இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 19 அக்டோபர், 2017

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன் .

"நிலவேம்பு விடயத்தில் கமல்ஹாசன் எடுத்தது மோடியின் ரூபாய் மதிப்பிழப்பு ஆதரவு போன்ற மற்றோரு அவசர கோலம்தான்.
நிலவேம்பு என்று சிலர் போலியாக விற்கிறார்கள் என்பதுதான் செய்தி.ஆங்கில மருத்துவர்கள் எல்லா நாட்டு மருந்தையும் கேவலமாகத்தான் பேசுவார்கள்.காரணம் பொழைப்பு.
இதே ஆங்கில மருத்துவர்கள்தான் மஞ்சள் காமாலைக்கு , வாதத்திற்கு தமிழ் மருத்துவத்தை நம்புகிறார்கள்.

கேரளாவை பார்க்க கமல் சொன்னது இதற்காகத்தான் 

இதில் மற்றோரு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சாதியம் உள்ளது கமல்ஹாசன் போன்ற பலதையும் படிக்கும் அறிவுஜீவி க்கு தெரியாமல் இராது.
நோய்க்கான கிருமிகளை பரப்பி விட்டு அதற்கான மாற்றை அதிக விலையில் மக்களிடம் விற்று கொள்ளையடிக்கும் மருத்துவ அரசியல் பற்றி தசாவதாரம் எடுத்த கமலுக்கு தெரியாமல் இராது.

பல கோடிடெங்கு மருந்தது சந்தைக்கு தமிழ் நாட்டு நிலவேம்புகசப்பை தராமல் இருக்குமா என்ன?அதை ஒழிப்பதுதானே ஆங்கில மருத்துவர்களின் சேவையாக இருக்கும்.இதே ஆங்கில மருத்துவர்கள் விறகு அடுப்பில் சமைக்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்.மரங்களின் மீதுள்ள பாசமா என்றால் , இல்லை.
ஆஸ்துமா வரும் என்று அறிவிக்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன் நாம் சமையல் எரிவாயுவிலா சமைத்தோம் ?விறகுதானே.
இன்றுள்ளதை விட அன்று இளைப்பாளர்கள் மிகக் குறைவுதான்.
குறிப்பாக தூத்துக்குடியில் 10ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று ஆஸ்துமா நோயாளர்கள் 20 மடங்கு அதிகம்.புற்று நோய் பாதிப்பு 10மடங்கு அதிகம் .
காரணம் ஸ்டெர்லைட் என்ற நாசகார ஆலை.
இதை ஆங்கிலமருத்துவர்கள் அறிந்தாலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.அரசியல் வாதிகளுக்கும்,ஆங்கில மருத்துவர்களுக்கும் அது பொழைப்பைத்தருகிறது .
நிலவேம்பு அவர்கள் பொழைப்பை கெடுக்கிறது.
நிலவேம்பு போல் கமல் சறுக்கிய மற்றோரு இடம் மோடி செய்த பணமதிப்பிழப்பில்  .
பணமதிப்பிழப்பை மோடி அறிவிக்கையில் அவரது ஜலராக்கள் அடித்த வரவேற்பு செண்டை சத்தத்தில் ரஜினியை போல் கமல்ஹாசனும் மயங்கி வரவேற்றிருக்கலாம்.
இது போன்ற முக்கிய திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் நிச்சயம் இது வெற்றியை தந்திருக்கலாம்.
ஆனால் கறுப்புப்பணம் ஒழியும்,வேலை வாய்ப்பு பெருகும் என்ற கதையெல்லாம் நடக்காது.
இதுவரை இரு முறை பணமதிப்பிழப்பு நடந்தும் இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிந்ததாக வரலாறு இல்லை.
மோடி தன்னை மாமனிதனாக எண்ணிக்கொண்டு தேவையான புதிய பணத்தை அச்சிட்டு வைத்திருக்காமல்,பணமெடுப்பு எந்திரங்களை புதிய பணமடுக்க வசதிகள் செய்யாமல் அவசரகதியில் அறிவித்ததே 120 உயிர்கள் இந்த விடயத்தில் பலியாக காரணம்.
மோடி தன்னை பாகுபலி அளவுக்கு மாமனிதனாக  கற்பனை செய்து கொண்டு செய்த தவறுகள் வைகள் ..
1.நிதியமைச்சகத்துடன் குறிப்பாக அருண் ஜெட்லீ என்ற நிதியமைச்சருக்கு கூட முழு விபரம் தெரியாமல் அமித் ஷாவுடன் மட்டும் இணைந்து  திட்டம் தீட்டியது.
2.தனது திட்டத்துக்கு ஒத்து வர மாட்டார்,எதிர் கருத்துக்களை கூறுகிறார் என்பதாலேயே ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து சுப்பிரமணியசாமி மூலம் குடைச்சல் கொடுத்து வெளியேற்றி அம்பானி நிறுவனத்தில் பணியாற்றியவரை புதிய ஆளுனராக நியமித்து பொம்மையாக்கி  வைத்துக்கொண்டது.
3.புதிய பணத்தாட்களை முறையற்ற அளவில் அச்சிட்டு பணமெடுக்கும் எந்திரத்தில் அடுக்கி விநியோகிக்க முடியாமல் செய்தது.
4.பணமதிப்பிழப்பை கூறாமல் புதிய பணத்தாட்கள் வெளியிடப்போவதாக கூறி தேவையான பணத்தை முன்பே அச்சிடாதது.
5.அரசு வங்கிகள்,கூட்டுறவு வங்கிகள் கருவூலங்கள் மூலம் புதிய பணத்தை வழங்க ஏற்பாடு செய்யாமல் தனியார் வங்கிகள்,அம்பானியின் பிக் பஜார்,அதானியின் நிறுவனங்கள் மூலம் மட்டுமே பணத்தை மாற்ற அனுமதித்தது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விநியோகித்திருந்தால் கிராமப்புற மக்களுக்கு பணமாற்றம் நடந்திருக்கும்.
6.தினந்தோறும் ஒரு அறிவிப்பு மூலம் ரிசர்வ் வங்கி மக்களை பணமாற்றம் செய்ய அலைக்கழித்ததால் 120 பேர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இவற்றை  நிதியமைச்சகம்,பிரதமர் அலுவலகம்,ரிசர்வ் வங்கி ஆகியோர் கலந்து ஆலோசித்து பணமதிப்பிழப்பை செய்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
மோடி தன்னை மோடி மஸ்தான் அளவுக்கு மந்திர மனிதனாக காட்ட செய்த வேலையால்தான் இத்தனை இன்னல்கள்.
சரியான திட்டமிடல் இல்லாமை, தனிமனித செயலாலேதான் இந்த சீரழிவு.
கருப்புப்பணமும் போகவில்லை,வேலைவாய்ப்பும் கிட்டவில்லை.இந்தியா பொருளாதார வல்லரசாகவும் இல்லை.புதிய இந்தியாவும் பிறக்கவில்லை.
15 நாட்களில் புதுமை பிறக்காவிட்டால் தன்னை பொது இடத்தில் தூக்கில் போட கூறிய மோடியின் வார்த்தைகளை இப்போது ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை.காரணம் அவர் கூறுவது அனைத்துமே வெத்து வேட்டு என்பதை சாமானியன் கூட உணர்ந்து கொண்டதுதான்.
இவரின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி முதல் பலர் விமரிசித்த  போது அதை கமல்ஹாசன் கவனத்தில் கொள்ளாமல் வரவேற்றதுதான் அவர் செய்த தவறு.
ரஜினி வரவேற்றால் தானும் அதை வரவேற்க வேண்டும் என்ற கட்டாயம் கமலுக்கு இல்லையே.பண மதிப்பிழப்பை பலர் விமரிசிக்கையில் ,பல உயிர்கள் பலியாகையில் கமல் கருத்தை கூறாமல் பொறுமையாக இருந்திருக்கலாம்.
பொருளாதார அடிப்படையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து இந்நிகழ்வில் முக்கியம்.தன்னைஅரசியல் மாணாக்கன் எனக் கூறிக்கொள்ளும் கமல் ஹாசன் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொள்ளும் பணமதிப்பிழம்பில் கருத்து கூற பொறுமை காத்திருக்கலாம்.பல்வேறு நூல்களை படிக்கும் அவரின் அவசரம் தேவையற்றது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.அதனால்தான் மன்னிப்பு.
பகுத்தறிவு,இடதுசாரி எண்ணங்கள் கொண்டவர் எனக் கருதப்படும் கமல்ஹாசனிடமிருந்து இனி ஆழ் யோசனை இல்லாமல் அவசர டுவிட்டுகள் வராமல் இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்.  
எந்த செய்தியைக்கேட்டாலும் உடனே டுவிட்டும் அரசியலில் இருந்து கமல்ஹாசன் வெளிவர வேண்டும்.அவர் கூறியதைப் போல் அரசியல் மாணவர் எந்த பிரச்னையில் உடனே கருத்தை ட்டுவிட்டாமல் ஆராய்ந்து அறிவித்தால் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரா .
அரசியலில் காலடிவைக்கையிலேயே ஒவ்வொரு கருத்துக்கும் தெளிவான முடிவில்லாமல் மன்னிப்பு கேட்டு மாற்றுவது மக்கள் நம்பிக்கையை காலாவதியாக்கி விடும்.
மன்னிக்கிறவன் மனுசன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன்கிறது திரையில் கேட்க நல்லாயிருக்கலாம்.தலைவனுக்கு அது சரியாக பொருந்தாது.
ஆக கமல்ஹாசன் மோடியின் பணமதிப்பிழப்பு விடயத்தில் மட்டுமல்ல , நிலவேம்பிலும் தவறாகவே முடிவுகளை எடுத்துள்ளார்.காரணம் அவசரம்.
விவேகம் இல்லா வேகம் ஆபத்து.

==================================================================================================
ன்று,
அக்டொபர் -20.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)

 • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)

 • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)

 • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
 • அச்சுதானந்தன்
 • அச்சுதானந்தன், கேரள மாநிலம், ஆலப்புழையில், சங்கரன் - அக்கம்மா தம்பதிக்கு மகனாக1923 அக்., 20ல் பிறந்தார். 
1938ல், மாநில காங்கிரசில் சேர்ந்த இவர், கட்சியில் நிலவிய கருத்து வேறுபாட்டால், 1940ல் வெளியேறினார். 
பொதுவுடமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தீவிர உறுப்பினர் ஆனார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1964ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகினார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கட்சியை நிறுவிய, 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
கேரள மாநில முதல்வராக, 2006 முதல் 2011 வரை இருந்தார். 
==================================================================================================

புதன், 18 அக்டோபர், 2017

மடை மாற்றம்

கடந்தமூன்றாண்டுகளாக  இந்தியர்கள் அதிகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியாகி வருவதாக சமீபத்திய உலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
இது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் சூழ்நிலையை நாட்டு மக்கள் சந்தித்தும் வரும் வேலையில் கூட, பிரதமர் மோடியின் போலி தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலில் கூட இந்த பிரச்சனை இடம் பெறவில்லை. 
போதா குறைக்கு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வந்த ஐசிடிஎஸ் போன்ற அத்தியாவசிய திட்டங்களுக்கான நிதியையும் மோடி அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக மக்களின் இந்த பிரச்சனைக்கு மோடி அரசாங்கம் தான் பொறுப்பு.

உலகளாவிய பசி அட்டவணை, 2017 ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , கடந்த 7 வருடங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள் தொகை 16% இருந்து 14% குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. 
ஆனால் ஆண்டிற்கு 2% மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், உண்மையில், நாட்டில் உள்ள பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. 
இந்த எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 19.7 கோடியில் இருந்து தற்போது 20 கோடியாக உயர்ந்துள்ளது.
குழந்தைகளுக்கு மத்தியில் பசியால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது . சில சமயம் இது மிகவும் மோசனமானதாக இருக்கிறது. 
உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாததே ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறி. 
உலகளாவிய பசி அட்டவணைப்படி உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை என்ற நோயின் தாக்கம் 2006 – 10 காலகட்டத்தில் 20% இருந்தது 2012 -16 காலகட்டத்தில் 21% அதிகரித்துள்ளது. 
அதாவது 9.7 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வளர்ச்சி குன்றிய அதாவது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குறைபாடு கடந்த ஆண்டுகளில் குறைந்து வந்தாலும், 38.4% குழந்தைகளிடம் இந்த குறைபாடு நிலவுகிறது.
உலகளாவிய பசி அட்டவணை தரவரிசைப்படி , 120 நாடுகளில் 97 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நேபால், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் இந்தியாவை சிறப்பான நாடுகளாக உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மருத்துவ பத்திரிகையான லேன்செட் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள 58% ஆண் குழந்தைகள் மற்றும் 50% பெண் குழந்தைகள் தேவைக்கு ஏற்ற எடை இல்லாதவர்களாகவே இருக்கிறனர் என் தெரிவித்துள்ளது. 
இது நாளைய குடிமக்களின் பெரும் பகுதியினர் உணவு பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

குழந்தைகளுக்கு சமச்சீரற்ற ஊட்டச்சத்து இல்லாமை என்பது அவர்களின் உடல் நலனை வலுவற்ற தன்மைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் அவர்களது மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. 

இது இன்றைய குழந்தைகளோடு நின்றுவிடாமல், அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும். 

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, உலகத்தில் பசியால் வாடும் மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் உள்ளவர்களே. 
இது இந்தியாவை பசியின் தலைநகரமாக மாற்றியிருக்கிறது. நாட்டின் 50% செல்வத்தை வைத்திருக்கும் 1% மக்களும் , அடுத்தடுத்து வந்த அரசினால் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான கொள்கைகளே இந்தியாவில் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி அவர்களுக்கு இரு வேலையாவது உணவு அளிக்க , மோடி தலைமையிலான தற்போதைய அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. 
இந்த பிரச்சனை குறித்து ரேடியோ , தொலைக்காட்சி பிரச்சாரங்களில் மோடி பேசுவதில்லை.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவான நிதி ஆயோக்-கிற்கு கோடிக்கணக்கான நாட்டு மக்கள் பசியால் வாடுவதை பற்றி எந்த கவலையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் கூட இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
 அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தங்களது கருவூலத்தை நிரப்பிக் கொள்ள தேவையான சலுகைகளை பெறும் நாட்டின் பெரிய தொழிலதிபர்களான சிஐஐ மற்றும் எப்ஐசிசிஐ கூட இது பிரச்சனையில் குருடாகவே இருக்கிறது. புல்லட் ரயிலுக்கும் , செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப வசதியுள்ள அரசிடம் ஏழை மக்களுக்கு உணவளிக்க வசதி இல்லை. 
இந்நிலையில் தற்போது அதிகரித்துவரும் வேலையின்மை, நாடு முழுவதும் வேலை இழப்பு மிரட்டல்கள் , பொருளாதார மந்தநிலை, அரசாங்கத்தின் திறமையற்ற தலைமை என இவை எல்லாம் சேர்த்து பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கும்.
ஆனால் பாஜகவின் தலைவர்களோ மக்களின் அன்றாட பிரசனைகளை கலைவதை விட்டு,விட்டு தாஜ்மகால்,ராமர் கோவில் ,தேஜோ மஹால் என்று மக்களின் மதவெறியை தூண்டி மோடி அரசின் தோல்வியை மடை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
=======================================================================================
ன்று ,
அக்டொபர்-19.
 • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
 • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
========================================================================================
தீபாவளி கொண்டாடலாமா தமிழர்கள்?

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம் இப்போதே காதைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருமே ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பெருமித உணர்வோடு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் யாருக்கும் எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்று தெரியவில்லை. இருந்தாலும் அதைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. கையில் காசு இருக்கின்றதோ இல்லையோ ஒருவன் இந்துவாக இருந்தால் நிச்சயம் அவன் தீபாவளி கொண்டாடியே ஆகவேண்டும். இல்லை என்றால் ஊர் உலகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. அதற்காக நூற்றுக்குப் பத்து இருபது கந்துவட்டிக்கு வாங்கியாவது தனக்கும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புதுத்துணி வாங்கி தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடுகின்றார்கள். நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் இந்த தீபாவளியை எதற்காக இத்தனை சிரமப்பட்டு மெனக்கெட்டு கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று தெரிவதில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பல ஆயிரங்களுக்குப் பட்டாசு வாங்கி தீபாவளிக்குப் பத்து நாளைக்கு முன்பிருந்தே வெடித்து காசை நாசம் செய்யும் நபர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று தினம் உழைத்து சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களையும் இந்தத் தீபாவளி பண்டிகை பதம் பார்ப்பதுதான் நம்மைத் துயரப்பட வைக்கின்றது.
periyar and maniammai kids
பெரியார் தன் வாழ்நாள்முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். தீபாவளி கொண்டாடுவது தமிழினின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பெரும் இழுக்கை தேடிக் கொடுப்பது என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். தீபாவளி கொண்டாடும் தமிழர்களை எவ்வளவு தூரம் திட்டி திருத்த முடியுமோ, அவ்வளவு தூரம் திட்டி திருத்த முயன்றார். "எவ்வளவு சொன்னாலும் அறிவும், அனுபவமும் இல்லாத இளைஞர்கள்(மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம், துரோகம், மோசத்தாலும் வாழ வேண்டிய- தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையிடம் சிக்கிவிட்டார்களேயானால் எவ்வாறு யார் எவ்வளவு அறிவையும் நன்மையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தம் உள்ளம் முழுவதையும் பரத்தையிடம் ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போலவே நடந்து கொள்கின்றார்கள்!”. என்று மிகக் காட்டமாகவே குறிப்பிட்டார்.
“இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட்ட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு – பூகோளக் கூறு இவற்றில் நிபுணர்கள் வேதாந்தத்தில் கரை கண்டவர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்துகொள்கிறார்கள் என்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழன் அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்து கொள்கிறார்கள் என்றால் இழிவுக்கும் மடமைக்கும் மானமற்ற தன்மைக்கு இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும்?”. (விடுதலை 5/11/1961) என்று இன இழிவுக்குத் துணைபோகும் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் மானங்கெட்ட தமிழர்களையும் அம்பலப்படுத்தினார்.
மக்களிடம் இந்தத் தீபாவளி பண்டிகை இன்று இந்த அளவிற்கு சென்று சேர்ந்ததற்கு இங்கிருக்கும் பார்ப்பனப் பத்திரிக்கைகள் மற்றும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரப் பத்திரிக்கைகள், பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் விளம்பரப்படுத்தும் விபச்சார தொலைக்காட்சிகள் போன்றவற்றின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். எதை எதையோ ஆய்வு செய்து அம்பலப்படுத்துவதாக பிதற்றிக்கொள்ளும் இந்த ஊடகங்கள் எப்போதாவது ஏன் இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று மக்களுக்கு சொல்லி இருக்குமா என்று பார்த்தால் இந்த விபச்சார ஊடகங்களின் வேசித்தனம் நமக்கு விளங்காமல் போகாது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பத்திரிக்கைகள் சிறப்பு மலர்கள் போடுவதும் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதும், பட்டிமன்றங்களை நடத்துவதும் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றது. இதன் மூலம் தீபாவளிப் பண்டிகை மிக முக்கியமானதாக, கொண்டாடியே ஆகவேண்டிய ஒன்றாக திட்டமிட்டு இனத் துரோகிகளால் பரப்பப்படுகின்றது. ஒவ்வொரு சாமானியனின் மனதையும் பார்ப்பனியத்தால் நச்சாக்கி அதில் பணம் ஈட்டுகின்றது. தமிழன் எப்போதுமே மானமுள்ளவனாக, சுயமரியாதை உள்ளவனாக மாறக்கூடாது என்பதில் இந்த எச்சிலை ஊடகங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.
தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று நோக்கிலேயே கற்பிக்கப்பட்ட தீபாவளி இழி கதையை இன்று தமிழ் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்குவாதியின் கடமையாகும். விபச்சார ஊடகங்கள் நிச்சயம் இந்தப் பணியை செய்யப்போவதில்லை. ஆதனால் ஒவ்வொரு முற்போக்குவாதியும் தன்னால் முடிந்தவரை தீபாவளி என்ற மானங்கெட்ட பண்டிகையின் யோக்கியதையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் நமக்கு பெரிதும் துணை நிற்பார். தீபாவளி என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி பெரியார் அவர்கள் அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.
1) ஒரு காலத்தில் ஓர் அரக்கன் உலகத்தைப் பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்.
2) தேவர்கள் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் ( உருவம்) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து (மீண்டும்) விரித்தார்.
3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4) ஆசைக்கு இணங்கிய பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் தொடங்கினார்.
8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை.விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். (விடுதலை 5/11/1961)
இந்த மானமற்ற பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத கதைதான் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாகும். மேலும் புராணங்களில் அசுரன், அரக்கன், குரங்குகள் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் திராவிடர்களைத்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவதையும் நாம் நோக்க வேண்டும். பெரியாரும் அதைத்தான் குறிப்பிடுகின்றார்
“நரகாசூரன் ஊர் மகிஷ்மதி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கின்றது. மற்றொரு ஊர் பிராக் ஜோதிஷம் என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அஸ்ஸாம் மாகாணத்திற்கு அருகில் இவற்றை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்களாத்தில் தேவர்களும் அரசர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பான் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நாம் நடு ஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும் இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா” என்று கேட்பதும், நாம் ஆமாம் சொல்லி கும்பிட்டுக் (காசு) கொடுப்பதும், அவன் காசு வாங்கிக்கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது? மாணவர்களே? உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்! இளைஞர்களே சிந்தியுங்கள்!”. (விடுதலை 5/11/1961)
எனவே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்தோ, தெரியாமலோ இனத் துரோகியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றான் என்றுதான் அர்த்தம். கோடிக்கணக்கான தமிழ்மக்களை சூத்திரர்கள் என்றும், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றும், குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் நம்மை அசிங்கப்படுத்திய பார்ப்பன மேலாண்மையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே அர்த்தம். இன்று பார்ப்பனப் பயங்கரவாதத்தால் இந்தியும், சமஸ்கிருதமும், நீட் தேர்வும் தமிழகத்தில் திணிக்கப்படும் காலத்தில் தீபாவளியைப் புறக்கணிப்பது என்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் தலையாய கடமையாகும். பார்ப்பன தீபாவளியைக் கொண்டாடிவிட்டு நீட்டையும், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதென்பது கேலிக்கூத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே முற்போக்குவாதிகள் அனைவரும் இந்தத் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தை வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் ஒவ்வொருவனும் தமிழின துரோகி என்பதையும், பார்ப்பனித்தின் அடிமை என்பதையும், சுயமரியாதையும், தன்மானமுமற்ற உலுத்துப்போன உலுத்தர்கள் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களின் மூளைகளை முடமாக்கும் மூடர்களிடம் குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்களை பகுத்தறிவுடன் வளர்க்குமாறு அறிவுரை சொல்ல வேண்டும். இதை ஒவ்வொரு மானமுள்ள சுயமரியாதை உள்ள முற்போக்குவாதிகளும் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
- செ.கார்கி                                                                                                                                                                                 நன்றி;கீற்று 

செவ்வாய், 17 அக்டோபர், 2017

நெஞ்ச நெருப்பு சாம்பலாக்காமல் விடாது...

மனிதகுலம் தனக்கான உணவை சமைத்துச் சாப்பிடத் துவங்கியதிலிருந்து நெருப்புடனான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
குறிப்பாக பெண்களின் எரிபொருள் தேடும் பணி அவர்களின் வாழ்க்கையின் கணிசமான காலத்தை சாப்பிட்டு விட்டது. சாப்பிட்டுக கொண்டிருக்கிறது. 

பெண்களின் பெரும் பகுதி வாழ்க்கை தண்ணீருக்கும் விறகுக்குமாய் தொலைந்து போய் விடுகிறது.21 ஆம் நூற்றாண்டில் நடைபோடுகிற மனித சமூகம்இன்னும் சமையலுக்காக விறகைச் சார்ந்திருப்பதிலிருந்து விலகிட முடியாத நிலையே நீடிக்கிறது. கரண்ட் அடுப்புகள் வந்துவிட்டன. 

ஆயினும் மண்ணெண்ணெய் அடுப்புகளும் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்காக ரேசன் கடைகளில் வரிசையில் நிற்கும் காலமும் மண்ணெண்ணெய் வழங்கக் கேட்டு போராடும் காலமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

விறகுகள் எரிப்பதால் மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியாவதால் பெண்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது என்றும்காடுகள் அழிகின்றன என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

விறகுக்காக அழிவதை விட மரம் கடத்துபவர்களால் அழிவதே அதிகம் என்பதை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மரம் வளர்க்கச் சொல்லி பிரச்சாரம் செய்யத்தயங்குவதில்லை. ஆனால் அரசின் சார்பில் நடப்படும்,நட்டதாகக் கூறப்படும் மரக்கன்றுகள் எல்லாம் வளர்ந்திருந்தால் இப்போதுள்ள வனப்பகுதி போல் இன்னொரு பகுதி வனம் அதிகரித்திருக்கும். 

ஆனால் எல்லாமே வெறும் கணக்குக்காக மட்டுமே செய்யப்படுவதால் மக்கள்வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறென்றும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.எரிசக்தியில் மரபுசார்ந்த எரிசக்தி,மரபு சாரா எரிசக்திஎன்று இருவகை இருந்தாலும் பெரும்பாலான ஏழை,எளிய மக்கள், கிராமப்புற மக்கள் வாழும் இந்தியாவில் சாண எரிவாயுத் திட்டம் போதிய அளவு பயனைத் தரவில்லை.

விவசாய நாடான இந்தியாவில் தற்போது விவசாயமே அழிவின் பிடியில் இருப்பதாலும் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து போய் விட்டதாலும் சாண எரிவாயுத் திட்டத்துக்கு மானியம் கொடுத்தாலும் கூட பெரிய அளவுவெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் தான் எரிவாயுத்திட்டம் நடைமுறைக்குவந்தது. அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு அரசாங்கம் மானியமும் தந்தது. 

அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் மட்டுமே எரிவாயு விநியோகம் செய்து வந்தன.அரசும் மானியம் வழங்கி வந்தது. 

ஆனால் 1990க்குப் பின் உலகமயம் தாராளமயம் தனியார்மயம் அறிமுகமான பின் ஏழை,எளிய மக்கள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மானியத்தை வெட்டிச் சுருக்கும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். 

இதில்காங்கிரஸ் கூட்டணியும் சரி, பாஜக கூட்டணியும் சரி ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை.வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் எரிவாயு சிலிண்டர், வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் எனப் பிரித்து அதற்கான விலை நிர்ணயம்செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசுமானியம் வழங்கியது. 

அந்த மானியம் எரிவாயு விநியோகஏஜென்சிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வழங்கப்படும் மானியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஆதார் அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டு அதை இணைத்தால் தான் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு நிர்ப்பந்தித்தது. இப்போதோ எல்லாமே ஆதார் மயமாகிவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆதாரை எதிர்த்த பாஜக, மோடி ஆட்சிக்கு வந்ததும் முன்னிலும் வெகுவேகமாக ஆதாரை கட்டாயப்படுத்தி எல்லாவற்றுக்கும் ஆதாரேஅவசியம் என்றது. உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கக்கூடாது என்று சொல்லியும் கூட மோடி அரசு அதைஅலட்சியப்படுத்திவிட்டு மூர்க்கத்தனமாகவே அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, மதிய உணவுக்கும் கூட ஆதாரை கட்டாயமாக்கியது. அத்தகைய கட்டாயத்தினால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு பயன்படுத்துபவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மானியம் வழங்க முடியும் என்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்துகிறோம் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் அறிவித்தனர். 

ஆனால்எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் சந்தைவிலை கொடுத்தே வாங்கவேண்டும் என்றும் பிறகு அவர்களுக்குரிய மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அமலானது.
இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்புக்குள்ளானது என்றாலும் கூட அதைஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. 

இது மானியத்தை சிறிது சிறிதாகக் குறைத்து முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்டம் தான் என்ற அச்சம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி 60 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 60 மாதங்களில் செய்துவிடுவோம் என்று கூறியபாஜக 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது. 

அப்போது வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.404.50. 

அதற்கு முந்தைய ஆண்டான 2013லும் அதே404.50தான். 

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ஆம் ஆண்டில் 656.50 ஆக பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்தது. 

இதனால் சமையல் கட்டில் மட்டுமல்ல புகைச்சல் ஏழை,எளிய நடுத்தர மக்கள் மனதிலும் தான். 
2015 ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலை 651 ரூபாய்.
அதற்கான மானியம் 234 ரூபாய் என்றானது. 
ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் சிலிண்டரின் விலையும் மானியத்தின் அளவும் ஏற்ற இறக்கங்களுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாயின.

2015 ஜூன் மாதத்தில் ரூ.649.50ஆனது. 
ஆகஸ்ட் மாதத்தில் ரூ.626ஆனது. அப்போது மானியம் ரூ.217 தான். 
அடுத்த மாதத்தில் (செப்டம்பர்) ரூ.598 ஆககுறைந்தது. 
சர்வதேசச் சந்தை விலைக்கேற்ப குறைக்கப்பட்டது என்றார்கள். அப்போதைய மானியம் ரூ.189.18 ஆனது. 

இரண்டு மாதங்களிலேயே ரூ.643.50 ஆனது.
2016 ஆம் ஆண்டில் விலை 607.50 ஆனதால் மானியம்ரூ.197.28 ஆனது. 
மார்ச் மாதத்தில் விலை ரூ.545 ஆகவும்மானியம் ரூ.134.87 ஆகவும் குறைந்தது. 

மே மாதத்தில் விலை ரூ.559.50 ஆகவும் மானியம் ரூ.149.35 ஆகவும் அதிகரித்து ஜூன் மாதத்தில் விலை ரூ.528 ஆகவும் மானியம்ரூ.171.82 ஆகவும் ஆனது. 
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் ரூ.525.50 ஆனது. நவம்பர் மாதத்தில் ரூ.566ஆனது.2017 ஜனவரியில் விலை ரூ.623 ஆக உயர்ந்தது. 

மானியம் ரூ.197.29 ஆனது. பிப்ரவரி மாதத்தில் ரூ.776.50 என்றுவேதாளம் முருங்கை மரம் ஏறியது. அப்போதைய மானியம்ரூ.3
50.57. ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 மற்றும் ரூ.329.61 ஆனது. மே மாதம் ரூ.669 மற்றும் ரூ.235.23 என சற்றுக்குறைந்தது.
ஜூன் மாதம் பதிவு செய்த போது ரூ.575.71 ஆக இருந்த சிலிண்டர் விலை ஜூலை மாதம் வழங்கப்பட்டதால், நாடு முழுவதும் ஜிஎஸ்டி பூதத்தின் தாக்குதலுக்குள்ளானது. 

மத்திய, மாநில அரசுகளின் தலா 2.5 சதவீத வரி விதிப்பால் ரூ.604.50 ஆனது. ஜிஎஸ்டி வரிமட்டும் ரூ.28.78 சேர்ந்து சுமையை அதிகரித்தது. 

இப்போதைய மானியம் ரூ.112.21.ஆகஸ்ட் மாதம் அடிப்படை விலை ரூ.608.09, ஜிஎஸ்டிவரி ரூ.304.40 ஆக மொத்தம் ரூ.638.49. 
அப்போதைய மானியம் பில்படி ரூ.158.41 ஆனால் வங்கியில் பயனாளியின் கணக்கில் ஏறிய மானியம் ரூ.134.16 தான்.

 செப்டம்பர் மாத விலை ரூ.655.71. ஜிஎஸ்டி வரி ரூ.32.78. மொத்த விலை ரூ.688.50. இப்போதைய மானியம் பில்படி ரூ.204.53.ஆனால் வங்கியில் இன்னும் ஏறவில்லை. 

எப்போது ஏறுமோ? 
எவ்வளவு சேருமோ?
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பில்படியான விலை மக்களிடம் வசூலிக்கப்பட்டு விடுகிறது. 

ஆனால்பில்படியான மானியம் வங்கிக்கணக்கில் சேருமா சேராதா என்பது மோடிக்கே வெளிச்சம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பில்லைப்பார்த்து மானியத்தொகை வங்கியில் சேருகிறதா சேரவில்லையா என்பதை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்.

இத்தகைய எண்ணம் தான் மத்திய அரசுக்கு, மானியத்துக்கு எங்கே போய் யாரைக்கேட்பது? 
அப்படிக் கேட்பவர்களை தேசத்துரோகி என்று சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை, ஏனென்றால் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பவர்கள் தான் தேசபக்தர்கள் என்று கூட சொல்வார்கள். 

ஆனால் எரிவாயு பயன்படுத்தும் ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டுவதில் குறியாய் இருக்கும் மோடி அரசு கார்ப்பரேட் கனவான்களுக்கு அள்ளி வழங்கும் கோடிகளை குறைக்கவா போகிறார்கள் ?

தீபாவளி சமயத்தில் " தீ"வாளியைக் கவிழ்த்து விட்டுமக்களை வெந்து நொந்து வேதனையில் வாடவிடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.
நன்றி:தீக்கதிர்   
                                                                                                                                              -ப.முருகன்,
=======================================================================================
ன்று,
அக்டொபர் -18.
 • கணினி  கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
 • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
 • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
 • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
 • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
========================================================================================
கோழி(இறைச்சி)யும், இ-கோலி( கிருமி)களும் 
சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கோழி இறைச்சி யில் இருக்கும் ஈ.கோலி பாக்டீரியா, மனிதர்களின் சிறுநீர் பாதையில் நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் உட்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என ஏற்கனவே பல ஆராய்ச்சி தகவல்கள் கூறியுள்ளன. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுபவர்களின் சிறுநீரை சோதித்து பார்த்ததில், 80 சதவீதம் பேருக்கு எஸ்செரிசியா கோலி(இ.கோலி) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த இ.கோலி பாக்டீரியாவில் பல வகை உள்ளன. 

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சிகள் இதற்கு காரணமா என்ற ஆராய்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கலிபோர்னியா பகுதிகளில் சூப்பர் மார்க்கெட்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வான்கோழி, கோழி,் மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வான்கோழி இறைச்சிகளை ஆய்வு செய்ததில், 73 சதவீதம் இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. சிக்கன் பிரெஸ்ட் மாதிரிகளை ஆய்வு செய்தபோது 43 சதவீத இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா இருந்தது, மாட்டிறைச்சியில் 18 சதவீமும், பன்றிக் கறியில் 15 சதவீதமும் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. 
மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு இறைச்சியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. இ-கோலி பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன. ஆனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும், சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும் ஒரே வகை என்பது டிஎன்ஏ ஆய்வில் உறுதியானது. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு காரணமான இ-கோலி பாக்டீரியா, சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்து பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

பச்சை மாமிசத்தை சரியான முறையில் பராமரிக்காதது, முறையாக சமைக்காதது போன்றவற்றால் இந்த இ-கோலி பாக்டீரியா மனிதனின் பெருங்குடலுக்குள் சென்று பாதுகாப்பாக உயிர் வாழ்கிறது. இந்த இ-கோலி பாக்டீரியா மலம் மூலமாக வெளியேறும்போது, மனிதர்களின் சிறுநீர் பாதையிலும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுநீர் பாதை தொற்றுக்கு உள்ளானவர்களிடம் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்ற விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் கேட்கவில்லை. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு, சூப்பர் மார்க்கெட் கோழி இறைச்சி வகைகள்தான் காரணம் என்பதை 100 சதவீதம் உறுதிபடுத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி கட்டுரை கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோவில் சமீபத்தில் நடந்த ‘ஐடீ வீக் 2017’ என்ற தொற்றுநோய் பாதிப்பு கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
திங்கள், 16 அக்டோபர், 2017

பட்டினியில் முன்னேற்றம்.

எதற்கெடுத்தாலும் மோடி ஆட்சியையும்,அவரின் செயற்பாடுகளையும் குறை சொல்லுவது நமக்கே  கொஞ்சம் அசிங்கமாகத்தான் படுகிறது.

ஆனால் மேலும்,மேலும் குளறுபடி அசிங்கங்களை செய்யவும்,அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் அவர்களை அசிங்கப்படுத்துவதும்,விட்டால் தாக்குமளவும் பாஜகவினர் செயல் படுகிறார்கள்.


மூத்தத் தலைவரும் ,முன்னாள் அமைச்சரும்,முன்னாள் இ.ஆ.ப,அதிகாரியுமான யஷ்வந்த் சின்காவையே கிழம் வேலை தேடி அலைகிறது என்று கொச்சை படுத்தும் அளவுதான் தற்போதைய பாஜக உள்ளது.

தான் பிடித்தது முயல்தான்.முயலுக்கு மூணு கால்தான் என்ற பிடிவாத மனநிலை.

இப்போது இவ்வளவு கூற காரணம்.
 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் அதிகரிப்பு என்ற புள்ளி விபரம் வெளிவந்துள்ளதால்தான்.

காங்கிரஸ் ஆட்சியில் 2014-ம் ஆண்டு இந்தப் பட்டியலில், இந்தியா 55-வது இடத்திலிருந்தது. 
இதே ஆண்டு ஆரம்பத்தில்தான்  பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தது.

மோடி பிரதமர் ஆனார். 
மூன்றே ஆண்டுகளில் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
பெரும் சாதனைதான்.


உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா, ஈராக், வங்கதேசம், வடகொரியா போன்ற நாடுகள்கூட இந்தியாவுக்கு பின்னால்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1,ஆப்கானிஸ்தான்.
2,பாகிஸ்தான்
3,இந்தியா
தான் ஆசிய கண்ட தற்போதைய 
 பசி வரிசை.

பாஜகவினர் பாகிஸ்தான் 2ம் இடமா,நம்மை விட முந்துகிறதா என்று எண்ணி தொலைத்து விடக் கூடாது.

காங்கிரசு ஆட்சியில் கொண்டுவர முயற்சித்து பாஜக கொண்டுவந்த உணவு பாதுகாப்புத்திட்டத்துக்கு பின்னர்தான் இந்த பசி நிலை உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு ஒவ்வொருவருக்கும் வழங்க பாதுகாப்பு தருவதற்கு பதில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப் படும் அரிசி ,கோதுமைக்கு மானியத்தை நிறுத்தியது மிகப்பெரிய மோசடி.
மக்கள் விரோத செயல்.

மோடிக்கு அம்பானி,அதானி நலன்கள் தான் கண்களை மறைத்து நிற்கிறது.
அதன் பின் உள்ள ஏழைகள் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை.

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை என்ற சித்தாந்தம்தான் மோடி வையாறாக்களுக்கு.
கார்ப்பரேட்களுக்கு சலுகை,கடன் தள்ளுபடி ,வரிச்சலுகை என்று தாராளமான போக்கு காட்டிய காட்டிய அதே மோடி விவசாயிகள் சலுகைகள் ,உர மானியம் போன்றவற்றை கைவிட்டார்.
கடன் தள்ளுபடியும் செய்ய மறுத்து விட்டார்.அதற்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் டெல்லியில் ஆண்டுக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் அவர் அவர்களைசந்திக்கவோ,மனுவை வாங்கவோ,குறைகளை கலையவோ மறுத்துவிட்டார்.
அதே நேரம் நடிகைகைகளுடன் செல்பி எடுக்க நேரம் ஒதுக்கி வருகிறார்.இதுதான் மோடி ஆட்சியின் உண்மை முகம்.
மோடி காலடி பூசை செய்யும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு பலவகை மானியங்கள்,விவசாய கருவிகள்,டிராக்டர்  வாங்க வட்டியில்லா கடன்,ஓய்வூதியம்  எல்லாம் உண்டு என்பதை மோடி உணராமலா இருப்பார்.
அமெரிக்கா தனது விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும்,உணவுப்பொருட்களுக்கு தங்களை சார்ந்தே இந்தியா இருக்க வேண்டும் என்பதும்தானே நோக்கம்.
அதை உணர்ந்தும் மோடி அவர்களின் வழிகாட்டல் படி நடப்பதுதான் இன்றைய பட்டினி களின் அடிப்படை காரணம்.


========================================================================================
ன்று,
அக்டொபர்-17.
 • உலக வறுமை ஒழிப்பு தினம்
 • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
 • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
=========================================================================================


ஞாயிறு, 15 அக்டோபர், 2017

டெங்கு : ஒரு மருத்துவரின் பார்வையில் .

டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் துவங்கி, நவம்பர் வரை, டெங்குவின் பாதிப்பு இருக்கும். 

இந்த ஆண்டு மே மாதத்தில், சில நாட்கள் மழை பெய்ததைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, வழக்கத்தை விடவும் அதிகமாகி விட்டது. 

வழக்கமாக, டெங்கு பரவும் மாதங்களில், கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை, மே மாதத்திலேயே, தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். '

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், சுத்தமான நீரில் தான் முட்டையிடும். அதனால், வீட்டில், நீர் சேமிக்கும் தொட்டிகள், பாத்திரங்களை மூட வேண்டும். 
டயர், சிரட்டை போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

சுற்றுப்புறத்தில் குப்பை சேர விடக் கூடாது' என்பதெல்லாம் சரிதான். 
ஆனால், மழை பெய்து தெருக்களில், ஆங்காங்கே நீர் தேங்கும் போது, பெரும்பாலான இடங்களில், சுத்தமான நீர் தான் உள்ளது. உடனடியாக மழை நீர் வடிய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 
சென்னைஉட்பட   பல ஊர்களில்  குப்பை அகற்றப்படாமல் கிடக்கிறது.

இது போன்ற, அதிக அளவு தொற்று நோய் பரவும் காலங்களில், மாநகராட்சியினர், கொசுக்களைக் கட்டுப்படுத்த, பைரெத்ரின் மருந்தை, கெரசின் கலந்து, வாரம் இருமுறை அடிப்பர். 
இப்போது, பெரும்பாலான இடங்களில், கொசு மருந்தே அடிப்பதில்லை. 

அடிக்கும் ஒருசில இடங்களிலும், வெறும் கெரசின் மட்டுமே அடிப்பதாக, மாநகராட்சி ஊழியர்கள் பலர், என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கின்றனர். 

அதுவும் எவ்வளவு தேவையோ, அந்த அளவு அடிப்பதில்லை. 
உதாரணமாக, கெரசின் கலந்த மருந்து, ஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு லிட்டர் அடிக்க வேண்டும் என்றால், அதை, 16 கிலோ மீட்டருக்கு அடிப்பதாக, மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். 
இந்த அளவிற்கு மோசமாக இருந்தால், கொசுக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?

சில வாரங்களுக்கு முன், எனக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனேன். 

'வென்டிலேட்டர்' உதவி தேவைப்படும் அளவிற்கு நிலைமை மோசமானது; மறுபிறவி எடுத்து வந்தது போல, தற்போது உணர்கிறேன்.தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம், டெங்கு பாதிப்பை, மாநகராட்சியிடம் தெரிவித்தேன். 

காரணம், ஓர் ஏரியாவில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தாலும், அந்த ஏரியா முழுவதும் கொசு மருந்து அடிப்பதோடு, அக்கம் பக்கத்தில் இருப்போரிடம், 'உங்கள் ஏரியாவில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. 
முன்னெச்சரிக்கையோடு இருங்கள்' என, தகவல் தர வேண்டும். 

ஆனால், நான் தகவல் தந்த பின்னும் கூட, எங்கள் வீடு இருக்கும் பகுதியில் மருந்தும் அடிக்கவில்லை; ஒரு விழிப்புணர்வும் செய்யவில்லை. ஒரு டாக்டரான எனக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் கதி என்னவென, சிந்தித்துப் பாருங்கள்!

அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பிற்கு ஏற்ப, போதுமான அளவு படுக்கை வசதிகள் இல்லை. உள் நோயாளிகளாக சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலரை, புற நோயாளிகளாக வைத்தே, சிகிச்சை தந்து அனுப்பி விடுகின்றனர். 

நோய் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம், அனைத்து வசதிகளுடன் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து, படுக்கை வசதி தர இயலாத நோயாளிகளை அங்கு, 'அட்மிட்' செய்யலாம். 


தற்போது, காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து விட்டன. பள்ளி, அதன் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டியது, மாநகராட்சி மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கடமை. இன்னொரு விஷயம், எல்லா இடங்களிலும் நிலவேம்பு கஷாயம் தருவதாக சொல்லப்படுகிறது.
 நிலவேம்பு கஷாயம் குடிப்பது, ஒரு பாதுகாப்பு மட்டுமே. 

இதைக் குடித்தால், டெங்கு வராது என்பதற்கு, அறிவியல் பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. 'அறிகுறிகளின் அடிப்படை யில் தான், நாங்களும் சிகிச்சை தருகிறோம்' என்றாலும், டாக்டரின் நேரடி கண்காணிப்பில், தேவையான மருத்துவ உதவி, உடனடியாகக் கிடைப்பது அவசியம். 
இனியாவது, அவசர கால நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். 

சுகாதாரத் துறையில் அரசியல் செய்து கொண்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.
                                                                                                                                                                     மருத்துவர் என்.எஸ்.கனிமொழி
========================================================================================
ன்று,
அக்டொபர் -16.
 • சர்வதேச உணவு தினம்
 • பாஞ்சாலங்குறிச்சி  கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார் (1799)
 • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)
 • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
 • நடிகர் முத்துராமன் மரணம்.(1981)
==========================================================================================
                       ராசிபுரம் திருமானித்தாறு ஆற்றில் உண்டான ரசாயன நுரை .