ரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்

சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் ஊடுருவி, தவறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலமாக தங்களை அரசிற்கு ஆதரவாக நிறுவிக் கொண்டுள்ளவர்களுக்கு எதிராக, அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளில் இருக்கும் போலித் தன்மையைத் தோலுரித்துக் காட்டி உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையதளம் ஆல்ட் நியூஸ் (https://www.altnews.in/).
பத்திரிகைகளில் வெளிவராத அல்லது அவற்றால் முக்கியத்துவம் தரப்படாத சாதி சார்ந்த வன்முறைகள், மதரீதியான பாகுபாடுகள், தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும் ஆல்ட் நியூஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் போலியான செய்திகளப் பரப்புவதற்கான ஊற்றுக் கண்ணாகச் செயல்பட்டு வரும் இக்காலகட்டத்தில் ஆல்ட் நியூஸின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
போட்டோஷாப் அரசின் பல்வேறு பொய்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த இணையதளத்தின் மீது அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் கோபம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல.

அண்மையில் ஆல்ட் நியூஸ் இணையதளத்திற்கு எதிராக அர்னாப் தன்னுடைய வேறொரு நிகழ்ச்சியை வளைத்து நடத்தியது குறித்து ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இங்கே.

ரிபப்ளிக் டி.வி. ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் தொடர்ந்து போலியான செய்திகளை வெளியிடும் போஸ்ட் கார்டு நியூஸ் என்ற இணையதளத்தை நிறுவிய மகேஷ் ஹெக்டேவை கைது செய்தது பற்றி விவாதிக்கப்பட்டது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஆல்ட் நியூஸ் பற்றிப் பேசுகின்ற வரையிலும் அந்த விவாதம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் வேடிக்கையாகவே இருந்தன.

கலந்து கொண்டவர்களில் எவரையும் பேச விடாது அர்னாப் கோஸ்வாமி மட்டுமே இடைவிடாது உச்சஸ்தாயில் பேசிக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்திற்கு அவருடைய பேச்சு அடங்கவே இல்லை.

உண்மையில் விபத்தில் காயமடைந்த ஜெயின் சாமியார் ஒருவர் முஸ்லீம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்பதாக போலியான செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்காக மகேஷ் ஹெக்டே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த செய்தி.

முஸ்லீம் இளைஞர்கள் தாக்கியதாக வெளியான அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய போது, ஆல்ட் நியூஸ் அந்தச் செய்தி போலியானது என்றும் தவறான கெட்ட நோக்கத்துடன் அது வெளியிடப்பட்டது என்றும் கண்டறிந்து அதன் பின்னால் இருந்த உண்மையை வெளிக் கொணர்ந்தது. அவ்வாறு செய்ததன் மூலம் ஆல்ட் நியூஸிற்கு இருந்த அரசியல் சமநிலையை கேள்விக்குள்ளாவதற்கு அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகியவற்றால் மட்டுமே முடியும்.
அப்பாடி!

தன்னிடம் இருந்த மைக்கை முழு சப்தத்துடன் வைத்திருந்த அர்னாப் அந்தப் பெயரைக் கேட்டவுடனே, “நீங்கள் ஆல்ட் நியூஸ் பற்றி சொன்னீர்கள்” என்று உரக்க கத்தினார்.
அதற்குப் பிறகு ‘விவாதம்’ என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் யாராவது பேச முயன்றால், அவர்களை இடைமறித்து “ஆல்ட் நியூஸ் அரசியல் சமநிலையோடு செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அனைவரிடமும் நான் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.”
என்று அவர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.

போஸ்ட் கார்டு வெளியிட்ட அந்த போலியான செய்தி பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி திடீரென்று ஆல்ட் நியூஸ் பற்றியதாக மாறியதைத்தான் அவர்கள் அரசியல் சமநிலை என்று கருதினார்கள் போலும்.
அரசியல் சமநிலையின் அதிகார மையமாக தன்னைக் கருதுகின்ற அர்னாப், துரதிர்ஷ்டவசமாக அங்கே அந்த நிகழ்ச்சிக்குள் வந்து சிக்கிக் கொண்டவர்களிடம் தன்னுடைய உரையை இடைவிடாது நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.
இங்கே இணைக்கப்ப்ட்டிருக்கும் வீடியோ அர்னாப் ஆல்ட் நியூஸ் பற்றி பேசியவற்றைக் காட்டுகிறது. அந்த முழு நிகழ்ச்சியையும் இங்கே காணலாம் (http://www.republicworld.com/the-debate/306/626/is-the-arrest-about-fake-news-or-one-involving-political-ideologies).


ஜமா மசூதி மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பதாக போஸ்ட் கார்டு வெளியிட்ட போலிக் கதையை அடிப்படையாகக் கொண்டு, ​​ரிபப்ளிக் டிவி கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்திய போது தன்னுடைய விரல்களைச் சுட்டுக் கொண்டது.

அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று ஆல்ட் நியூஸ் தெளிவுபடுத்திய பிறகு, கோபமடைந்த அந்தச் சேனல் பின்னர் அந்த வீடியோவை முழுமையாக நீக்க வேண்டி வந்தது. ஆனால் அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டதால், அர்னாப் ஒருவேளை அந்த இக்கட்டான நிலையை மறந்திருக்கலாம் என்பதால், நாம் அர்னாபை இப்போது குற்றம் சொல்ல முடியாது.

ஆல்ட் நியூஸ் எப்போதும் போல போலிச் செய்திகளைத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இதே போன்று சில முறை ரிபப்ளிக் டிவியோடு மோதல்களும் நடந்திருக்கின்றன. எனவே “போஸ்ட்கார்டு ஒரு புறம் சாய்ந்து கொண்டிருக்கிறது என்றால், ஆல்ட் நியூஸ் மறுபுறம் சாய்ந்து இருக்கிறது” என்று கூறி போஸ்ட் கார்ட் நியூஸ், ஆல்ட் நியூஸ் ஆகியவற்றிற்கிடையே நகைச்சுவை மிகுந்ததொரு சமன்பாட்டை அர்னாப் எடுப்பதன் மூலமாக அவரிடம் இருக்கும் எரிச்சல்களை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

“இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சிகளின் பக்கமாகச் சாய்ந்து அவர்களை ஆதரிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கச் சார்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
உண்மைகளைச் சரி பார்க்கும் இணையதளங்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை” என்று ஒருபக்க மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அவர் முழங்கினார்.
நாங்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்தபோது அதைப் பார்த்து சிரித்த எங்களுடைய வாசகர்கள், அர்னாபின் கத்தலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அர்னாபிற்குப் நாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று அவர்கள் எங்களை அறிவுறுத்தினார்கள்.

 அவருடைய வாதத்தில் அவர் முக்கியமாகக் கூறுவதைத் தேர்ந்தெடுத்து அது உண்மைதானா என்பதைச் சரிபார்க்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
“உங்கள் அனைத்து கட்டுரைகளும், உண்மை பற்றிய உங்கள் அனைத்துச் சோதனைகளும் ஒரே பக்கத்தில் இருப்பவையாக மட்டுமே உள்ளன … .. உண்மையைச் சரிபார்க்கும் இணையதளங்கள் ஒரே அரசியல் பக்கம் நின்று அவர்களுக்காக வாதாடுபவையாக இருக்கக்கூடாது.

எப்போதுமே அப்படி இருக்கவில்லை என்றாலும், அவ்வப்போதாவது அவ்வாறு இருப்பதற்கு முயல வேண்டும். மற்ற பக்கமிருந்து வருகின்ற செய்திகளையும் திருத்தி வெளியிட வேண்டும். தொடர்ந்து காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி அல்லது இடதுசாரிகளுக்காக வாதிட முயலக் கூடாது.
அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களுடைய நற்சான்றுகள் கேள்விக்குள்ளாக்கப்படும்” என்று அர்னாப் கூறியிருந்தார்.

மற்றொரு சேனல் வெளியிட்ட தகவலை ட்வீட் செய்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவரான அமித் மாளவியாவைப் பாதுகாப்பதற்காக 24 மணி நேரத்திற்குள்ளாக மூன்று கட்டுரைகளை எழுதிய அர்னாப் வைக்கின்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

உண்மைகளோடு அர்னாப்பிற்கும், அவருடைய ரிபப்ளிக் டிவிக்கும் உள்ள தொடர்புகளை நினைவுபடுத்திக் கொண்ட நாங்கள், அர்னாபின் கத்தல்கள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்பதற்கான பத்து சமீபத்திய உதாரணங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.


1. மோடியின் கல்வித் தகுதி குறித்து சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் உலா வருகின்றன.
2. போலிச் செய்திகளை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் ட்விட்டர் கைப்பிடி கணிப்புகளை நடத்துகிறது.
3. பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் பின்னடைவு குறித்து தேசிய ஹெரால்டு பத்திரிகை ட்விட்டர் கணிப்பு
4. உண்மைக்கான சோதனை: கர்நாடகாவில் 7 லட்சம் கிராமங்கள் உள்ளன என்று மோடி கூறினாரா?
5. உண்மைக்கான சோதனை: இந்தியாவில் சொத்துக்களில் சமத்துவமின்மை குறித்த ராகுல் காந்தியின் கூற்று
6. நீதிபதி லோயாவின் மகனுடைய செய்தியாளர் கூட்டத்தை அமித் ஷா ஏற்பாடு செய்தார் என்று சமூக ஊடகங்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா?
7. உண்மைக்கான சோதனை: கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் நாட்கள் தொடர்பாக அமித் மாளவியாதான் முதலில் ட்வீட் செய்தாரா?
8. பாஜக தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் அமித் மாளவியா பற்றி டைம்ஸ் நவ் தவறான தகவல்களைப் பரப்புகிறது
9. பாஜக எம்.பி விடுத்த அறிக்கையின் காரணமாக சோலார் பேனல்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் சேனல்கள் போலிச் செய்திகளைப் பரப்பின.
10. நரேந்திர மோடி உலகின் இரண்டாவது மிக ஊழல் நிறைந்த பிரதமராக இருக்கிறார் என்பதாக போலிச் செய்தி ஒன்று கூறுகிறது.

அன்பு அர்னாப், நீங்கள் ஆல்ட் நியூஸில் வெளியாகின்ற அனைத்து உண்மையறியும் செய்திகளும் ஒருபக்கம் சார்ந்து இருப்பதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்து, “அவ்வப்போது” மற்ற பக்கத்திலிருந்து வருகின்ற செய்திகளையும் நாங்கள் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுடைய கூற்று உண்மை இல்லை என்பதற்காக நாங்கள் வெளியிட்ட பத்து செய்திகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இப்போது இங்கே உங்களுக்கான கேள்வி: மத்திய அரசிற்காக வாதாடவில்லை என்பதற்கு இது போன்று சமமான எண்ணிக்கையிலான நிகழ்வுகளை நீங்கள் எங்களுக்கு காட்ட முடியுமா?
எதிர்க்கட்சித் தலைவர்கள், தாராளவாதிகள் மற்றும் எதிர்க் குரல்களை நீங்கள் கேள்வி கேட்பதைப் போல, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகின்ற வகையில் இருக்கும் உங்களுடைய 10 ஹேஸ்டேக்குகள், 10 கருத்துக்கணிப்புகள், 10 வீடியோக்களை எங்களுக்கு காட்டுங்கள். ஏனென்றால், ஆல்ட் நியூஸிற்கு நீங்கள் என்ன பரிந்துரைத்தீர்களோ, அவை உங்களுக்கும் பொருந்துவதாகவே இருக்கும்.

இங்கே ஆல்ட் நியூஸிலிருந்து உங்களுக்கு ஒரு செய்தி (உங்கள் வார்த்தைகளையே மாற்றித் தந்திருக்கிறோம்): தேசிய செய்திச் சேனல்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும், எப்போதுமே அப்படி இருக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகள், தாராளவாதிகள், ஜேஎன்யூ மாணவர்களுக்குப் பதிலாக அவ்வப்போதாவது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் வகையில் இருப்பதற்கு முயல வேண்டும்.
தொடர்ந்து பாஜகவிற்காக வாதாடுபவராக நீங்கள் இருக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்களுடைய நற்சான்றுகள் கேள்விக்குள்ளாகும்.

நன்றி: https://www.altnews.in/alt-news-responds-to-arnab-goswamis-hilarious-rant/

தமிழில்: முனைவர்.தா சந்திரகுரு, விருதுநகர்.
=========================================================================================
ன்று,
ஏப்ரல்-16.


  • செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)
  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
  • உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
  • சிரியா விடுதலை (?)தினம்(1946)
========================================================================================

சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.

சிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள்.
சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டபின், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சும் பிரிட்டனும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மூன்று நாடுகள் மட்டுமே சிரியா மீது அண்மை ஆண்டுகளில் தாக்குதல் நடத்தியது என்று கூறிவிடமுடியாது.
சிரியா மீது தாக்குதல் தொடுத்த நாடுகளின் நீண்ட பட்டியலை பார்க்கலாம்.


ரஷ்யா
சோவியத் ஒன்றிய சகாப்தத்தில் இருந்தே, ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.
சிரியாவின் மீதான ரஷ்யாவின் செல்வாக்கை தற்போதும் காணமுடிகிறது என்பதோடு, ஆயுதங்கள் மற்றும் பிற தளாவடங்களின் உதவியுடன் சிரியாவின் பஷர் அல்-ஆசாத் ஆட்சியை காப்பாற்றுவதாக விளாடிமிர் புதினின் அரசு வாக்குறுதி வழங்கியிருக்கிறது.

சிரியாவின் நிலத்தில் 2015 செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா காலை ஊன்றிய பிறகு, நிலைமைகள் அதிபர் பஷர் அல்-ஆசாதுக்கு சாதகமாக மாறின.
சிரியாவின் எதிரிகளை அடக்குவதோடு, ஐ.எஸ் தீவிரவாதக் குழுக்களின் புகலிடங்களிலும் குண்டுவீசி அவர்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வதாக கூறுகிறது ரஷ்யா.
ஆனால் ரஷ்யாவின் கூற்றுக்களை கண்டனம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு ஆணையம், ரஷ்யாவின் தாக்குதல்களில் பலியானவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே என்று விமர்சிக்கிறது.


அமெரிக்கா
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியதில் இருந்து, அங்குள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.
சிரிய அரசு 2013ஆம் ஆண்டில் ரசாயனத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா, சிரியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
2014ல், வளைகுடா பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பல நிலைகளில் 11,000க்கும் அதிகமான தாக்குதல்களைத் நடத்தின.
சிரியா நாட்டு பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு பிறகு, 2017இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
2018 ஏப்ரல் மாதத்தில், டூமா நகரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் எழுப்பப்பட்ட பிறகு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தாக்குதலும் தொடங்கிவிட்டது.



பிரிட்டன்
2015 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் மறைவிடங்கள் மீது பிரிட்டிஷ் விமானப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
2013ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதான சந்தேகங்கள் வலுத்தபோது, ஆசாத்தின் ராணுவ நிலைகளை தாக்குவது பற்றி பிரிட்டன் சிந்தித்தது.
ஆனால் தாக்குதல் நடத்துவது பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெப்டுப்பில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
அண்மையில் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதான சந்தேகம் எழுந்தபோது, இந்த தவறுக்கான தண்டனையில் இருந்து சிரியா அரசு தப்பமுடியாது என்று பிரதமர் தெரீசா மே அறிவித்தார்.
பிரான்ஸ்
2013ஆம் ஆண்டு முதல் சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புக்களுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்கிவருகிறது என்பதோடு, 2015ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் மறைவிடங்களில் விமான தாக்குதல்களிலும் பங்கேற்றுள்ளது.
சிரியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ள பிரான்ஸ், சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து அதன் முடிவு பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.
சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் அரசை பிரான்ஸ் ஆதரிக்கவில்லை

2013ஆம் ஆண்டு சிரியாவின் ராணுவ தளங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்துவது பற்றி பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டபோது, பிரான்ஸ் அரசு அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.
தற்போதைய பிரான்சு அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கிறார்.


கனடா
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினைத் தாக்கும் அமெரிக்கக் கூட்டணியில் கனடாவும் இடம் பெற்றுள்ளது.
2016இல் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு அமைந்தபோது, அமெரிக்க கூட்டணியின் நடவடிக்கைகளில் இருந்து கனடா வெளியேறியது.
சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்களில் கனடா பங்கெடுக்காது என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
ஆஸ்திரேலியா
இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் நிலைகளின்மீது நடந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கெடுத்தது.
ஆஸ்திரேலியா பங்கெடுத்த தாக்குதல் ஒன்றில், 90 சிரியா வீரர்கள் தவறுதலாக கொல்லப்பட்டார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று தவறாக கருதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தவறுக்கு பிரதமர் மால்கம் டர்ன்புல் மன்னிப்பு கோரினார்.

நெதர்லாந்து
2014 செப்டம்பர் மாதத்தில், ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என நெதர்லாந்து முடிவெடுத்தது.
2015 ஆம் ஆண்டு வரை அந்நாடு ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நூற்றுக்கணக்கான விமான தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் F-16 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சிரியாவில் தனது ராணுவம் இருப்பதற்கு நெதர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
2016ஆம் ஆண்டு, சிரியாவிற்கும் இராக்கிற்கும் இடையில் ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்திவரும் போக்குவரத்து வழித்தடத்தின் மீதான தாக்குதலை துரிதப்படுத்த முடிவு செய்தது நெதர்லாந்து.


இரான், ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் விருப்பங்களும் மாறுபட்டவைகளாக இருந்தபோதிலும், அதன் அதிபர்கள் ருஹானி, புதின், எர்துவான் ஆகியோர் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர்
இரான்
இரான் ஒரு ஷியா முஸ்லிம் நாடு என்பதால் சிரியாவின் மீது அதற்கு அதிக ஆர்வம் உள்ளது. சுன்னி முஸ்லிம்களின் ஆதிக்கம் கொண்ட செளதி அரேபியாவின் செல்வாக்கு சிரியாவில் இல்லை.
பஷாரின் சிரியா ராணுவத்திற்கு உதவி செய்வதுடன் அதற்கு தேவையான உபகரணங்களையும், பொருளாதார உதவியையும் வழங்குகிறது இரான்.
அது மட்டுமல்ல, தனது நாட்டில் இருந்தே, சிரியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புகளின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது இரான்.

துருக்கி
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி அரசு தனது இருப்பை அதிகரித்துள்ளது.
சிரியா அதிபர் ஆசாத்தின் ஆட்சியை துருக்கி எதிர்த்த நிலையிலும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராகவும் துருக்கி செயல்படுகிறது.
ஆனால் சிரியாவில் உள்ள குர்து இனத்தினரை வலுப்படுத்த துருக்கி விரும்பவில்லை.
சிரியாவின் அஃப்ரீன் நகரில், YPG என்ற குர்து இன அமைப்புக்கு எதிராக தீவிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி, சிரியாவின் வட பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
செளதி அரேபியா
சிரியாவில் இரானின் செல்வாக்கை எதிர்க்கும் நாடுகளில் செளதி அரேபியா முதன்மையானது.
அதிபர் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் பல கிளர்ச்சி அமைப்புக்களுக்கு செளதி அரேபியா பெரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்குகிறது.
சிரியாவில் உள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு மூலோபாய நுண்ணறிவு தகவல்களை வழங்கும் செளதி அரேபியா, கிளர்ச்சியாளர்களுக்கு தேவையான பிற உதவிகளையும் வழங்குகிறது.
2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ் தளங்களின்மீது எட்டு வான் தாக்குதல்களையும் செளதி அரேபியா மேற்கொண்டது.
சிரியாவில் நடைபெறும் ரசாயன தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தாக்குதலுக்கு செளதி அரசு ஆதரவு அளிக்கிறது.
இஸ்ரேல்
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் தலையிடும் விதமாக, இஸ்ரேலிய போர் விமானம் சிரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது.
சிரியா விவகாரத்தில் இஸ்ரேல் நீண்டகாலமாக நடுநிலை வகித்த போதிலும், இரானின் செல்வாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
சிரியாவில் இரான் தலையிடுவது, லெபனானில் தனது பரம விரோதியான ஹெஜ்புல்லாவை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் நம்புகிறது.
இரான் மற்றும் ஹெஜ்புல்லாவுடன் தொடர்புடைய வாகன அணிகள் செல்லும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிரியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஒரு இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளியது.
சிரியாவின் 12 நிலைகளின் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.
பஹ்ரைன் மற்றும் ஜோர்டன்
இந்த இரு மத்திய கிழக்கு நாடுகளும் சிரியா மீது தக்குதல் நடத்தியுள்ளன.
ஜோர்டன் அரசர் அப்துல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக ஐ.எஸ் அமைப்பு வெளிப்படையாக எச்சரித்தபோது, சிரியாவில் விமானத் தாக்குதல்களில் இணைய முடிவு செய்தது ஜோர்டன்.
ஜோர்டானின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
2014இல், ஜோர்டான் நாட்டு விமானத்தை ஐ.எஸ் சுட்டு வீழ்த்தி, விமானியை கைது செய்தது. பிறகு அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் 2015ஆம் ஆண்டு பஹ்ரைன் இணைந்தது.


சிரியாவில் தலையிடும் பிற நாடுகள்

இந்த 13 நாடுகளைத் தவிர, ஜெர்மனி, நார்வே, லிபியா மற்றும் இராக் போன்ற நாடுகள் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
உலகின் பிற எந்தவொரு நாட்டிலும் நிறுத்தியிருப்பதை விட சிரியாவில் மிக அதிக அளவிலான துருப்புகளை ஜெர்மனி நிறுத்தியுள்ளது. சிரியாவில் 1200 ஜெர்மனி துருப்புக்கள் உள்ளன.
சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் மற்றொரு நாடு நார்வே. சிரியா கிளர்ச்சிப் பிரிவினருக்கு பயிற்சிகளையும் பிற உதவிகளையும் நார்வே வழங்குகிறது.
லிபியாவில் கர்னல் கடாஃபி வீழ்ந்த பிறகு, சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக 2011ஆம் ஆண்டு லிபியா, சிரியாவிற்கு தனது துருப்புக்களை அனுப்பியது.
இராக் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை எதிர்க்கிறது. அதோடு, சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கும் இரானின் விமானங்கள் தனது வான் வழியை பயன்படுத்த அனுமதித்தது. இது அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிரான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?