பதவிக்கு மரியாதை ,

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தப்பட்ட போது இடதுசாரி கட்சிகள் ,காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
காரணம் ராம்நாத் கோவிந்த்ஆரம்பகாலம் முதலே ஆர்.எஸ்.எஸ்,பின்னர் அதன் மற்றோரு வடிவான பாஜக காரர்.
அதுதான் அவரை எதிர்த்து வேட்பாளரை  நிறுத்த முதல் காரணம் .
ஆனால் குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியில் அமர்ந்ததில் இருந்து அவரின் பேச்சுக்கள்,நடவடிக்கைகள் அப்பதவிக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ளது.
அவரைக்கண்டு பயந்து எதிர்த்த வர்கள் அவரை பாராட்டும்படியும்,அவரை முன்னிறுத்திய பாஜக,ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்கு அதிருப்தியையும் தருகிறது.


பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்து, வேட்பாளராக நிறுத்தப்பட்டு, குடியரசுத் தலைவரான பின்னர், ராம்நாத் கோவிந்த் பேசிவரும் பேச்சுக்கள் பெரும்பாலும்- அவரின் முந்தைய பேச்சுக்களிலிருந்து நிறைய மாறுபட்டிருப்ப தால், பாஜகவினர் பதற்றம் அடை யத் துவங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது “இந்தியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுகிரக வாசிகள்” என்று கூறியதுடன், சிறுபான்மையினரின் உரிமை தொடர்பான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை, கடுமையாக எதிர்த்தவர்தான் ராம்நாத் கோவிந்த். அதன்மூலம் தீவிர ஆர்எஸ்எஸ்காரராக, ராம்நாத்கோவிந்த் தன்னை அடை யாளப்படுத்தி இருந்தார். 

நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியில் பாஜக அவரை அமர்த்துவதற்கும் அதுதான் காரணம்.

ஆனால், தற்போது ராம்நாத் கோவிந்தின் பேச்சுக்கள், பாஜக-வினரை நிம்மதி இழக்க வைத்து வருகிறது. ராம்நாத் எழுதிக் கொடுத்த தைச் சொல்கிறாரா; அவரின் சிந்த னைகள்தான் இதுவா? என்று குழம்பி வருகின்றனர். 
முதலில் இந்தித் திணிப்பு விஷயத்தில்தான் ராம்நாத், பாஜக-வினருக்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட காலங்களில் இந்தித் திணிப்புக்கு எதிராக அண்மையில் போராட்டங் கள் வெடித்தன. 

குறிப்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங் களில் இடம்பெற்றிருந்த இந்தி வார்த்தைகளை கன்னட அமைப்பி னர் தார் பூசி அழித்தனர். தமிழ்நாடு,மும்பை, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் சாலையோர மைல் கற்கள், ரயில்நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டன. ஒரு குடியரசுத் தலைவராக இதன்மீது உடனடியாக ராம்நாத் கவனம் செலுத்தினார். 

“இந்தி பேசும்மாநிலங்கள், அம்மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது” என்றார். “இந்தித் திணிப்பால் நாட்டின் ஒற்றுமை குலையும்”என்றும் அதிரடியாக எச்சரிக்கை கொடுத்தார்.
திப்புசுல்தான்
அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய ‘தீக்ஷா பூமி’க்குச் குடியரசுத் தலைவர் சென்றார். அங்கு “அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது” என குறிப்பிட்டார்.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான- தென்னிந்திய விடுதலைப் போராட்டத்தின் குவிமையமாக விளங்கியவர் திப்பு சுல்தான். அவரைப் பாஜகவினர் ஏற்பதில்லை. 
கர்நாடகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடத்த மாநிலஅரசு தீர்மானித்திருப்பதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். விழா கொண்டாடக்கூடாது என்று வெறிக்கூச்சல் போட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் திண்டுக்கல் லில் அமைக்கப்பட்டுள்ள திப்பு மணிமண்ட பத்தை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர்.
ஆனால், கடந்த அக்டோபர் 25-ஆம்தேதி காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பவள விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், திப்பு சுல்தான் விவகாரத்திலும் பாஜகவினரை கதற விட்டார்.

“மைசூர் புலி எனப்பட்ட திப்பு சுல்தான் வலிமையான வீரர்; 
அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்; இந்த போர்களில் அவர் பயன்படுத்திய ராக்கெட்டுகளை வைத்துத்தான் பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தையே உருவாக்கினார்கள் பின்பற்றத் தொடங்கினர்; அத்தகைய மாவீரர் கர்நாடகத்தின் மைந்தன் என்பது சிறப்பு” என்று திப்பு சுல்தானை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.

ஆனால், குடியரசுத் தலைவரின் கேரள வருகை பாஜகவினரை இன்னும்அதிகமாக பதறடித்துள்ளது. கேரளத்தில் ஆர்எஸ்எஸ்காரர்கள் படுகொலை செய்யப்படுவதாக கூறி, பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா துவங்கி, மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிர தேச பாஜக முதல்வர் சாமியார் ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் கேரள அரசுக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பரப்பி வருகின்றனர். 

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையில், நாட்டிலுள்ள 29 மாநிலங்களிலும் போராட்டம் என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று மாலை நடந்த அரசு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “கேரளா மனித வள மேம்பாடு, சுகாதார நலன் மற்றும் கல்வியில் நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது” என்று உண்மைப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். 

“வெளிநாடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை இந்தியா கையாள கேரளமே தலைமை தாங்குகிறது; கேரளா இந்திய வர்த்தகத்தின் எல்லையாகவும் விளங்குகிறது; 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்தன;
அரேபிய மற்றும் ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் மசா லாப் பொருட்களைத் தேடி கேரளாவையே வந்தடைந்தன; கேரளத் துறைமுகங்களின் செயல்திறனையும், நெறிவழுவா நடை முறைகள் குறித்தும் அவர்கள் (அரேபிய, ஐரோப்பிய வணிகர்கள்) எழுதியிருந்தனர்” என்று கேரளத்தின் சிறப்புக்களை வரிசைப் படுத்தியுள்ளார்.
“கேரள ஆயுர்வேத மையங்கள் நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன; 
அவை மனதளவிலும் நோயாளர்களைப் புத்துணர்வு பெறச் செய்கின்றன; 

எத்தியோப்பியாவில் உள்ள ஏராளமான முன்னோடி பள்ளி ஆசிரியர்களை என்னுடைய பய ணத்தின் போது அந்நாட்டில் கண்டேன்; விசாரிக்கையில் அவர்களும் கேரளத்தின் ஆசிரியர்களே!” என்ற ராம்நாத் கோவிந்த், “கேரள மக்கள் தங்களின் கல்வியையும், அறிவையும் நம் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்த விரும்புகின்றனர்” “கேரளநிர்வாகிகளின் நேர்மையைப் பாராட்டு கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

கேரளத்தில் வெள்ளியன்று தகவல் தொழில்நுட்ப நகர துவக்கவிழாவிலும் சனிக்கிழமை உயர்நீதிமன்ற வைரவிழா விலும் அவர் பங்கேற்றார்.

கேரள மாநிலத்தின் கல்வி,சுகாதாரத்துறைகள் படுமோசமாக இருப்பதாக பாஜக தலைவர் களான அமித் ஷா , ஆதித்யநாத் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கடுமையாக விமர்சித் திருந்தனர். 
இந்நிலையில், அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளத்தை மிகவும் புகழ்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியிருப்பது, பாஜக-வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

=====================================================================================================================================
ன்று,
அக்டொபர் -29.


  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து  "சர்வதேச செஞ்சிலுவை சங்கம்" அமைத்தனர்(1863)
  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • கவிஞர்  வாலி பிறந்த தினம் (1931)
  • கல்கியின் "பொன்னியின் செல்வன்" தொடர் வெளிவர ஆரம்பித்தது(1950)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
=======================================================================================
 கவிஞர்  வாலி
தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர்.   அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.   இவர் இயற்பெயர் ரங்கராஜன். 
 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.  இவர் சிவாஜி, எம் ஜி ஆர் காலம் தொடங்கி தற்போதைய கதாநாயகர்கள் நடித்த படங்கள் வரை பல தலைமுறையாக புகழ் பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர்.
1958ஆம் வருடம் அழகர்மலைக்கள்ளன் என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதினார்.   ஆனாலும், 1963ஆம் வருடம் வெளியான கற்பகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் புகழ் பெற ஆரம்பித்தார்.    எம் ஜி ஆரின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து எம் ஜி ஆரின் கொள்கைப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.   இவரின் பல பாடல்கள் அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கண்ணதாசன் பாடல்கள் என்றே பலரும் கருதினர்.    எம் ஜி ஆருக்கு மட்டும் இன்றி அப்போது புகழ் பெற்ற கதாநாயகனான சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதி உள்ளார்.
அன்று தொடங்கிய அவர் கலைப்பயணம் பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்ந்தது.   அவர் பாடல்களில் தாயைப் புகழ்ந்து எழுதிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்னும் பாடல் இன்றைய தலைமுறையினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.  அவர் பல ஜனரஞ்சகப் பாடல்களையும் எழுதி அதனால் பல சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறார். எளிமையை விரும்பும் வாலி எப்போதும்  நூலாடையாக இருந்தால் வெள்ளையும், பட்டாக இருந்தாலும் சந்தன நிறமும் விரும்பி உடுத்துவார்.
நடிப்புத் துறையிலும், இவர் கால் பதித்துள்ளார்.   பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரான கையளவு மனசு தொடரில் இவர் நடிப்பு பெரும் புகழைப் பெற்றுத்ததந்தது.   அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் முதலிய 15 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.  இவர் ரமணதிலகம் என்பவரை காதல் மணம் புரிந்துள்ளார்.   நடிகைகள் பத்மினி, ஈ வி சரோஜா ஆகியோருடன் நடனம் பயின்றுக் கொண்டிருந்த இவரை மணம் செய்ய பத்மினியும் ஈ வி சரோஜாவும் மிகவும் உதவி உள்ளனர்.
பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள இவர் இயக்கிய ஒரே படம் வடைமாலை ஆகும்.   எம் ஜி ஆர் மட்டுமின்றி கருணாநிதியுடனும் இவருக்கு நட்பு இருந்தது.   பல விருதுகளைப் பெற்றுள்ள வாலி ஆன்மீக நாட்டம் உடையவர்.  முருக பக்தர்.  ஆனால் பெரியாரை புகழ்ந்து வாலி எழுதிய ஒரு பாடலுக்கு பெரியாரால் பாராட்டுப் பெற்றுள்ளார்.    விஸ்வநாதன் – ராம மூர்த்தி தொடங்கி இன்றைய ஏ ஆர் ரகுமான் வரை பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் விருப்பக் கவிஞர் வாலி ஆவார்.  
 வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் காவியத்தலைவன் .
இவர் தனது 82ஆம் வயதில் 2013ஆம் ஆண்டு ஜூலை மதம் 18ஆம் நாள் மரணம் அடைந்தார்.  சுவாசக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.  இவருடைய மனைவி இவருக்கு முன்பே 2009ஆம் வருடம் இறந்து விட்டார்.  இவருக்கு ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.   அவர் மூச்சுக் காற்று மறைந்தாலும் அவருடைய பாடல்கள் என்றும் மறையாமல் அமரத்துவம் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?