்களை கொடுமைபடுத்துவதில்தான் எதிர்ப்பு உண்டாகிறது.
மோடியின் செயல் பாம்பை அடிக்க வேண்டும்,ஆனால் அதற்கு வலிக்க கூடாது அதற்காக பக்கத்தில் உள்ள மண்புழுவை பாம்பு என்று சொல்லி நசுக்குவது போன்றதே.
வம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ரேஷன் கடை ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்-களிலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கக் தொடங்கினர். 
இன்னும் சில வங்கிகளிலும் ஏடிஎம்-களில் கைகலப்பும் தாக்குதல்களும் ஏற்பட்டன. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர். நோயாளிகள் தங்களது மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடினர். விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கவும் வாங்கவும் முடியாமல் தவித்தனர். 
பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகளின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சந்தித்த அவலங்களின் மிகச்சில உதாரணங்களே மேலே கூறியவை. மோடியின் இந்த நடவடிக்கையை சிலர் துக்ளக் மன்னரோடு ஒப்பிட்டு ‘துக்ளக் தர்பார்’ என்று விமர்சிக்கின்றனர்.
Tughlaq_1
முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் ஆவார். இவரது ஆட்சியில் தலைநகராக இருந்த டெல்லியை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெளலதாபாத் எனப்படும் தற்போதைய மகாராஷ்டிராவை அறிவித்தார். 
இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை நிலைகுலையச் செய்தது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத இந்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது. பேரழிவில் முடியக்கூடிய, இதுபோன்ற துக்ளக்கின் அறிவிப்புகள் இதோடு முடியவில்லை. 
துக்ளக் மன்னன் தனது சாம்ராஜ்ஜியத்தில் அதன் பின்னரும் இதுபோன்ற திடீர் நகர்வுகளை ஏற்படுத்தினார்.
சர்வாதிகாரத்தன்மையோடு எடுக்கப்பட்ட இவரது மற்றொரு முடிவு, இன்றளவும் வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது. 
மோடியைப் போலவே துக்ளக் மன்னரும் நாணய விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் தோல்வியைச் சந்தித்தது. அது, அவரது தலைமையிலான சுல்தானிய அரசுக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்தது.
பண மதிப்பிழப்பு தொடர்பான இந்த அறிவிப்பின்மூலம், தற்போது இந்தியாவில் எழுந்திருக்கும் சிக்கல்களும் குழப்பங்களும் நவீன நாணய அமைப்பின் மீதான நம்பகத்தன்மை உடைவதற்கான அறிகுறியே ஆகும். மிகப் பெரிய செல்வமாகக் கருதப்பட்ட ஒன்று, தற்போது வெறும் காகிதமாக பார்க்கப்படுகிறது. 
நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த வெறும் காகிதங்கள் என்றும், தற்போது வழங்கப்படுகிற நவீன ரூபாய் நோட்டுகள் மட்டுமே மதிப்பு உள்ளவை என்றும் ஒரு ஏகாதிபத்திய அரசு சொல்வதைத்தான் தற்போதைய பகிரங்க அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.
முதலில் பண்டமாற்று முறை இருந்தது. அதன் பிறகு, நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. அப்போது புழங்கிய நாணயங்கள் தன்னளவிலே ஒரு விலை மதிப்புள்ள உலோகமாக இருந்த காரணத்தால், அந்த நாணய அமைப்பு முறை நிலையான, ஸ்திரமான முறையாக இருந்தது. 
எனினும், விலைமதிப்பற்ற உலோகங்களின் பற்றாக்குறையால் அந்த நாணய அமைப்பு முறை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது. அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை பிரதியாகக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 
இந்த புதிய பண அமைப்பு முறையின் தீவிரம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் இந்த முறையைப் பின்பற்ற 1000 ஆண்டுகள் ஆனது. சீனாவின் இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில் செயல்படுத்தி நிர்வகித்தது துக்ளக் மன்னன்தான்.
துக்ளக் மன்னன், டெல்லியின் சுல்தான் என்ற முறையில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பான்மை வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்தார். துக்ளக் மன்னன் 1329ஆம் ஆண்டு தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர், டோக்கேன் (அ) பிரதி ரூபாய் (representative money) என்ற பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். 
செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. டாங்கா என்றழைக்கப்பட்ட இந்த புதிய வகை நாணயங்கள், சுல்தானிய போர் நடவடிக்கைகளுக்கான நிதிப் பயன்பாட்டை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை. 
ஆனால் அது, இந்திய துணைக்கண்டத்தை மிகப்பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது.
Painting of Tughlaq
துக்ளக் அரசவை ஓவியம்
துக்ளக் மன்னன் தனது ஆட்சியில் இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அது மக்களிடம் சிறிதும் அறிமுகமில்லாத திட்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கொள்வதற்கு பல சிரமங்களை உடையதாகவும் இருந்தது. 
அப்போதுவரை இந்த புதிய திட்டத்தைச் சீனாவுக்கு வெளியே ஒரே ஒரு மன்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தியிருந்தார். 13ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னராக இருந்த கேய்கது (Gaykhatu) என்பவர்தான் அவர். அவர், இந்தத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அதன் அறிமுகமின்மை மற்றும் நடைமுறைச் சாத்தியத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் காரணமாக, அறிமுகப்படுத்திய எட்டு நாட்களுக்குள் அவர் அதை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மிகச்சில நாட்களுக்குள்ளாகவே அவர் படுகொலை செய்யப்பட்டது வேறு கதை.
இப்படியான சிக்கல்களும் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களையும் கொண்ட இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற துக்ளக் மன்னர் அதை செயல்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்தார். பெயரளவில் நல்ல திட்டமாக தோன்றினாலும் இதில் மிகப்பெரிய ஒரு குறை இருந்ததே அதற்குக் காரணம். 
இதுபோன்ற பிரதி நாணயத்தில் எளிதாக போலிகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்ததே அதற்குக் காரணம். உண்மையில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாற்றிக்கொள்வது போன்ற சிலவற்றில், இந்த பண முறை உதவிகரமாக இருந்தபோதும், போலி நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற அபாயகரமான சில குறைகளையும் இந்தத் திட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது.
அதன் காரணமாக அரசாங்கம், ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாளத் தொடங்கியது. அதன்படி, போலி நாணயத் தயாரிப்பை தடுக்கவும், பாதுகாப்பு நோக்கத்துக்காகவும் பிரத்யேகமான பல அடையாளங்களைக் கொண்ட ரூபாய் நாணயங்கள் அச்சிடத் தொடங்கியது. எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது. 
அந்தவகையில், புதிய நாணய அச்சிடல் விவகாரத்தில் முதலில் சொதப்பியது மோடிதான் என்று சொல்ல முடியாமல் போனது மட்டும் மோடிக்கு ஆறுதலான ஒரே விஷயம்.
Tughlaq coin
துக்ளக் அறிமுகப்படுத்திய் நாணயம்
துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயமானது, போலிகள் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அது கறுப்புப் பணம் புழங்குவதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. 
அதன் விளைவாக, பல்வேறு மோசடிகள் நடந்து உயர் பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும் துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.
இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு துக்ளக் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. 
அதிலும் ஒரு குளறுபடி நடந்தது. 
ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால் சரியான முறையில் இந்தப் பரிமாற்றத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது. அதில் நிராகரிக்கப்பட்ட செம்பு டாங்கா நாணயங்கள் தெளலதாபாத் கோட்டை முன்பு மலைபோல் குவிந்து கிடந்தன.
அப்போது ஏற்பட்ட நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின. துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்ததற்கும் அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 
1351இல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான் போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தாமாகவே தம்மை விடுவித்துக் கொண்டன. அதன்பின்னர், சுல்தானம் எனப்படும் இஸ்லாமிய அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதி டெல்லியின் ஒரு சிறிய பகுதியாகவும், தற்போதைய உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளாகவும் சுருங்கின.
நன்றி: scroll.in
ஆசிரியர் : ஷோயாப் டானியல்
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ், நன்றி: மின்னம்பலம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?