இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

உண்மையான...குற்றவாளிகள் யார்?

மே தினம்

மே தினம், தொழிலாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் பாரம்பரிய தினமாக, உலகம் முழுதும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்த அரசியல் கட்சிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய அரசியல் நிலைமைகள் உலக அளவில் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், அவை தொழிலாளர் வர்க்க இயக்கத்துடனும் இடதுசாரி அரசியலுடனும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.

சென்ற ஆண்டு, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பல, வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்தன. ஐரோப்பாவில் அந்நியர்கள்மீது வெறுப்பை உமிழும் கட்சிகளும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளும் செல்வாக்குப் பெற்றுவரும் சூழ்நிலையில்தான் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பிரான்ஸ் நாட்டில் மேரின் லீ பென் (Marine Le Pen) தலைமையில் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதையும், நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சி (The Freedom Party), ஜெர்மனியில் ஜெர்மனிக்கான மாற்று (The Alternative for Germany) என்பவை முன்னுக்கு வந்திருப்பதும் இத்தகைய போக்குகளைக் குறிப்பாகத் தெரிவிப்பவைகளேயாகும்.

மேலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இடதுசாரிகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்த் தாக்குதல் (rightist counter offensive) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததற்குப்பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கிப்பிடிக்கும் வலதுசாரிகள் வெனிசுலாவில் உள்ள நிலைமையை பலவீனப்படுத்திட பகீரதப்பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு ஐரோப்பாவில் வலதுசாரிகள் பக்கம் நகர்வு ஏற்பட்டிருப்பதற்கான காரணிகளில் ஒன்று, அங்கே பிரதானமாகவுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளின் திவாலாகிப் போன அரசியலாகும். 

பாரம்பரியமாகத் தொழிலாளர்களுடன் நல்ல பிணைப்பை வைத்திருந்த இக்கட்சிகள், ஐரோப்பாவில் கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாறியிருப்பதே, இந்த சூழ்நிலைமை எழுவதற்குக் காரணம் ஆகும்.
இந்த கட்சிகள்ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது, இவை கடைப்பிடித்திடும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களின் இதர பகுதியினரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகளின் அரசுகள் வேலை வாய்ப்புகள் மீதும், சமூக நலத் திட்டங்கள் மீதும் தொடர்ந்து ஏவிவந்த தாக்குதல்கள்தான். 

ஆதரவு அளித்து வந்த தொழிலாளர் வர்க்கத்தை இத்தகைய சமூக ஜனநாயகக் கட்சிகளிடமிருந்து விலகிச் செல்வதற்கு இட்டுச் சென்றன. பல இடங்களில், நம்பகமிக்க இடதுசாரி மாற்று இல்லாத நிலையில், தொழிலாளர்களின் கோபமும் தற்போதுள்ள அமைப்பிற்கு எதிராகத் தனிமைப்படுதலும் அவர்களை வலதுசாரி தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்திட இட்டுச்சென்றன. 
டிரம்ப் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்திட்ட வலதுசாரி தேசியக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் இவை ஒரு காரணமாக அமைந்தன.

எனினும், சென்ற ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சிகளின் சமரசக் கொள்கைகளுக்கு எதிராக ஒருசில இடங்களில் தேவைப்படும் மாற்றம் நிகழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

பிரிட்டனில், பிளேரிசத்தால் (Blairism)(அதாவது டோனி பிளேரின் தலைமையில் இருந்த போது போர் வெறி பிடித்திருந்த) கறைபடிந்திருந்த தொழிலாளர் கட்சி, ஜெர்மி கோர்பின் அதன் தலைவராக வந்தபின் கடந்த கால கறைகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அமெரிக்காவில், சென்ற ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக சோசலிஸ்ட்” மேடையைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், தொழிலாளர் வர்க்கம், மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் கணிசமான அளவில் ஆதரவினைப் பெற்றதைப் பார்த்தோம். 
இது, ஜனநாயகக் கட்சியின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒரு கலகமாகும்.

சமீபத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முடிவடைந்த முதல் சுற்றில், இடதுசாரிகளின் மேடையான லா இன்சௌமைஸ் சார்பில் நின்ற ஜீன் லக் மெலென்சான் 19.62 சதவீத வாக்குகள் பெற்று வலுவான விதத்தில் முன்னேறியிருக்கிறார். 

சமூக ஜனநாயக சோசலிசக் கட்சியின் வேட்பாளர் மிகவும் குறைந்த அளவில் வெறும் 6.35 சதவீத வாக்குகளே பெற்றிருக்கிறார்.

இந்த அனைத்து நிகழ்வுகளிலுமே, இடதுசாரி மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்க முடிந்திருக்கிறது; மற்றும் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளின் நிலைப்பாடுகளுடன் முறிவினை ஏற்படுத்தக்கூடிய அளவில் கடும் தாக்குதலைத் தொடுக்க முடிந்திருக்கிறது. 

அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, அங்கே நிலவும் வெற்றிடத்தைக் காட்டுகிறது. அது ஒரு வலுவான இடது மாற்றால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்.

தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆட்சியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பினை மேற்கொண்டுவரும் அதே சமயத்தில், இத்தகைய எதிர்ப்பினை ஒரு நம்பகமான அரசியல் மாற்றாக மாற்றக்கூடிய அளவிற்கு அரசியல் சக்தி எதுவும் அங்கே இல்லை. 
சமூக ஜனநாயகக் கட்சிகளிடமும், சோசலிசம் என்று கூறிவிட்டு சமரசம் செய்து கொள்பவர்களிடமும் விலைபோகாமல் கறைபடியாமல் இடதுசாரி மேடைமூலம் உருவாகி இருக்கக்கூடியவர்கள் இதற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். 

இவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களையும், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்த்து சமர்புரிந்து வரும் இதர இயக்கங்களையும் ஒன்றிணைந்து ஒரு தெள்ளத்தெளிவான இடதுசாரி மேடையை உருவாக்க வேண்டும். இதனால் மட்டும்தான் ஒரு வலுவான வீரியமிக்க அரசியல் மாற்றை அளித்திட முடியும்.

இந்தியாவில், 2016 செப்டம்பர் பொது வேலைநிறுத்தத்திற்குப்பின்னர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பல வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. 


மிகப் பெரிய அளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் பல நடந்துள்ள போதிலும், குறிப்பாக இவற்றில், 2017 பிப்ரவரி 28 அன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய வேலைநிறுத்தம், இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனம் (FMRAI) பிப்ரவரி 3 அன்று நடத்திய ஒரு லட்சம் ஊழியர்களின் வேலைநிறுத்தம், மார்ச் 16 அன்று 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

தனியார்மயத்திற்கு எதிராக சேலம், துர்காபூர், பத்ராவதி உருக்காலை தொழிலாளர்கள் ஏப்ரல் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். 

சிஐடியுவின் அறைகூவலுக்கிணங்க 2017 ஜனவரி 20 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள், ‘அனைவருக்கும் கல்வி’ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

ஹரியானாவில் நடைபெற்ற சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், மாருதி சுசுகி நிகழ்வில் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து மாருதி தொழிற்பிரிவுகளில் நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தமும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

கர்நாடகாவில் 20 ஆயிரம் அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்கள் அனைவரும் பெங்களூருவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள். 

நான்கு நாட்கள் தொடர்ந்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்ததற்கும் மேலாக, அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும், உதவியாளர்களுக்கு 500 ரூபாயும் கூடுதலாக அறிவித்தது.
மேலே குறிப்பிட்ட தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கைகள், பிரதானமாக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும், தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்கள் வருமானத்தையும் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தன. 

இவைகள் தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியான போராட்டங்களின் குணத்தைப் பெற்றிருந்தன.
எனினும், நாட்டில் வலதுசாரிகளின் தாக்குதல்களை எதிர்த்திட தொழிலாளர் வர்க்கம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. 

தொழிலாளர் வர்க்கம் அவற்றை அரசியல்ரீதியாக எதிர்த்திட வேண்டிய நிலையில் இருக்கிறது. வலதுசாரி அரசியலின் பிரிக்கமுடியாத பகுதி, இந்துத்துவா மதவெறி தாக்குதல்களாகும். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொழில்மையங்களில் கணிசமான அளவிற்குத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாக்குகளை பாஜகவிற்கு அளித்திருப்பதைக் காண முடிகிறது.

“பொருளாதாரப் போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அரசியல் உணர்வை ஏற்படுத்திவிடாது” என்கிற மாமேதை லெனினின் பொருள்பொதிந்த வாசகத்தை இங்கே நினைவுகூர்தல் அவசியம். 

அவ்வாறு நம்பினோமானால், அது பொருளாதாரவாதத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்றே அர்த்தமாகும். இது, தற்போதுள்ள நிலை குறித்து சீர்திருத்த மாயைகளையே ஊட்டி வளர்த்திடும்.
தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் தொழிலாளர்களை வீரஞ்செறிந்த போராட்டங்களுக்குத் தயார்படுத்திடும் அதே சமயத்தில், அவர்கள் மத்தியில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான கூர்மையான அரசியல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும். 

இதனைத் தொழிற்சங்கங்கள் மட்டும் செய்துவிட முடியாது. இதனை, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில், அவர்களுடைய பணியிடங்களில், அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தார் மத்தியில், தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட வேண்டும்.
நாடு முழுதும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இந்துத்துவா குண்டர்கள் தங்கள் கருத்துகளுக்கு எதிராகப் பேசுபவர்களை நசுக்கிட முனைகிறார்கள்.
மாமேதை லெனின், தன்னுடைய புகழ்பெற்ற “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில் தெரிவித்துள்ளபடி, தொழிலாளி வர்க்கம் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தக்க பதிலடி கொடுக்கக்கூடிய விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

அதனை, சோசலிச உணர்வுடன் ஊட்டி வளர்த்திட வேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திச்செல்லக்கூடிய வல்லமையை அதற்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.
இன்றையதினம் இந்தியாவில், இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, தொழிலாளர் வர்க்கம் தலைமைதாங்க வேண்டும் என்கிற உணர்வை அதனிடம் ஊட்டி வளர்த்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்த்திட வேண்டும். அப்போதுதான், நவீன தாராளமய முதலாளித்துவம் மற்றும் வகுப்புவாதம் என்னும் இரண்டையும் எதிர்த்துப் போராடி முறியடிக்கக்கூடிய அளவிற்கு தொழிலாளர் வர்க்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஏப்ரல் 30, 2017)
(தமிழில்: ச.வீரமணி)
==============================================================================================
ன்று,
மே -01.
 •  உழைப்பாளர்(மே) தினம்
 • புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
 • இந்தியாவில்  மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
 • ===============================================================================================
கோடநாடு உண்மையான...குற்றவாளிகள் யார்?
ஜெயலலிதா கோட்டையில் அரசாண்டதை விட கொடநாட்டில் ஓய்வெடுத்ததே அதிகம்.அன்று கிராமத்தினர் கூட அவ்வழியாக போகக்கூடாது என்று தடுக்கப்பட்டதால்   மர்மம் நிறைந்த கொடநாடு மாளிகை இன்றோ மர்மம் மிகு  திகில் மாளிகையாகிவிட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கும் அதிகமாக சேர்த்துள்ளதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் கோர்ட்டில் பட்டியலிடப்பட்ட சொத்துபட்டியலில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 306 வகை யான சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெ., மறைவுக்குப்பின் இந்த சொத்துக்களின் கதி என்ன, யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, என்பது மர்மமாகவே உள்ளது. 

இச்சொத்துக்கள் பற்றி ஓரளவு விபரமறிந்த மன்னார்குடி குடும்பத்தினர், அவற்றை கைப்பற்ற கடும்போட்டியில் இறங்கியிருப்ப தாகவும், அதனால் மோதல் முற்றி வருவதாக வும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஒரு மாநிலத்தை ஆண்டு, ஆட்சியிலும், கட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஜெ.,வின் சொத்துக்களையே சூறையாட ஒரு கும்பல் திட்டமிட்டு துணிந்திருப்பதையே, கோடநாடு சம்பவம் காட்டுவதாக, தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும்,அதிமுகவில் இருந்தும் கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், காவலாளி ஓம்பகதுார், 51, என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பயன்படுத்திவந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஐந்து கைக்கடிகாரங்கள், வீட்டு அலமாரியில் வைக்கப்படும் படிகப்பொருட்கள் சிலவற்றை மட்டும் 
கொள்ளையடித்துச் சென்றனர்.


ஜெ., பங்களாவில் நுழையமுயன்ற முகமூடி கும்பலை பார்த்த காவலாளி ஓம்பகதுார் கூச்சலிட்டுள்ளார். அவரைப்பிடித்து கட்டிப் போட முயன்றபோது, திமிறி எழுந்து போராடி யுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், இரும்பு ராடால் அவரை தலையில் அடித்துள்ளது; இதில் அவர் உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தனிப்படை போலீசார் கூறுகையில், 'மற்ற காவலாளிகளை காட்டிலும், 'கூர்க்கா'க்கள் பணியிடத்திற்கு விசுவாசமாக நடப்பவர்கள். கொலை செய்யப்பட்ட ஓம்பகதுார், எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்த்து போராடியதாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்' என்றனர்.

''இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர், கோவையைச் சேர்ந்த சயான். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கூட்டுச் சேர்த்து கோடநாடு எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பணமிருக்கும் எனக்கருதி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாகிவிட்டார்.
''இன்னொரு முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாய மடைந்து கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார். இவ்வழக்கில், திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ்சமி,39, தீபு,32, சதீஷன், 42, உதயகுமார், 47, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் நீலகிரியைசேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கோ, அரசியல் பிரமுகர் களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. முழுக்க முழுக்க கனகராஜ், சயான் தலைமையிலான 11 பேர் கும்பலே காரணம்,'' என்று, நேற்றுமுன் தினம் அவசர அவசரமாக 'வழக்கை முடித்து' அறிக்கை வெளியிட்டிருக் கிறது நீலகிரி மாவட்ட போலீஸ்.

சம்பவம் நடந்து, ஐந்து நாட்களாக எந்த போலீஸ் உயரதிகாரியும் ஊடகங்களிடம் பேச முன்வராத நிலையில், தேடப்பட்டதாக கூறப் பட்ட நபர்கள் சாலை விபத்தில் சிக்கிய அன்று மாலையே, வழக்கின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டதைப் போன்று, நிருபர்களை அழைத்து பேட்டியும் அளித்திருக்கிறார் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா. இதன் பின்னணிதான், பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. 

போலீசார் கண்டுபிடித்து அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்ட, 'வழக்கின் கதை' (தியரி) பல்வேறு கேள்விகள் எழ காரணமாகி இருக்கிறது.

*கோடநாடு கொள்ளை வழக்கில் கனகராஜ், சயான் ஆகியோர்தான் 'மாஸ்டர் மைண்ட்' என்றால்... சாலை விபத்தில் அவர்கள் சிக்கும் முன்பே, அவர்களை பிடிக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை என்ன?
* கனகராஜை 'தீவிரமாக' தேடியிருந்தால் அவரால் எப்படி சர்வசாதாரணமாக தனது வீட்டிற்கு சென்றுவர முடிந்தது? நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது இரு சக்கர வாகனத்தை 'ஓசி' வாங்கிச் செல்ல முடிந்தது? இவரது நடவடிக்கைகளை உண்மையாகவே கண்காணித்திருந்தால் விபத்தில் சிக்கி பலியாகும் முன்பே எளிதாக கைது செய்திருக்க லாமே; அதை செய்யாதது ஏன்?
* வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கூறப்படும் சயான், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீத்து ஆகியோர், விபத்துக்குள்ளான காரில் இருந்து மீட்கப்படும் போது, மூவர் கழுத்திலும் ஒரே மாதிரியான வெட்டுக்காயம் இருந்ததாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீலகிரி போலீசார் விசாரித்தனரா?
* மனைவி, மகளை பலிகொடுத்த சயான், பாலக்காடு மருத்துவமனையில் சுயநினைவுடன் பேசும் நிலையில்தான் இருந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அங்குள்ள மாஜிஸ்திரேட்டை வரவழைத்து, 'மரண வாக்குமூலம்' வாங்காமல் கோவைக்கு அவரை, அவசர அவசரமாக கோவை போலீசார் 'துாக்கி வந்தது' யாருடைய உத்தரவின் பேரில்? அதன் நோக்கம் என்ன?

*ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் கடந்த, 2012 ம் ஆண்டிலேயே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், கோடநாடு பங்களாவில், 'சி.சி.டி.வி.,' கேமரா கிடையாது என்பது அவருக்கு எப்படி தெரியும்?
* சாதாரண டிரைவரான கனகராஜ் என்ற தனி நபருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு கெடுபிடி மிகுந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து 
கொள்ளையடிக்கும் துணிச்சல் வருமா?
* ஜெ., மரணத்துக்குப்பிறகோ, சசிகலா சிறைக்குப் போன பிறகோ கோடநாட்டில் நடக்காத சம்பவம், தினகரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக டில்லி சென்றதும் நடந்ததன் பின்னணியை விசாரித்தனரா?
* ஜெ., - சசி பங்களா அறைகளில் இருந்த ஐந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே களவுபோனது என்ற முடிவுக்கு எப்படி போலீசார் வந்தனர்? கொள்ளையர்கள் இவ்வாறு கூறினர் என்றால்... அவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டதா போலீஸ்? வேறுபொருளோ, ஆவணமோ கொள்ளை போகவில்லை என்பதை யாரை வைத்து புலன்விசாரணையில் உறுதிப்படுத்தினார்கள்?
* கூலிப்படையை ஏற்பாடு செய்ததே மன்னார்குடி குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக இருக்கும், நீலகிரி மாவட்டத்தில் மர ஆலை நடத்தும் முக்கிய புள்ளி என, தனிப்படை போலீசார் விஷயத்தை முன்கூட்டியே கசியவிட்டது எப்படி?
*கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அந்நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அவர் பல ஆண்டு களாக கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதார ணமாக சென்று வந்தவர் என்பது, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களும் அறிந்த விஷயம். அவ்வாறு இருக்கையில் அவரை விசாரணை செய்யாமலேயே அவசர அவசரமாக வழக்கை முடிக்க துாண்டிய சக்தி எது?
*கொலை நடப்பதற்கு மூன்று நாள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார் என்ற நிலையில் அவரது நடவடிக்கையை போலீசார் சந்தேகித் திருக்க வேண்டாமா? மன்னார்குடி குடும்பத்தின ருக்கு மிகநெருக்கமானவர் என்பதால் உண்மை யறிந்து விசாரிக்காமல் விட்டுவிட்டார்களா?
*கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்த ஐந்து வாட்ச்களையும் குற்றவாளிகள், கேரளாவிலுள்ள ஆற்றில் துாக்கி வீசிவிட்டார்கள் எனக்கூறும் போலீசார், அலமாரி அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படும் படிகப் பொருட்களை மட்டும் எவ்வாறு பறிமுதல் செய்தார்கள்? 

ஜெ., - சசி பயன்படுத்திய ஐந்து வாட்ச்களின் மதிப்பை காட்டிலும், படிகப் பொருட்களின் விலை அவ்வளவு மதிப்புடை யதா? இவற்றை மட்டும் ஆற்றில் போடாமல் பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தார்களா?
* எஸ்டேட் பங்களா அறைகளில் ஜெயலலிதாவின் சொத்து பத்திர ஆவணங்களோ,பணமோ கொள்ளை போகவில்லைஎன்ற முடிவுக்கு போலீசார் எவ்வாறு வந்தனர்? வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, 'பிரஸ்'சுக்கு பேட்டி அளிக்குமாறு சென்னையில் இருந்து உத்தரவிட்ட அதிகாரி யார்?

இவை உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற கேள்விகள், நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் உலாவுகின்றன. போலீஸ் தரப்பில் பதில்தான் இல்லை. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமும் இல்லை. வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும், 'வாய்ப்பூட்டு' போடப்பட்டிருக் கிறது. கோடநாடு சம்பவம் மற்றும் போலீசாரின் 'வழக்கு முடிவுரையை' பார்க்கையில், கூலிப் படையினரை மட்டும் கணக்கில் காட்டி, அவர்களை குற்றம்புரியத்துாண்டிய நபர்களை போலீசாரே காப்பாற்ற முயற்சிப்பதாக புலம்புகின்றனர், கோட நாடு எஸ்டேட் தொழிலாளர்கள்.

கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதாரணமாக சென்றுவரக்கூடிய நபர் யார் என்பது, நீலகிரி போலீசார் அறியாத ரகசியம் அல்ல. அந்த நபருக்குத்தான் ஜெ., அறை எது, சசி அறை எது என்று நன்கு தெரியும். காரணம், பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகளை கவனித்தவர் அவர்.சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். அதனால் தான், கடந்த சட்டசபை தேர்தலின்போது, நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக் கான தேர்தல் செலவினங்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது.
அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களே அவரிடம் கூறி மேலிடத்தில் காரியம் சாதித்தது உண்டு. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா சிறையிலும், துணைப்பொதுச்செயலாளர் தினகரன் டில்லி போலீஸ்லும் உள்ளனர். குடும்பத் திற்குள் பல உறுப்பினர்களிடையே பதவி, சொத்துச் சண்டை உக்கிரத்தில் உள்ளது.

இந்நிலையில்தான், எஸ்டேட் பங்களா விபரங் களை நன்கறிந்த நபரைக்கொண்டு, சொத்துப்பத்திர ஆவணங்களை கடத்தியுள்ள னர். துரதிஷ்டவசமாக காவலாளி தடுத்து போராடியதால் அடித்துக் கொல் லப்பட்டி ருக்கிறார். விவகாரமும் யாரும் எதிர்பார்க் காத வகையில் பூதாகரமாகிவிட்டது. கொலைநடந்திருக்காவிட்டால், இது ஒரு பெரிய சம்பவ மாகவே கருதப்பட்டிருக்காது.
மன்னார்குடி குடும்ப உறுப்பினர் யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில், கூலிப் படையை அனுப்பியது, 'நீலகிரி புள்ளி'யாக இருக்கலாம் என்பதுதான் எங்களது சந்தேகம். சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரை பின்னாலிருந்து இயக்கியது யார் என தெரிய வில்லை.

ஏற்கனவே, வழக்கு சிக்கலில் உள்ள மன்னார் குடி குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது எஸ்டேட் காவலாளி கொலை விவகாரம்.சேலத்தைச் சேர்ந்த கனகராஜ், கோவையைச் சேர்ந்த சயான் ஆகியோரை மட்டுமே இவ்வழக்கில்,'தலைமை குற்றவாளிகளாக' அறிவித்ததன் மூலம், இவ்வழக்கின் உண்மையான 'மாஸ்டர் மைண்ட்'களை தப்பிக்கவிட்டுவிட்டதாகவே சந்தேகம் எழுகிறது. போலீஸ்துறையை, குறிப்பாக உளவுத்துறையை தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, கோடநாடு மர்மம் குறித்து புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்அப்போதுதான் உண்மை வெளிவரும் என்கிறார்கள் அதிமுகவில் உள்ள விபரம் தெரிந்தவர்கள்.

                                                                                                                           தினமலரில்  இருந்து,சனி, 29 ஏப்ரல், 2017

வரிசை இத்துடன் முற்று பெறுமா?

கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

உடனிருந்த மற்றொரு காவலாளி, கிருஷ்ண பகதுாரை தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டு, எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.


முக்கிய ஆவணங்களை தேடியே இக்கும்பல் கொடூர கொலையை நிகழ்த்தியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குற்றவாளிகள் தப்பிய வாகனங்களின் விபரங்களை, முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு  கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் திரட்டிய போலீசார், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த, சதீஷன், ஷிபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

யாரும் எளிதில் புகை முடியாத மர்மக்கோட்டையான ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் அடிக்கொரு 
கண்காணிப்பு  கேமரா பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கொள்ளை சம்பவம் நடக்கும் வேளையில் எல்லா கண்காணிப்பு  கேமராக்களும் முடங்கிப்போயிருந்தது மர்ம குடிசை மேலும் வலுவாக்கியுள்ளது.

யாரோ பெரும் புள்ளியின் தலையிட்டு இல்லாமல் இருக்காது எனக்கூறும் காவல்துறையினர் அப்போலோ மருத்துவமனை கண்காணிப்பு  கேமராகள்  முடக்கப்பட்டதைப் போல் என்று  முணுமுணுக்கின்றனர்.
 விசாரணையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில், ஜெயலலி தாவின் கார் டிரைவராக சில காலம் பணி யாற்றிய சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ், 36, என்பவருக்கும், கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சேலம், ஆத்துார் அருகே, உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காயங்களு டன் சடலமாக அவர் கிடந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கார் மோதி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


அதேநேரத்தில், கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய குற்றவாளி, கோவையிலி ருந்து பாலக்காடு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். 

இவர், கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள, இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்த, சயான், 35; கோவை, குனியமுத்துாரில் உள்ள பேக்கரி யில் பணியாற்றி வருகிறார்.இவர் தன் மனைவி வினுப்பிரியா, 30, மகள் நீலு, 5, ஆகியோருடன், கோவை யில் இருந்து நேற்று காலை, 6:00 மணி அளவில் காரில் கேரளாவுக்குச்சென்றார். 

பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தை கடக்க முயன்ற போது, சரக்கு லாரி மீது மோதி விபத்தில் சிக்கினார். மனைவி வினுப்பிரியா, மகள் நீலு, சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சயான் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 இந்த சம்பவத்திலும் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர்களில், இரு முக்கிய நபர்கள், ஒரே நாளில் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு போராடுகிறார். இவரது மனைவி, மகள் பலியாகியுள்ளனர். 

இது, இவ்வழக்கை விசாரிக்கும் நீலகிரி மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் தள்ளி யுள்ளது. இக்கொலை வழக்கை விசாரித்தால், இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அதிகாரிகள்
மறைந்த முதல்வர், ஜெ.,வின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியாகவே, கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்திருப்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. 

தற்போது, முக்கிய குற்றவாளிகள் என, சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளனர். 

மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை யில் இருந்த போது, சென்னையைச் சேர்ந்த கார்டனுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒரு வர், கோடநாடு எஸ்டேட்டிற்கு வந்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்று விட்டதா கவும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. 

பாலக்காட்டில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த சயான், கோவை குப்புசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தேடப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவர், பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இவரது மனைவி வினுப்பிரியா, ஐந்து வயது மகள் நீலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளன. வினுப் பிரியாவின் கழுத்தில் ஆழமான கத்திக்குத்து போன்ற காயம் உள்ளது. 

விபத்தின்போது, இடிபாடுகளில் சிக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் இறந்தாரா என்பதும், பிரேத பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும்.
 சயான் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்பதால், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மரண வாக்குமூலம் பெற போலீஸ் உயரதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதன்படி, கோவை, ஜே.எம்.எண்.5 மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேற்று காலை, மருத்துவமனைக்கு நேரில் வந்து, சயானிடம், ரகசிய வாக்குமூலம் பெற்று, பதிவு செய்தார். கோடநாடு கொலை வழக்கில் சயானின் வாக்குமூலம், முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

அப்போலோ சிகிசசை ,ஜெயலலிதா மரணம் ,சிறுதாவூர் பங்களா தீவிபத்து வரிசையில் கோடநாடு இணைந்துள்ளது.வரிசை இத்துடன் முற்று பெறுமா அல்லது தொடருமா என்பது  கோடி ரூபாய் கேள்வி.

கோடநாடு எஸ்டேட் கொலையைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளன. 
கோடநாடு எஸ்டேட் மர்மங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனில், கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, கோத்த கிரி போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர். 

 இதனால், கொலையில் தொடர்புடைய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சிபிஐக்கு போகாதவரை உண்மை வெளியாகாது எனத்தெரிகிறது.திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு போல்தான் மாமாங்கமாக விசாரணை நடக்கும் .
=============================================================================================
ன்று,
ஏப்ரல்-30.
 • ஜெர்மனி தந்தையர் தினம்
 • இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
 • வியட்நாம் விடுதலை தினம்(1975)
 • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
 • ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)
==============================================================================================

இந்திய குறிப்பாக தமிழர்களின் அறிவியல் திறனை சீனப்பத்திரிகைகளே அதிர்ந்து வெளியிடுமளவு செய்த அண்ணன்  செல்லூர் ராஜுக்கு "ஜெ"

நிதி ஆயோக் தேவைதானா?

இந்தியாவில் தொழிலாளர், பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்களுக்கு என்று பொதுமக்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் பாலைவனத்தில் தங்க  மாளிகையில் இயங்கும் அமைப்பாக நிதி ஆயோக் உள்ளது.

பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே இதன் கண்களுக்கு தென்படுவார்கள்.அவர்கள் நலனுக்கு மட்டுமே திட்டமிடும் அமைப்பாக மாறியுள்ளது.
அதற்கு பிரதமர் மோடிதான் வழிகாட்டி.வேறென்ன சொல்ல?

காங்கிரசு ஆட்சிக்கால திட்டம் கமிஷனுக்கு சமாதி கட்டிவிட்டு பாஜகவுக்கு லாலி பாடி உருவாக்கப்பட்ட அமைப்புதான்  நிதி ஆயோக்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்தது.

 தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி விவசாயிகளின் அனைத்து கடன்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர்.
தேர்தல் களத்தில் இருக்கும் பாரதீய ஜனதாவுக்கும் விவசாயிகளின் கடன் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

அதனால் நாட்டின் பிரதமரும் பாரதீய ஜனதா கட்சியின் முதன்மை பிரதிநிதியாக களத்தில் இருந்த நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன் பிரச்னை பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின் பாஜக  ஆட்சி பொறுப்பை ஏற்றால் முதல் மந்திரிசபைக் கூட்டத்தில் விவசாயக் கடன் பற்றி முடிவு செய்யப்படும் என்று மோடி அறிவித்தார்.

பாஜக வெற்ற பெற்றது. முதல் மாநில மந்திரிசபைக் கூட்டத்தில் விவசாயிகளின் கடன் ரத்துச் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடனை ரத்துச் செய்யலாமா என்று பரிசீலனை நடைபெறுகிறது.
தமிழகத்திலும் விவசாயிகள் கடனை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதும் மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் மத்திய அரசு கடனை ரத்துச் செய்ய முடியாது என்று தெரிவித்தார்கள்.

விவசாயக் கடனை ரத்துச் செய்யக் கோரி எல்லா மாநிலமும் கோரினால் வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் தர மத்திய அரசு எங்கே போகும் என்று வெங்கய்யா நாயுடு சூடாகக் கேள்வி எழுப்பினார்.

இதே சமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு விவசாயக் கடனை ரத்துச் செய்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறது.

அதே வரிசையில் கடைசியாக தலையை நுழைப்பது நிதி ஆயோக்.  நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலர் விவசாய வருமானம் என்ற பெயரில் வருமான வரியை ஏமாற்றுகிறார்கள். 

விவசாய வருமானத்துக்கும் வருமான வரி விதிப்பது பொருத்தமாக அமையும். ஒரு குறிப்பிட்ட வருமான அளவுக்கு மேல் வருமானம் இருந்தால் வரி விதிக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்கிறது.

பல நூறு விவசாயிகள் விவசாயம் தோல்வியடைந்த தொழிலாகப் போனதால் உயிரை தாரை வார்த்து வி்ட்டு கயிற்றில் தொங்கி இருக்கிறார்கள். 

நாட்டில் 60 சதவீதம் பகுதியில் வறட்சி தாண்டவ மாடுகிறது. குடிக்க தண்ணீர் இல்லை.

இந்த விவசாயிகள்தான் விவசாயக் கடனை ரத்து செய்யும்படி கேட்கிறார்கள். அவர்களிடம் வரி வாங்கி வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நினைப்பது அபத்தமாகத் தோன்றவில்லையா?விவசாயிகளின் கோவணத்தையும் பிடுங்க இது திட்டமிடுகிறது.இதன் குயுக்திகளால் விவசாயிகள் வேறு தொழிலுக்குத்தான் போக வேண்டிய கட்டாயம் உண்டாகும்.


யாரோ சிலர் வரி ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக விவசாயத்துக்கே வருமான வரி  விதிக்கலாம் என்று கூறுகிற அறிஞர்கள் தான் இங்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

விளைச்சலுக்காக செலவிடும் தொகையை விட சந்தை விலை குறைவாக இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படுகிறது. அதே மாநிலத்தில் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

இந்திய அரசின் அனைத்து வேளாண் திட்டங்களும் தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்குவது நிதி ஆயோக்கிற்கு தெரியவில்லையா?

விவசாயத்துக்கு வருமான வரி விதிப்பு கிடையாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லீ கூறியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் பயிருக்கு வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அம்மணமாக போராடுகையில் வரியை கட்டு என்பது எவ்வளவு கேவலமான செயல்.

மோடி ஆட்சிக்கு வந்தமூன்று ஆண்டுகளில் கார்பரேட்கள்,பெரும்  தொழிலதிபர்களுக்கு சேவை வரி,விற்பனை வரி,நிறுவன(கார்ப்பரேட்) வரி என்று பலவகைகளில் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடிகள் தள்ளுபடி என்று இதுவரை 4.5 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்துள்ளார்.
இது இந்தியா போன்ற ஏழைகள் நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு.

ஆனால்  சமையல் எரிவாயுக்கு மானியத்தை இழக்க சொல்லுகிறார்,இலவச சத்துணவுக்கு ஆதார் அவசியம் என்கிறார்.தினம்தோறும் பெட்ரோல் விலையை ஏற்றி இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நடுத்தர மக்களை அயரவைக்கிறார்.அதன்  மூலம்  மறைமுகமாக உயரும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள்,ஏழைகளை கசக்கி பிழிகிறார்.

அதற்கு துணை போகும் இந்த நிதி ஆயோக் தேவைதானா?

இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

அனால் பாஜக அரசுக்கு அதானி,அம்பானிகள் மட்டும்தானே மக்கள்.இந்தியர்கள்.

இது நிதி ஆயோக் அல்ல நிதி அயோக்கியம் என்று மாற்றுங்கள்.
============================================================================================
ன்று,
ஏப்ரல்-29.
 • உலக  நடன தினம்
 • ஜப்பான் தேசிய தினம்
 • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
 •  ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)
பாவேந்தர் பாரதிதாசன் 
 புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன்  இயற்பெயர் சுப்புரத்தினம். 
அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
=============================================================================================
ராஜா ரவிவர்மா,
 கேரள மாநிலம், திருவிதாங்கூர் சமஸ்தானம், கிளிமானுாரில், 1848- ஏப்., 29ல் பிறந்தார். 
சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக்கவராய் இருந்தார். அந்நாளில், சென்னை ஆளுனர் பக்கிங்ஹாம் கோமகனாரை தத்ரூபமாக வரைந்தார்; 

அது, பெரும் புகழைத் தேடி தந்தது.தன்னை சிறப்பாக வரைந்த, ரவிவர்மாவிற்கு, 'வீரஸ்ருங்கலா' எனும் உயரிய விருதை அளித்து, ஆயில்யம் திருநாள் மகாராஜா கவுரவித்தார். 
1873ல், வியன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில், ரவிவர்மாவின் ஓவியங்கள் விருதுகளை பெற்றன.தென்மாநில பெண்களை, இந்து கடவுள்களின் உருவங்களாக படைத்தார். 
பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து, உலகப்புகழ் பெற்றார். 
2002ல், ஒரு சவரன் தங்கம், 3,392 ரூபாய். அப்போதைய நிலையில், டில்லியில் நடந்த ஏலத்தில், இவரது யசோதை, கிருஷ்ணன் ஓவியம், 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இவர், 1906 அக்., ௨ல் காலமானார். 
==============================================================================================

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

மாட்டுக்கு சூடு!..மனுசனுக்கு ஆதார்?

2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்திய இந்துத்துவ ரவுடிக் கூட்டம், அவரை வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு அடித்தே கொன்றது. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.
அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள்.
அதே போல 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே வழிமறிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் ஒன்று, லாரி ஓட்டுநனர் ஜாகித் அகமதுவையும் அவருடன் வந்த இன்னொரு முசுலீமையும் கண்மூடித்தனமாக தாக்கியது. கொடூரமாக தாக்கப்பட்ட ஜாகித் பத்து நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார். தாக்குதல் குறித்த தகவல் பரவியதும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் பரவுகின்றன.
உதம்பூர் தாக்குதலை அடுத்து போராடிய காஷ்மீர் மக்களை ஒடுக்க வந்த பாதுகாப்புப் படையினர் கல்வீச்சுக்கு ஆளாகினர். ’தேசிய ஊடகங்களோ’ பாதுகாப்புப் படையினர் அநியாயமாக தாக்கப்படுவதாக திரித்து தேசியவெறியைத் தூண்டின. பின்னர் விசாரணையில் ஜாகித் ஓட்டி வந்த லாரியில் கிடைத்த செத்த மாடுகள் விச உணவின் காரணமாகவே இறந்தன என்பதும் அவற்றின் இறைச்சி உண்பதற்கானதல்ல என்றும், அவை கசாப்புக்காக எடுத்து வரப்பட்டவை அல்ல என்பதும் உறுதியானது.
உதம்பூர் தாக்குதல் நடந்த அதே சமயத்தில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே மாடுகளைக் ’கடத்திச்’ செல்ல முயன்றதாக இருபது வயது இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றது இந்துத்துவ குண்டர் படை ஒன்று.
ஜனவரி 2016-ல் மகாராஷ்டிர மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கிர்க்கியா இரயில்வே நிலையத்தில் பயணிகள் சிலரை கண்மூடித்தனமாக தாக்குகிறது இந்து பரிவார அமைப்பான கோரக்‌ஷன சமிதியைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. மறுநாள் உள்ளூர் பத்திரிகைகள் பசு மாமிசத்தை கடத்திய முசுலீம் பயணிகளை கோரக்‌ஷன சமிதி தாக்கியதாக செய்தி வெளியிட்டன. எனினும், பின்னர் நடந்த விசாரணைகளில் போலீசாரால் “கைப்பற்றப்பட்டு” தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது பசு மாமிசம் இல்லையென்றும், எருமைக் கறி என்றும் தெரிய வந்தது.
2016 மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் லாத்தேகர் மாவட்டத்தில் இரண்டு முசுலீம் கால்நடை வியாபாரிகளை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டனர் இந்துத்மத வெறியர்கள். கொல்லப்பட்டவர்கள் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் லாத்தேகர் மாவட்டத்தில் நடக்கும் புகழ்பெற்ற கால்நடைச் சந்தையில் இருந்து வளர்ப்பதற்காக ஆடு மாடுகளை வாங்க வந்தவர்கள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல்
2016 ஏப்ரல் 5-ம் தேதி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டெய்ன் அப்பாஸ் என்கிற 27 வயது வாலிபர் விவசாயத்திற்காக காளை மாடுகளை வாங்கி விட்டுத் திரும்பும் வழியில் கோ ரக்‌ஷா தள் என்கிற பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
2016 ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங் தள் குண்டர்கள் கர்நாடக மாநிலம் கோப்பா அருகே தலித் குடும்பம் ஒன்று மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கொடூரமான இத்தாக்குதலில் அந்த தலித் குடும்பம் மரண காயங்களுக்கு உள்ளானது.
அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலம் ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல் ஒன்று. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் முழுக்க தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். செத்த மாட்டை சுமக்க மாட்டோம், உரிக்க மாட்டோமென தீர்மானித்த குஜராத் தலித் மக்கள், அரசு அலுவலகங்களை செத்த மாடுகளால் நிறைத்தனர். பல வாரங்கள் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் அதிர்ச்சியடைந்த இந்துத்துவ கும்பல், தலித் வாக்குகளை இழந்து விடுவோம் என்கிற அச்சத்தில் ஆழ்ந்தன.
அதே மாதம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சோர் மாவட்ட இரயில்வே நிலையத்தில் மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இரண்டு முசுலீம் பெண்களைத் தாக்கியது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. 2016, ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மோகதி எலிசா, லாசர் எலிசா ஆகிய இரண்டு தலித் சகோதரர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் போது கோ ரக்சா சமிதியைச் சேர்ந்த 100 குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
2017, ஏப்ரல் ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தில் முறையாக அனுமதி பெற்று மாடுகளை ஏற்றி வந்த டெம்போ வாகனங்களை வழிமறித்த பஜ்ரங்தள் குண்டர்கள், மாடுகளை ஏற்றி வந்த 15 இசுலாமியர்களைக் கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் பெஹ்லு கான் என்கிற முதியவர் கொல்லப்பட்டார் (இணைப்பில் வீடியோ : Rajasthan cow vigilante beat Muslim man to death; Police books six, launches manhunt). இதே மாதம் கடந்த 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்த நாடோடிக் குடும்பம் ஒன்றை வழிமறித்த கோ ரக்‌ஷக் குண்டர் படை, கொடூரமான முறையில் தாக்கி உள்ளது. (இணைப்பில் வீடியோ: In Shocking Videos Of Cow Vigilante Attack, Jammu Family Begs For Mercy).
பஜ்ரங்தள் குண்டர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமிய முதியவர்.
ஜம்முவில் தாக்குதல் நடத்திய அதே நாளில் (21-ம் தேதி) புது தில்லி கால்காஜி பகுதியில் எருமைகளைக் கடத்த முற்பட்டதாக பொய்யாகக் குற்றம் சுமத்தி மூன்று முசுலீம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். கடுமையான தாக்குதலோடு இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர்களை மறுநாள் எழுப்பி விசாரித்த போலீசார், அவர்கள் மேல் மிருக வதைத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலே விவரிக்கப்பட்டவை அனைத்தும் ஊடகங்களில் வெளியான சம்பவங்கள் மட்டுமே. ஊடகங்களில் வெளியாகாமல் சிறியளவிலான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 317 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இந்த  தகவலை கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலாக உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜ்ஜுவே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உத்திரபிரதேச தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை ’திடீரென’ உயர்ந்துள்ளன. அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள். 2014-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன் மோடி உத்திரவாதம் அளித்திருந்த “வளர்ச்சி” ஏதும் நடைபெறாத நிலையில் தான் இந்துத்துவ வெறுப்பரசியலை உயர்த்திப் பிடிக்கத் துவங்கினர்.
உண்மையில் மோடி வாக்களித்த “வளர்ச்சியை” அவரே கூட நம்பியிருக்க மாட்டார். காங்கிரசின் ஊழல்களால் ஆத்திரமுற்றிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு காட்டிய கண்கட்டி வித்தை தான் மேற்படி “வளர்ச்சி”. ஆட்சிக்கு வந்ததும் பீறிட்டுக் கிளம்புவதற்கு தயாராக இருக்கும் பாலாறு மற்றும் தேனாற்றின் மதகுகளைத் திறந்து விடப் போவதாக சொல்லி வந்த மோடி, மெல்ல மெல்ல சுதி குறைந்து ”60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சி அவலங்களை ஐந்தாண்டுகளில் தீர்க்க முடியுமா?” எனக் கேட்க ஆரம்பித்துள்ளார் –ஆராசனை தலைக்கேறிய நிலையில் இடையில் ஆறாண்டுகள் நடந்த வாஜ்பாயின் ஆட்சியையும் காங்கிரசின் கணக்கிலேயே வரவு வைத்து விட்டனர் மோடி பக்தர்கள்.
தற்போது 2019-ல் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை குறிவைத்து களமிறங்கியிருக்கும் இந்துத்துவ கும்பல், சகல வகைகளிலும் மத ரீதியிலான பதற்ற நிலையில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை நாடெங்கும் வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தமிழர் கலாச்சாரத்தை மீட்பது எனும் முகாந்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நைச்சியமாக இந்துத்துவ கோமாதா அரசியலுடன் முடிச்சுப் போட பாரதிய ஜனதா எடுத்த முயற்சிகளை நாம் அறிவோம். ”ஜல்லிக்கட்டுக்காக” நடந்ததாக சொல்லப்பட்டாலும், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கமாக பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு இருந்ததாலும், தொடர்ந்து மத்திய அரசின் மாநில விரோதப் போக்குகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் போராட்டக் களத்தில் ஆளுமை செலுத்தியதாலும் பாரதிய ஜனதாவின் முயற்சி படுகேவலமாக தோற்றுப் போனதையும் நாம் கண்டோம்.
தமிழகத்தைப் போல் ஒப்பீட்டளவில் பார்ப்பன எதிர் மரபுகள் மக்கள் மயமாகாமலும் அவற்றுக்கு வலுவான அரசியல் அடித்தளங்கள் ஏற்படாத வரலாற்றுச் சூழலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் நிலவுவதால் இந்துத்துவ கும்பலின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்து வருகின்றன. சான்றாக யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட முடியும்.
கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதட்டத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வவது இந்துத்துவ கும்பலின் திமிரை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆதித்யநாத்தின் வெற்றிக்குப் பின் பசுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த ஃபதேபூர் சிக்ரியைச் சேர்ந்த முசுலீம் காய்கரி வியாபாரி ஒருவரைத் தாக்கிய ஹிந்து யுவ வாகினி, பஜ்ரங் தள் மற்றும் கோ ரக்‌ஷக் சேணாவைச் சேர்ந்த குண்டர்கள், அவரது காய்கறிக் கடையைக் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது உள்ளூர் காவல் துறை. பாரதிய ஜனதாவே அதிகாரத்தில் இருப்பதால் முதல் தகவல் அறிக்கையே கூட மலம் துடைக்கும் தாளாகத் தான் மதிக்கப்படும் என்பது வேறு விசயம். ஆனால், தாமே அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், தமது அடாவடிகளை குறைந்தபட்சமாக பதிவு கூட செய்யக் கூடாதென்கிற ஆத்திரத்தில் ஃபதேபூர் சிக்ரி காவல் நிலையத்தை கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த துணை சூப்பிரெண்டை குறி வைத்து அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன் சகரான்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கலவரம் ஒன்றின் போது ரோந்து வந்த மூத்த போலீசு சூப்பிரெண்டு லவ குமாரைத் தாக்கியுள்ளனர். சகரன்பூரைச் சேர்ந்த தலித்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடியுள்ளனர் – இதற்கு போட்டியாக இந்துத்துவ கும்பல் நடத்திய ஊர்வலமே கலவரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வதால் இந்துத்துவ கும்பலின் திமிர் பல மடங்கு அதிகரித்துள்ளது. போலீசு, இராணுவம், நீதித்துறை, அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரங்களைக் காவிமயமாக்குவது, அதனைக் கொண்டு சட்டபூர்வமாகவே தமது செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்கிற அவர்களது வழக்கமான அணுகுமுறைக்கு இணையாக தாமே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வது, தமது பரிவார அமைப்புகளையே சட்டவிரோத சிவில் இராணுவ படையாக மாற்றியமைப்பது என்கிற புதிய உத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதையே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தொடர்ந்து மதரீதியிலான பதற்ற நிலையில் சமூகத்தைத் வைத்திருப்பதற்காக மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் தமக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு புதுப் புதுக் கோணங்களில் இருந்தெல்லாம் திட்டங்களை யோசித்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்கும் திட்டத்தை துவங்கவுள்ளனர்.
“இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாட்டுக்கும், மாட்டு வம்சத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட உள்ளது” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மேற்படி திட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த ஜனவரி மாதமே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மோடி அரசின் திட்டங்கள் முட்டாள்தனமானவை என்று நம்பியவர்கள் கூட அது இந்தளவுக்கு அடிமுட்டாள்தனமானது என்பதை நம்பாததால், அப்போது வெளியான செய்திகளை ’முட்டாள்கள் தின’ விளையாட்டென நினைத்துக் கடந்து  விட்டனர்.
ஆனால், மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கும் தமது திட்டத்தை முனைப்புடன் தொடங்கியுள்ளது மோடி அரசு. நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள். சுமார் 150 கோடி ருபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தைக் கண்காணிப்பது சாத்தியமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள்.
அதாவது கன்று ஈனும் வயதைக் கடந்த, பால் வழங்க முடியாத வயதான மாடுகளை கைவிடுவது அல்லது மாடுகள் அறுப்பது அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அடிமாடாக அனுப்புவது போன்ற முடிவுகளை எடுக்கும் விவசாயிகளையும் கூட இனிமேல் இத்திட்டத்தின் விளைவாக குற்றவாளிகளாக்க முடியும். இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.
ஒரு பக்கம் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் தமது பயங்கரவாதப் படைகளைக் களமிறக்கி கலவரங்களைத் தூண்டி நாட்டை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருப்பது – இன்னொரு பக்கம் அவ்வாறு பதற்றத்தில் வைத்திருப்பதை உத்திரவாதம் செய்யும் விதமான திட்டங்களை சட்டப்பூர்வமாகவே நிறைவேற்றி வைப்பது என இரட்டை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது இந்துத்துவ கும்பல். இவையனைத்தும் எதிர்வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகளோ பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியலைக் கேள்விக்குட்படுத்தினால் தங்களுடைய இந்து ஓட்டு வங்கியிலும் ஓட்டை விழுந்து விடுமென்கிற அச்சத்தில் கள்ள மௌனத்தோடு உடன்பட்டுப் போகின்றன. இந்நிலையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் முற்போக்காளர்களுமே இந்துத்துவ அரசியலைக் களத்தில் முறியடிக்க முடியும். எப்படி தமிழகத்தின் வீதிகளில் இசுலாமியர்களை விரோதிகளாக கட்டமைக்க முனைந்த இந்துத்துவ கோமாதா அரசியல் தோற்கடிக்கப்பட்டதோ அதே போல் நாடெங்கும் முறியடிக்கப்பட வேண்டும்.
நன்றி:வினவு.                                                                                                                                 – சாக்கியன்
===========================================================================================================
ன்று,
ஏப்ரல்-28.
 • அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
 • மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
 • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம்(1942)
 • ===========================================================================================