மூன்று காரணங்கள்தான்...,

குஜராத் சட்டமன்றத் தேர்தல் களம் நாடு முழுதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 
உ.பி. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அமித்ஷா குஜராத்தில் தமது இலக்கு 182ல் 150 தொகுதிகள் என கர்ஜித்த பொழுது, இது சாத்தியமல்ல என எவரும் எதிர்க் குரல் எழுப்பவில்லை. ஏனெனில் இடதுசாரிகள் பலவீனமாக உள்ள குஜராத்தில் காங்கிரசும் வலுவிழந்து இருந்தது.
குஜராத்தில் 150 தொகுதிகள் வெல்வது பா.ஜ.க.வுக்கு சாத்தியமே எனும் கருத்துதான் பொதுவாக நிலவியது. 
ஆனால் நான்கு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக பல கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

தாம் பெரும்பான்மை பெறுவோமா எனும் கவலை பா.ஜ.க.தலைவர்களுக்கே தோன்றியுள்ளது.
குஜராத்தில் பா.ஜ.க. கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இதில் 2001ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி முதல்வராக இருந்தார். 
2001ஆம் ஆண்டு பா.ஜ.க. மத்திய தலைமையால் மோடி முதல்வராக நியமிக்கப்பட்ட பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லை. 
தான் வெற்றி பெற பாதுகாப்பான தொகுதித் தேடலின் பின்விளைவாகவே குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொல்லப்பட்டதாக பாண்டியாவின் தந்தையும் மனைவியும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே கோத்ரா நிகழ்வும் அதனைத் தொடர்ந்து உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய குஜராத் கலவரங்களும் அரங்கேறின. 
இந்தியா முழுதும் பா.ஜ.க.வுக்கு அவப்பெயர் உருவானாலும் குஜராத்திற்குள் பா.ஜ.க. இந்துத்துவா அணி திரட்டலுக்கு உதவியது என்பது கசப்பான உண்மை.
இதற்கு முக்கிய காரணம் குஜராத்தில் நிலவிய வினோத சமூக நிலைமை!. இடதுசாரி அமைப்புகளோ அல்லது சமூக சீர்திருத்த இயக்கங்களோ குஜராத்தில் வலுவாக காலூன்றவில்லை. 
இத்தகைய சூழல் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவதற்கு சாதகமான நிலையை உருவாக்கியது. 1980களில் தலித் மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் 1990ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் வலுவாக மேல்சாதி மக்களை திரட்டியதில் ஆர்.எஸ்.எஸ். தீவிரம் காட்டியது.
இதன் விளைவாக பட்டேல் சமூகம் உட்பட முற்படுத்தப்பட்ட பிரிவினர் பா.ஜ.க.வின் வலுவான வாக்கு வங்கியாக மாறினர். பின்னர் இந்துத்துவா அமைப்புகள் திட்டமிட்டு மலைவாழ் மக்களையும் பின்னர் கணிசமான பிற்படுத்தப்பட்ட மக்களையும் தங்கள் பக்கம் திரட்டுவதில் வெற்றி பெற்றனர். 
இதன் விளைவாக இந்து சமூகத்தின் பெரும்பாலான பிரிவினரை இசுலாமியர்களுக்கு எதிராக அணி திரட்டுவதில் இந்துத்துவ சக்திகள் வென்றன. இந்த சாதகமான களம்தான் குஜராத் இனப்படுகொலை காட்டுத்தீ போல் பரவிட வழி வகுத்தது. 
இதனை மோடி பயன்படுத்திக் கொண்டார். 2002 சட்டமன்றத் தேர்தல்களில் மோடியின் வெற்றி பா.ஜ.க.விற்குள் அவரை வலுவான தலைவராக நிலைநாட்டியது.

இந்துத்துவ மதவெறியுடன் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மோடி அமலாக்கினார். அதுதான் ஏழைகளுக்கு துன்பங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதீத கொள்ளை லாபத்தையும் அளித்த “குஜராத் மாடல்” ஆகும். 
இந்திய அரசியலில் புதியதாக மத வெறியும் நவீன தாராளமய கொள்கைகளும் கை கோர்த்தன. இந்த நச்சுக் கூட்டணியின் பிரதிநிதியாக மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். மதச்சார்பின்மையை இந்தியப் பெரு முதலாளிகள் கை கழுவிய காலமும் இதுதான்! 
இதன் இன்னொரு பின்விளைவாக குஜராத் உட்பட சில பகுதிகளில் சிறுபான்மை தீவிரவாதம் தலைதூக்கியது.
இத்தகைய சூழல்தான் 2007 மற்றும் 2012 குஜராத் சட்டமன்ற தேர்தல்களிலும் மோடி வென்றிட பயன்பட்டது.
குஜராத்தின் இந்த கேடு கெட்ட மாடலை ‘மோடியின் வளர்ச்சிப் பாதை’ என முன்வைத்து இந்தியா முழுதும் பொய்யான மாயை உருவாக்கப்பட்டது. 
2014ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசியோடு மோடி பிரதமர் வேட்பாளர் ஆனார். காங்கிரசின் தொடர் ஊழல்கள் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக மக்களின் துன்பங்கள் அதிகரித்ததால் மோடி 31% வாக்குகள் மட்டுமே பெற்று பிரதமர் பதவியில் அமர முடிந்தது. 
நவீன தாராளமய மயக்கத்தை மக்களிடையே உருவாக்கினால் அவர்கள் மதவெறி குறித்தோ அல்லது சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்படுவது குறித்தோ கவலைப்படமாட்டார்கள் எனும் ஆபத்தான புதிய சூழல் உருவானது.
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தில்லி, பீகார், கேரளா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் தோல்வி கண்டாலும் மற்ற தேர்தல்களில் பா.ஜ.க. வென்றது. 
எங்கு சட்டப்படி வெல்ல முடியவில்லையோ அங்கு – அதாவது, கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் சட்டம் வளைக்கப்பட்டது. 
பா.ஜ.க.வின் உ.பி. சட்டமன்ற வெற்றி மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. காஷ்மீர் தலைவர் உமர் அப்துல்லா “2019 தேர்தலை வெல்ல முடியாது. எனவே எதிர்கட்சிகள் 2024 தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறினார். 
மோடி தோற்கடிக்க முடியாத சக்தியாக கட்டமைக்கப்பட்டார். இந்தப் பின்னணியில்தான் குஜராத் தேர்தலில் தனது இலக்கு 150 தொகுதிகள் என அமித்ஷா கூறிய பொழுது எவரும் அதை மறுக்கத் துணியவில்லை.
ஆனால் இன்று குஜராத் களம் மாறுபட்ட செய்திகளைக் கூறுகிறது.
குஜராத் மக்களின் சமூகப் பிரிவுகள்
1.இந்துக்கள்- 88.6%
2.இசுலாமியர்கள்- 9.86%
3.சமணர்கள்- 1%
4.கிறித்துவர்கள்- 0.5%
5.சமயத்தவர் என அரசால் வகைப்படுத்தப்பட்டவர்களில்
6.முற்படுத்தப்பட்ட பிரிவினர்- 22% (பட்டேல்கள்-15% உட்பட)
7.பிற்படுத்தப்பட்ட பிரிவினர்- 44%
8.பழங்குடியின மக்கள்- 15%
9.தலித் மக்கள்- 7.6%
அனைத்து பிரிவுகளிலும் கணிசமான பகுதியினர் ஏதாவது ஒரு வகையில் பா.ஜ.க. மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்கு சமூகக் காரணங்களும் உண்டு. 
பொருளாதாரக் காரணங்களும் உண்டு. இதுவரை பா.ஜ.க.வின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருந்த பட்டேல் இனத்தவரிடையே கடும் அதிருப்தி தோன்றியுள்ளது. 
இதன் வெளிப்பாடுதான் ஹர்திக் பட்டேல் தலைமையில் வெடித்த போராட்டங்கள்.
பட்டேல் இனத்தவர் பெரும்பாலும் சிறு வணிகர்கள். மோடியின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் இவர்களை கடுமையாக பாதித்தது. எனவே இவர்கள் கல்வியில் கவனத்தைச் செலுத்தினர். ஆனால் உயர் கல்வியில் இவர்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை. 
எனவே இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் இறங்கினர். இவர்களது குரல் இட ஒதுக்கீடு கோட்பாடுக்கு எதிரானதாகவும் இருந்தது. எனினும் பா.ஜ.க. இவர்களின் போராட்டத்தை நசுக்க முற்பட்டதால் இவர்களில் ஒரு பகுதியினர் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 
ஹர்திக் பட்டேலை எதிர்க்க முடியாத பா.ஜ.க.வினர் அவர் தனது பெண் நண்பருடன் இருந்த ஒரு காணொளியை வெளியிடும் அளவுக்கு கீழ்த்தரமாக செயல்பட்டனர்.
 இது பா.ஜ.க.வின் தோல்வி பயத்தை வெளிப்படுத்தியது.
பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையாக வெகுண்டெழுந்த இன்னொரு பிரிவினர் தலித் மக்கள் ஆவர். உனா எனும் இடத்தில் சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு பசுவின் தோலை உரித்ததற்காக மூன்று தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. 
ஜிக்னேஷ் மேவானி எனும் இளம் வழக்கறிஞர் தலித் மக்களின் தலைவராக உருவெடுத்தார். இவர் தலைமையில் தலித் மக்களின் போராட்டம் குஜராத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 இதன் விளைவாக தலித் மக்களில் பெரும்பாலானோர் பா.ஜ.க.வுக்கு எதிரான மனோ நிலையில் உள்ளனர்.
மேவானியை காங்கிரசில் இணையவைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் மேவானி மறுத்துவிட்டார். வட்கம் எனும் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 
காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் காங்கிரஸ் அதிருப்தியாளர்களை பா.ஜ.க. வளைப்பதாலும் மேவானி உள்ளூர்வாசி அல்ல என்பதாலும் மேவானிக்கு எதிராக உள்ளூர் தலித் மூன்று பேர் போட்டியிடுவதாலும் இவரின் வெற்றி நிச்சயமற்றதாக உள்ளது என சில பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
இதே கால கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்டுவதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்லேஷ் தாக்கோர் எனும் இன்னொரு இளம் சமூக ஆர்வலர்.
 முதலில் இவர் “குஜராத் சத்திரிய தாக்கோர் சேனா” எனும் அமைப்பை உருவாக்கி தமது இனத்தவர் மதுவுக்கு அடிமையாவதை எதிர்த்து களம் கண்டார். பட்டேல்கள் இட ஒதுக்கீடுக்கு எதிராக குரல் உயர்த்திய பொழுது பிற்படுத்தப்பட்டோர்- தலித்- பழங்குடியின மக்கள் முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினார். 
இவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
குஜராத்தில் பழங்குடியின மக்கள் 15% உள்ளனர். இவர்களிடையே வலுவான வனவாசி கல்யாண் எனும் அமைப்புகளை ஆர்.எஸ். எஸ். உருவாக்கியுள்ளது. 
இதன் தாக்கத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. இசுலாமியர்களுக்கு எதிராக இவர்களையும் திரட்டுவதில் இந்துத்துவா சக்திகள் வெற்றி பெற்றன. எனினும் இவர்களிடையேயும் பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்து நிலவுகிறது என்பதே இன்றைய நிலைமை.
சுமார் 10% மக்கள் தொகை உள்ள இசுலாமியர்களின் நிலைமை குஜராத்தில் மிகவும் வேதனையானது. கலவரங்களில் தமது உடமைகளை இழந்து மிகவும் பின்தங்கிய சேரிப்பகுதிகளில்தான் இசுலாமியர்கள் வாழ்கின்றனர். எவ்வளவு செல்வம் இருந்தாலும் எந்த ஒரு இசுலாமியரும் நகரத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு சிறு வீடு கூட வாங்க முடியாது. 
இசுலாமியர்களுக்கு காங்கிரசின் மீதும் கடும் கோபம் உள்ளது. எனினும் இவர்களுக்கு காங்கிரசை ஆதரிப்பது தவிர வேறு வழியில்லை. இந்தத் தேர்தலில் தான் பா.ஜ.க. தமக்கு எதிராக மதவெறியை தூண்ட முடியவில்லை என்பது இவர்களின் மகிழ்ச்சி. 
ஆம்! கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக இசுலாமியர்களுக்கு எதிரான வெறி கிளப்பும் பா.ஜ.க.வின் எந்த உரையும் எடுபடவில்லை.
“மதத்தின் பெயரால் எங்களுக்கு எதிராக அனைத்தும் செய்தாகி விட்டது. இனி என்ன மீதம் உள்ளது?” என்கின்றனர் இவர்கள்!
இத்தகைய சமூகச் சூழலின் பின்னணியில் குஜராத்தில் ஏற்பட்ட சில பொருளாதார விளைவுகள் பா.ஜ.க.மீது அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது. ஒன்று விவசாய நெருக்கடி! தேசம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது போல குஜராத்திலும் கடன் சுமை, விளை பொருட்களுக்கு நியாய விலை கிடைக்காதது ஆகியவற்றால் விவசாயிகள் கோபம் அடைந்துள்ளனர். 
35% விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. 2013-2015 ஆண்டுகளில் மட்டும் 1483 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 
“ஜமீன் பச்சாவ் அந்தோலன்” (நிலப் பாதுகாப்பு இயக்கம்) எனும் அமைப்பின் மூலம் ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரியின் தாக்கத்தால் குஜராத் சிறு வணிகர்கள் அதீத அதிருப்தியில் உள்ளனர் எனில் மிகை அல்ல! சூரத் நகரில் மட்டும் 5 இலட்சம் வணிகர்களின் பேரணி நடந்தது. 
ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போராட்டம் இது! 
குஜராத் தேர்தலை மனதில் கொண்டே துணிகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. ஒரு பகுதி வணிகர்களின் கோபம் குறைந்திருந்தாலும் கணிசமான பகுதியினரிடம் இன்னும் அதிருப்தி உள்ளது. வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. 
பாஜக முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலின் மகள் மற்றும் அமித்ஷா மகனின் ஊழலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. 
அமித்ஷா மற்றும் ஆனந்தி பென் பட்டேல் இடையே உள்ள மோதல்கள்தான் இந்த ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன என்பதும் உண்மை.
கோஷ்டிமோதல்கள் காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் முழுமையாக களத்தில் இறங்கவில்லை எனவும் சில செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க.விற்கு எதிராக அவர்களது கட்சியினரே 50க்கும் அதிகமான தொகுதிகளில் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். 
இத்தகைய சூழல் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது. எனினும் பா.ஜ.க. நிச்சயமாக தோற்கும் எனும் முடிவுக்கு வருவது பொருத்தமானது அல்ல! 
மோடியின் செல்வாக்கு குஜராத்தில் மிக கணிசமாக உள்ளது. 
இந்துத்துவ ஸ்தாபன ஊடுருவல் மிகவும் ஆழமானது. குஜராத்தில் தோல்வி ஏற்பட்டால் பா.ஜ.க.விற்குள் தாம் தனிமைப்படுவோம் என்பது மோடி- அமித்ஷா கூட்டணிக்கு நன்றாகத் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ். களத்தில் தீவிரமாக இறங்கினால் நிலைமை மாறும். தமது செல்லப்பிள்ளையான மோடிக்கு சரிவு ஏற்படுவதை கார்ப்பரேட்டுகள் அனுமதிக்கமாட்டார்கள். 
சில கருத்து கணிப்புகள் பா.ஜ.க. தோற்கும் என்கின்றன. சில கணிப்புகள் பா.ஜ.க. வெல்லும் என்கின்றன. அதிருப்தியை முழுவதுமாக அறுவடை செய்ய போதுமான ஸ்தாபன பலம் காங்கிரசிடம் இல்லை எனும் கருத்தை பல செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி பா.ஜ.கவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்தாலும் எந்த ஒரு இடத்திலும் நவீன தாராளமய கொள்கைகளை விமர்சிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
குஜராத் மாடலுக்கு அடிப்படை நவீன தாராளமய கொள்கைகள்தான் என்பதை தோலுரித்துக் காட்ட காங்கிரஸ் தயாராக இல்லை. 
பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸ் எந்த விதத்திலும் பா.ஜ.க.விடமிருந்து மாறுபடவில்லை என்பதை இது மீண்டும் பறைசாற்றுகிறது.
ஒரு உண்மை எவராலும் மறுக்க முடியாது. குஜராத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. முதல் தடவையாக நெருக்கடியை சந்திக்கிறது. அதிருப்தி வலுவாக உள்ளது. 
இதற்கு பின்னரும் பா.ஜ.க. வென்றால் அதற்கு மூன்று காரணங்கள்தான் இருக்க இயலும். 
ஒன்று இந்துத்துவா சக்திகளின் ஸ்தாபன பலம். 
இரண்டாவது கார்ப்பரேட்டுகளின் தலையீடு! 
மூன்றாவது காங்கிரசின் திறமையின்மை!
=======================================================================================
ன்று,
டிசம்பர்-10.
உ.ராஜாஜி


  • உலக  மனித உரிமைகள் தினம்
  • தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
  • இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
  • நோபல் பரிசு வழங்கப்படும் தினம், ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)
=======================================================================================
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக, உயிர்காக்கும் அரிய வகை மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அரிய வகை மரபியல் நோய்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
 குறிப்பாக சிப்ரின், வெங்கலெக்ஸ்டா, அட்செட்ரிஸ் போன்ற அந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த பல லட்ச ரூபாயை நோயாளிகள் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியால் இந்த மருந்துகளுக்கு கூடுதலாக 12 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் அந்த அரிய வகை மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?