நிதி ஆயோக் தேவைதானா?

இந்தியாவில் தொழிலாளர், பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்களுக்கு என்று பொதுமக்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் பாலைவனத்தில் தங்க  மாளிகையில் இயங்கும் அமைப்பாக நிதி ஆயோக் உள்ளது.

பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே இதன் கண்களுக்கு தென்படுவார்கள்.அவர்கள் நலனுக்கு மட்டுமே திட்டமிடும் அமைப்பாக மாறியுள்ளது.
அதற்கு பிரதமர் மோடிதான் வழிகாட்டி.வேறென்ன சொல்ல?

காங்கிரசு ஆட்சிக்கால திட்டம் கமிஷனுக்கு சமாதி கட்டிவிட்டு பாஜகவுக்கு லாலி பாடி உருவாக்கப்பட்ட அமைப்புதான்  நிதி ஆயோக்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்தது.

 தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி விவசாயிகளின் அனைத்து கடன்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர்.
தேர்தல் களத்தில் இருக்கும் பாரதீய ஜனதாவுக்கும் விவசாயிகளின் கடன் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

அதனால் நாட்டின் பிரதமரும் பாரதீய ஜனதா கட்சியின் முதன்மை பிரதிநிதியாக களத்தில் இருந்த நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன் பிரச்னை பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின் பாஜக  ஆட்சி பொறுப்பை ஏற்றால் முதல் மந்திரிசபைக் கூட்டத்தில் விவசாயக் கடன் பற்றி முடிவு செய்யப்படும் என்று மோடி அறிவித்தார்.

பாஜக வெற்ற பெற்றது. முதல் மாநில மந்திரிசபைக் கூட்டத்தில் விவசாயிகளின் கடன் ரத்துச் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடனை ரத்துச் செய்யலாமா என்று பரிசீலனை நடைபெறுகிறது.
தமிழகத்திலும் விவசாயிகள் கடனை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதும் மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் மத்திய அரசு கடனை ரத்துச் செய்ய முடியாது என்று தெரிவித்தார்கள்.

விவசாயக் கடனை ரத்துச் செய்யக் கோரி எல்லா மாநிலமும் கோரினால் வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் தர மத்திய அரசு எங்கே போகும் என்று வெங்கய்யா நாயுடு சூடாகக் கேள்வி எழுப்பினார்.

இதே சமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு விவசாயக் கடனை ரத்துச் செய்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறது.

அதே வரிசையில் கடைசியாக தலையை நுழைப்பது நிதி ஆயோக்.  நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலர் விவசாய வருமானம் என்ற பெயரில் வருமான வரியை ஏமாற்றுகிறார்கள். 

விவசாய வருமானத்துக்கும் வருமான வரி விதிப்பது பொருத்தமாக அமையும். ஒரு குறிப்பிட்ட வருமான அளவுக்கு மேல் வருமானம் இருந்தால் வரி விதிக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்கிறது.

பல நூறு விவசாயிகள் விவசாயம் தோல்வியடைந்த தொழிலாகப் போனதால் உயிரை தாரை வார்த்து வி்ட்டு கயிற்றில் தொங்கி இருக்கிறார்கள். 

நாட்டில் 60 சதவீதம் பகுதியில் வறட்சி தாண்டவ மாடுகிறது. குடிக்க தண்ணீர் இல்லை.

இந்த விவசாயிகள்தான் விவசாயக் கடனை ரத்து செய்யும்படி கேட்கிறார்கள். அவர்களிடம் வரி வாங்கி வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நினைப்பது அபத்தமாகத் தோன்றவில்லையா?விவசாயிகளின் கோவணத்தையும் பிடுங்க இது திட்டமிடுகிறது.இதன் குயுக்திகளால் விவசாயிகள் வேறு தொழிலுக்குத்தான் போக வேண்டிய கட்டாயம் உண்டாகும்.


யாரோ சிலர் வரி ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக விவசாயத்துக்கே வருமான வரி  விதிக்கலாம் என்று கூறுகிற அறிஞர்கள் தான் இங்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

விளைச்சலுக்காக செலவிடும் தொகையை விட சந்தை விலை குறைவாக இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படுகிறது. அதே மாநிலத்தில் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

இந்திய அரசின் அனைத்து வேளாண் திட்டங்களும் தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்குவது நிதி ஆயோக்கிற்கு தெரியவில்லையா?

விவசாயத்துக்கு வருமான வரி விதிப்பு கிடையாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லீ கூறியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் பயிருக்கு வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அம்மணமாக போராடுகையில் வரியை கட்டு என்பது எவ்வளவு கேவலமான செயல்.

மோடி ஆட்சிக்கு வந்தமூன்று ஆண்டுகளில் கார்பரேட்கள்,பெரும்  தொழிலதிபர்களுக்கு சேவை வரி,விற்பனை வரி,நிறுவன(கார்ப்பரேட்) வரி என்று பலவகைகளில் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடிகள் தள்ளுபடி என்று இதுவரை 4.5 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்துள்ளார்.
இது இந்தியா போன்ற ஏழைகள் நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு.

ஆனால்  சமையல் எரிவாயுக்கு மானியத்தை இழக்க சொல்லுகிறார்,இலவச சத்துணவுக்கு ஆதார் அவசியம் என்கிறார்.தினம்தோறும் பெட்ரோல் விலையை ஏற்றி இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நடுத்தர மக்களை அயரவைக்கிறார்.அதன்  மூலம்  மறைமுகமாக உயரும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள்,ஏழைகளை கசக்கி பிழிகிறார்.

அதற்கு துணை போகும் இந்த நிதி ஆயோக் தேவைதானா?

இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

அனால் பாஜக அரசுக்கு அதானி,அம்பானிகள் மட்டும்தானே மக்கள்.இந்தியர்கள்.

இது நிதி ஆயோக் அல்ல நிதி அயோக்கியம் என்று மாற்றுங்கள்.
============================================================================================
ன்று,
ஏப்ரல்-29.
  • உலக  நடன தினம்
  • ஜப்பான் தேசிய தினம்
  • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
  •  ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)
பாவேந்தர் பாரதிதாசன் 
 புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன்  இயற்பெயர் சுப்புரத்தினம். 
அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
=============================================================================================
ராஜா ரவிவர்மா,
 கேரள மாநிலம், திருவிதாங்கூர் சமஸ்தானம், கிளிமானுாரில், 1848- ஏப்., 29ல் பிறந்தார். 
சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக்கவராய் இருந்தார். அந்நாளில், சென்னை ஆளுனர் பக்கிங்ஹாம் கோமகனாரை தத்ரூபமாக வரைந்தார்; 

அது, பெரும் புகழைத் தேடி தந்தது.தன்னை சிறப்பாக வரைந்த, ரவிவர்மாவிற்கு, 'வீரஸ்ருங்கலா' எனும் உயரிய விருதை அளித்து, ஆயில்யம் திருநாள் மகாராஜா கவுரவித்தார். 
1873ல், வியன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில், ரவிவர்மாவின் ஓவியங்கள் விருதுகளை பெற்றன.தென்மாநில பெண்களை, இந்து கடவுள்களின் உருவங்களாக படைத்தார். 
பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து, உலகப்புகழ் பெற்றார். 
2002ல், ஒரு சவரன் தங்கம், 3,392 ரூபாய். அப்போதைய நிலையில், டில்லியில் நடந்த ஏலத்தில், இவரது யசோதை, கிருஷ்ணன் ஓவியம், 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இவர், 1906 அக்., ௨ல் காலமானார். 
==============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?